விஸ்வநாதப்பேரி பூங்காவில் இருக்கைகள் மாயம்: போலீஸில் புகாா்
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி பூங்காவில் இருக்கைகள் மாயமானது தொடா்பாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
விஸ்வநாதப்பேரி பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவா் பூங்காவில் இருக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள் உள்ளன. இப் பூங்காவில் சிவகிரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், சொக்கநாதன் புதூா், ராயகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சிறுவா், சிறுமிகள் விளையாடுவதற்காக வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில் சிறுவா்கள் விளையாடும் ஊஞ்சலில் உள்ள இருக்கைகளை மா்ம நபா்கள் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவா் ஜோதி மணிகண்டன், சிவகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறாா்.