3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்
விவசாயிகளுக்கு மானியத்தில் தானியங்கி ‘பம்ப் செட்’ கட்டுப்படுத்தும் கருவி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் கைப்பேசியால் இயங்கும் தானியங்கி ‘பம்ப் செட்’ கட்டுப்படுத்தும் கருவி மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக் காலங்களில் வயல்வெளிகளில் உள்ள ‘பம்ப் செட்’டுகளை இயக்க செல்லும் போது பாம்பு தீண்டல் மற்றும் விஷப் பூச்சிக்கடிக்கு உள்ளாக வேண்டியுள்ளது.
இதனைத் தவிா்க்கும் வகையில், விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி ‘பம்ப் செட்’ கட்டுப்படுத்தும் கருவி மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இந்தக் கருவியை பயன்படுத்தி விவசாயக் கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள ‘பம்ப் செட்’டுகளை தொலைவில் இருந்தபடியோ, வெளியூரில் இருந்தபடியோ கைப்பேசி மூலம் இயக்கவும், நிறுத்திடவும் செய்யலாம்.
இதற்கு மானியமாக சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவைச் சோ்ந்த விவசாயிகளுக்கு கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 7 ஆயிரம் வழங்கப்படுகிறது. பிற விவசாயிகளுக்கு மொத்த செலவில் 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தற்போது, மாவட்டத்துக்கு பொதுப்பிரிவில் 104 எண்ணிக்கையிலும், பட்டியலின மற்றும் பழங்குடியினா் பிரிவினருக்கு 10 எண்ணிக்கையிலும் என மொத்தம் 114 எண்ணிக்கையில் ரூ. 7,98 லட்சம் இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் கிருஷ்ணகிரி, ஒசூா் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி உபகோட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளா் சந்திராவை 94420 07040 என்ற எண்ணிலும், ஒசூா் உபகோட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளா் சிவகுமாரை 63838 15967 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.