முதல்வர் Stalin -க்கே இங்கிருந்து திராட்சை போகுது |4 மாதத்தில் 4 லட்சம் லாபம்
விஏஓ வீட்டில் 53 சவரன் தங்கநகைக் கொள்ளை; பைக்கை வைத்து திருடர்களை போலீஸார் மடக்கி பிடித்தது எப்படி?
நெல்லை மாவட்டம் பேட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் அந்தோணி தங்கராஜ். இவர், பழைய பேட்டையில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செங்கோல் மேரி, நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுடன் செங்கோல் மேரியின் தந்தையும் வசித்து வருகிறார்கள். கடந்த 6-ம் தேதி, குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு வெளியூர் சென்றிருந்தனர். அன்றிரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அத்துடன் பீரோவும் உடைகக்ப்பட்டு ரூ.23 லட்சம் மதிப்பிலான 53 சவரன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.
இதுகுறித்து பேட்டை காவல் நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், நெல்லை மாநகர துணை ஆணையர் கீதாவின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் பிலோமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தனிப்படையினர் அந்தோணி தங்கராஜ் வீட்டுப் பகுதியில் உள்ள சி.சி.சி.டி.வி கேமரா பதிவுளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட ரக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வி.ஏ.ஓ வீடு அமைந்துள்ள பகுதிக்கு அடிக்கடி சுற்றுவந்து நோட்டமிட்டுச் செல்வது தெரிய வந்தது.
கொள்ளைச் சம்பவத்தை முடித்துவிட்டு அதே பைக்கில் தப்பிச் சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பைக் குறித்த தகவல்களை சேகரித்தனர். அந்த குறிப்பிட்ட ரக பைக், கடந்த 2023-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 80 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்க போலியான பதிவெண் மூலம் பைக்கை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த குறிப்பிட்ட ரக பைக்கின் உரிமையாளர்களின் விவரங்களை சேகரித்ததில் ஒரு பைக் மட்டும் போலியான பதிவெண்ணுடன் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு சென்றதை அடையாளம் கண்டுபிடித்தனர். இந்த தகவல்களை வைத்து கேரள போலீஸாரின் உதவியுடன் விசாரணை நடத்தியதில் கோழிக்கோடு பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தாமரைச்சேரி பகுதியில் இருந்த சுதீன் என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொல்லம், கரவனூரைச் சேர்ந்த அபுகிராஜ் என்பவரை தேடிச் சென்றனர். அவரது மனைவி வின்சியிடம் விசாரணை நடத்தியதில் கணவன், மனைவி இருவரும் பைக்கில் வலம் வந்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு கேரளாவிற்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. அவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட 23 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாக இருந்த வின்சியின் கணவர் அபுகிராரை தீவிரமாகத் தேடி வந்த நிலையில் நேற்று அவரையும் கைது செய்தனர். அவரிடமிருந்து எஞ்சிய நகைகளையும் கைப்பற்றி வி.ஏ.ஓ வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்தம் 53 சவரன் நகைகளும் கைப்பற்றப்பட்டன. மூவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பிட்ட ரக பைக் மூலம் துப்பு துலக்கி துரிதமாக செயல்பட்டு, கொள்ளையர்களை மடக்கிப் பிடித்த தனிப்படையினரை வி.ஏ.ஓ சங்கத்தினர் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...