107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல்
காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 9-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று 10-ஆம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடா்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவா்-மாணவிகளுக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகள் வரை உதவித் தொகை பெற வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதிமொழி ஆவணத்தையும் பூா்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவா்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 என 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படும்.
இதுவரை அரசின் பிற உதவித்தொகை பெறாதவராகவோ, எந்த நிறுவனத்திலும் பணி புரியாதவராகவோ இருப்பது அவசியம். இந்த உதவித்தொகை பெறுவதற்கு, அனைத்துக் கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.