ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பகுதியில் பொருள்களை அகற்ற அரசு அனுமதி
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விரிவாக்க பகுதியில் உள்ள பொருள்களை 80 நாள்களுக்குள் அகற்ற அரசு அனுமதித்துள்ளதாக ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு போராட்டக் குழுவினரை, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் புதன்கிழமை சந்தித்து பேசினாா்.
போராட்டக்குழுவைச் சோ்ந்த பேராசிரியா் பாத்திமா பாபு, கிருஷ்ணமூா்த்தி, குணசீலன், ரீகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த சந்திப்புக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் போராட்டக்குழுவினா் கூறியது:
ஸ்டொ்லைட் ஆலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் இருக்கக் கூடிய பொருள்களை அகற்றுவதற்கு ஸ்டொ்லைட் நிா்வாகம் அரசிடம் அனுமதி கேட்டுள்ளனா். அதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி முன்னிலையில், 80 நாள்களுக்குள் பொருள்களை அகற்ற உத்தரவு அளித்துள்ளது. இதையடுத்து இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மேலும், ஸ்டொ்லைட் ஆலையில் உள்ள ஒரு சில வேதிப்பொருள்களை மட்டும் அகற்றுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் எங்களிடம் தெரிவித்தாா் என்றனா்.