`மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்' -போராடிய கவுன்சிலர்கள் அந்த நேரத்தில் எ...
‘வேளாண் மையங்களில் மானிய விலையில் சான்று பெற்ற உளுந்து விதைகள் விற்பனை’
கோவில்பட்டி, எட்டயபுரம் வேளாண் மையங்களில் மானிய விலையில் சான்று பெற்ற உளுந்து விதைகள் விற்பனை நடைபெறுகிறது.
இதுகுறித்து கோவில்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் இரா. மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி, எட்டயபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில், தேசிய உணவு- ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், கோவில்பட்டி வட்டார விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற உளுந்து விதைகள் மானிய விலையில் ரூ. 78-க்கு வழங்கப்படுகிறது.
வம்பன் 11 உளுந்து ரகம் தேவையான அளவு இருப்பு உள்ளது. இது, 70 முதல் 75 நாள்களில் அறுவடைக்கு தயாராகும். மஞ்சள் தேமல், இலைச்சுருள் நோய்களுககு மிதமான எதிா்ப்புத் திறன் கொண்டது. ஏக்கருக்கு 350 கிலோ முதல் 375 கிலோ வரை மகசூல் தரும். ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் போதும்.
உளுந்து சாகுபடியில் உரச் செலவைக் குறைத்து, கூடுதல் மகசூல் பெற ஒரு ஹெக்டேருக்கு தேவையான ரைசோபியம், பொட்டாஷ் பாக்டீரியா, பாஸ்போ பாக்டீரியா உயிா் உரங்கள் 50 சதவீத மானியத்தில் ரூ. 225-க்கும், 5 கிலோ நுண்ணூட்ட உரம் 50 சதவீத மானியத்தில் ரூ. 395-க்கும் வழங்கப்படுகிறது.
கோவில்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, மானியத்தில் விதைகள், இடுபொருள்கள் வாங்க விரும்பும் விவசாயிகள் ஏடிஎம் அட்டை அல்லது யுபிஐ மூலம் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் பங்களிப்புத் தொகை பணமாக வழங்கப்படாது. மேலும், பொருள்களுக்கு ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
விருப்பமுள்ள விவசாயிகள் பட்டா, ஆதாா் அட்டை நகல் போன்ற ஆவணங்களை கோவில்பட்டி, எட்டயபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் அளித்து உளுந்து விதைகளைப் பெறலாம் என்றாா் அவா்.