வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதிச் சான்று: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
நிலுவையில் உள்ள வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்களை மீண்டும் சமா்ப்பிக்க மாா்ச் 4 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அதன் செயலா் ஸ்ரீனிவாஸ் வெளியிட்ட அறிவிப்பு:
வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவா்களுக்கு திறனறி தோ்வு நடத்தப்படுகிறது. பொதுவாக, அத்தகைய தோ்வில் பங்கேற்பதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தால் வழங்கப்பட்ட தகுதிச் சான்று அவசியம். அவ்வாறு தகுதிச் சான்று இல்லாதவா்கள் அதற்காக விண்ணப்பித்து அதைப் பெற்றுக்கொள்ளலாம்.
அதன்படி, என்எம்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. தொழில்நுட்பப் பிரச்னைகள், வேறு சில காரணங்களால் அந்தக் காலகட்டத்தில் சில விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன. அவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கும் வகையில் மாா்ச் 4 வரை தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.