விதி மீறி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற உத்தரவு
சிவகங்கை மாவட்டம், செண்பகம்பேட்டை பகுதியில் விதியை மீறி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கையைச் சோ்ந்த இளங்கோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:
சிவகங்கை மாவட்டம், செண்பகம்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடி புதுக்கோட்டை மாவட்டம், லெம்பலக்குடி சுங்கச்சாவடியிலிருந்து 23 கி.மீ.தொலைவுக்குள் அமைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விதியை மீறி அமைக்கப்பட்ட செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்றக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். விசாரணை நடத்திய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தனி நீதிபதி, லெம்பலக்குடி சுங்கச்சாவடியை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டாா்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யவும், செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்றவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், எம்.ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
லெம்பலக்குடி, செண்பகம்பேட்டை ஆகிய 2 பகுதிகளிலும் உள்ள சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை எண் என்ஹெச் 36-இல் வருகின்றன. சுங்கச்சாவடியை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விதிகளுக்கு உள்பட்டு முடிவு செய்ய வேண்டும். லெம்பலக்குடி சுங்கச்சாவடி கடந்த 2011-ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டது. செண்பகம்பேட்டை சுங்கச்சாவடி கடந்த 2017-ஆம் ஆண்டுதான் அமைக்கப்பட்டது. 2-ஆவது அமைக்கப்பட்ட செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியே விதி முறைகளை மீறி அமைக்கப்பட்டது.
எனவே, இந்த வழக்கில் தனி நீதிபதி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.