'இந்த பொண்ணுங்க அவ்வளவு உழைச்சிருக்காங்க!' - உருகும் இந்திய அணியின் பயிற்சியாளர்...
``விழிப்புடன் இருங்கள்; இல்லாவிட்டால் அனகொண்டா வந்துவிடும்" - எச்சரித்த உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிராவில் அடுத்த ஓரிரு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் கமிஷன், தலைமை தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் புதிய போலி வாக்காளர்களைச் சேர்த்து வாக்குத்திருட்டில் ஈடுபட முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மும்பையில் மாபெரும் போராட்ட பேரணியை நடத்தின. சத்யாச்சா மோர்ச்சா அதாவது உண்மைக்கான பேரணி என்ற பெயரில் பேரணி ஒன்றை நடத்தினர்.
இப்பேரணி மும்பை பேஷன் தெருவில் தொடங்கி மாநகராட்சி தலைமை அலுவலகம் அருகில் இருக்கும் ஆசாத் மைதானம் நோக்கிச் சென்றது. இதில் தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத்பவார், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இப்பேரணியைத் தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றினர். இதில் பேசிய சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே,''வாக்காளர் பட்டியலில் இருந்து எனது பெயரையும், என் குடும்பத்தினர் பெயரையும் நீக்க முயற்சி நடக்கிறது.
எனது வீட்டிற்கு தேர்தல் கமிஷன் ஊழியர்கள் பெயர்களைச் சரிபார்க்க வந்தார்கள். அவர்களிடம் இருந்த புகார் மனுவில் வேறு ஒரு போன் நம்பர் இருந்தது. இதன் மூலம் அவர்கள் எங்களது பெயர்களை நீக்க முயற்சி செய்கின்றனர். இதற்கான தக்க ஆதாரங்களுடன் கோர்ட்டை அணுகுவோம். எங்களுக்கு அங்கு நீதி கிடைக்குமா என்பதற்கு இது ஒரு சோதனையாகும். வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனகொண்டா (அமித் ஷா) வந்துவிடும். தேர்தல் கமிஷன் இதில் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது. எங்களது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. ஓட்டுத்திருட்டு விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் நீதிமன்றம் முடிவு செய்யும்''என்று தெரிவித்தார்.
இதில் பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே,'' போலி வாக்காளர்களை பொதுமக்கள் அடித்து அவர்களை போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஏராளமான போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார். கல்யாண் (கிராமப்புறம்), டோம்பிவிலி, முர்பாத் மற்றும் பிவாண்டி ஆகிய இடங்களில் 4,500 போலி வாக்காளர்கள் இருப்பதாக ராஜ் தாக்கரே கூறினார்.
மும்பை வடக்கு ( 62,370), மும்பை வடமேற்கு (60,231), மும்பை வடகிழக்கு (92,983), வட மத்திய மும்பை (63,740), தெற்கு மத்திய மும்பை (50,565), நாசிக் (99,673), மாவல் (1.4 லட்சம்), புனே (1 லட்சம்), தானே (2 லட்சம்) போன்ற மக்களவை தொகுதியிலும் போலி வாக்காளர்கள் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில்,'' தேர்தல் பிக்சிங் செய்யப்பட்டுவிட்டது. எனவே வாக்காளர் பட்டியலை சரி செய்யும் வரை தேர்தலை நிறுத்தவேண்டும்.

ஏற்கனவே 5 ஆண்டுகளாக தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட பிறகு இப்போது தேர்தலை நடத்த ஏன் அவசரம்? வாக்காளர் பட்டியலை சரி செய்துவிட்டு, பின்னர் தேர்தலை நடத்துங்கள். இன்னும் ஒரு வருடம் பிடித்தால் பரவாயில்லை,” என்று அவர் கூறினார்.
இதில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றாலும், மும்பை மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கவில்லை. ராஜ் தாக்கரேவை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் தயக்கம் காட்டிவருகிறது. முதல் முறையாக ராஜ் தாக்கரே கலந்துகொண்ட கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணிக்கு போட்டியாக பா.ஜ.க அமைதி பேரணி நடத்தியது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க தலைவர்கள், எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாகவும், பொய்யை பரப்புவதாகவும் குறிப்பிட்டனர்.


















