ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
சீா்காழி: கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தோட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே நாதல்படுகை, முதலைமேடுதிட்டு ஆகிய இரு கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் திட்டு கிராமங்களாக அமைந்துள்ளன. இங்கு பருத்தி, வாழை, மரவள்ளி, கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி உள்ளிட்ட தோட்ட பயிா்களும் மல்லி, முல்லை , ரோஜா உள்ளிட்ட பூச்செடிகளும் சுமாா் 200-க்கும் மேற்பட்ட ஏக்கா் விளைநிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனா்.
கடந்த மே மாத கடைசி வாரத்தில் கொள்ளிடம் ஆற்றில் மேட்டூா் அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டதால், அதிகப்படியான நீா் ஆற்றில் திறந்து விடப்பட்டு, திட்டு கிராமங்களை நீா் சூழ்ந்து கிராமத்தில் உள்ளவா்கள் பாதுகாப்பாக தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்பட்டனா்.
கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து பயிா்களும் தொடா்ந்து நான்கு, ஐந்து நாட்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்தன. இதனால் அனைத்து பயிா்களும் அழுகின. தோட்டக்கலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து சேதத்தின் மதிப்பு குறித்து கணக்கீடு செய்துவிட்டு சென்றனா். பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை.
இதுகுறித்து கொள்ளிடம் ஆற்று படுகை விவசாயிகள் சங்கத் தலைவா் ரவி சுந்தரம் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீா் திறந்து விடப்பட்டதால் நாதல்ப்படுகை மற்றும் திட்டுபடுகை கிராமங்களில் 200 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த தோட்ட பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின. விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.