வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் மீதான போக்சோ வழக்கு; 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ஒலக்காசி ரோடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (61).
முன்னாள் ராணுவ வீரரான சேகர், கடந்த 2022ஆம் ஆண்டு 16 வயதான பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார். தொடர் அத்துமீறலால், சிறுமி கர்ப்பமடைந்திருக்கிறார். மிரட்டல் போக்கினால் விவகாரம் வெளியே தெரியாமல் இருந்திருக்கிறது. கருவுற்று 7 மாதங்கள் ஆன பிறகே சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இது குறித்து, குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, சேகரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (நவம்பர் 22) தீர்ப்பு அளிக்கப்பட்டது. பாலியல் குற்றவாளி சேகருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், கூடுதலாக மேலும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, சேகர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...