Kana Kandenadi: "சீரியல்ல நடிக்கணும்னு ஐ.டி வேலையை விட்டுட்டேன்" - 'கனா கண்டேனடி...
"விருப்பமுடன் உறவு கொள்வது குற்றமன்று"- திருமணத்திற்கு முந்தைய உறவு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம்
தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு வாலிபர் போலீஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவர் பணியில் சேருவதற்கு முன்பிருந்தே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது.
அந்தப் பெண்ணுக்கும், அந்த நபருக்கும் இடையே பாலியல் உறவுகள் இருந்துள்ளது. அந்தப் பெண் சம்பந்தப்பட்ட நபர் மீது போலீஸில் புகார் செய்தார். அதன் பிறகு இப்பிரச்னை லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டது. ஆனால் அந்த வாலிபர் குற்றச்செயலில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறி அவரை போலீஸ் அதிகாரி வேலைக்குத் தேர்வு செய்ததை மாநில அரசு ரத்து செய்துவிட்டது.
இதை எதிர்த்து அந்த வாலிபர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது அவருக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது.
வாலிபரின் செயல் அறநெறிக்கு முரணானது என்று கூறி அவரது மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் வேறு வழியில்லாமல் அந்த வாலிபர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இம்மனு நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் மாநில அரசின் உத்தரவை ரத்து செய்து, பாதிக்கப்பட்ட நபர் பணியில் சேருவதற்கான வழியை ஏற்படுத்தி கொடுத்தனர்.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், ''திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவில் ஈடுபட்டது மனுதாரரைப் பணியில் சேர்ப்பதைத் தடுப்பதற்கான காரணமாக அமையாது'' என்று தெளிவுபடுத்தினர்.
அவருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க பாதிக்கப்பட்ட பெண்ணே சாட்சிக் கூண்டில் ஏற வேண்டாம் என்று முடிவு செய்திருந்ததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மேலும், ''திருமணத்திற்கு முந்தைய உறவுகள் குறித்த தற்போதைய சூழலையும், மாறிவரும் காலத்தின் போக்கையும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இத்தகைய உறவுகள் இன்று சாதாரணமாகிவிட்டன. அதோடு, திருமணம் செய்து கொள்ளாத இருவர் பரஸ்பர சம்மதத்துடன் மேற்கொள்ளும் உடலுறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, அதில் ஈடுபடும் நபரின் குணநலன் குறித்து எதிர்மறையான முடிவுக்கு வரக்கூடாது. அவ்வாறு வருவதும் முறையல்ல.
உறவை தடுக்க சட்டம் இல்லை
திருமணமாகாத இருவர் தங்கள் விருப்பப்படி உறவு கொள்வதைத் தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லை. நீண்ட கால உறவுமுறையைப் பொறுத்தவரை, திருமண வாக்குறுதி அளித்து உடல்ரீதியான உறவுக்குத் தூண்டப்பட்டதாகக் கூறி ஒரு தரப்பினர் மற்றொருவர் மீது தொடர்ந்த குற்றவியல் நடவடிக்கைகளை நீதிமன்றம் பலமுறை ரத்து செய்துள்ளது. ஏனெனில், அத்தகைய உறவு செல்லுபடியாகும் ஒப்புதலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது என்ற அனுமானம் அங்கு நிலவுகிறது.
இவ்வழக்கில், மனுதாரர் தனது மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததை உண்மையாகத் தெரிவித்ததோடு, அந்த வழக்கு 'லோக் அதாலத்' (மக்கள் நீதிமன்றம்) மூலம் சுமூகமாகத் தீர்க்கப்பட்டதையும் அதிகாரியிடம் கூறினார். திருமணத்தில் முடிவடையாத ஒரு பரஸ்பர சம்மதத்துடனான உறவில் தான் இருந்ததாகவும், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட பிறகு தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்'' என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இவ்வழக்கில் மாநில அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், எவ்வாறாயினும், போலீஸ்துறை ஒரு ஒழுக்கமான படை என்றும், "ஒருவரின் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளில் ஒரு சிறு சந்தேகம் இருப்பதும் பணி நியமனம் மறுக்கப்படுவதற்கு அடிப்படையாக இருக்கலாம்" என்றும் கூறினார். ஆனால் அதனை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இத்தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.




















.jpeg)

