சென்னை கடற்கரைச் சாலை - ஓ.எம்.ஆரில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தம்
`ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல்’– குற்றச்சாட்டுகளை அடுக்கும் எதிர்க்கட்சிகள்; முதல்வர் சொல்வதென்ன?
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் மற்றும், குமரகுருபள்ளத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் உள்ளிட்டவர்கள் பகிரங்கமாக குற்றம்சுமத்தி வருகின்றனர். இது குறித்துப் பேசும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரியில் ரூ.1,800 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் சிட்டி திட்டமிடப்பட்டு, அதில் 64 பணிகளுக்கு நிதி ஒதுக்கி நான் முதலமைச்சராக இருந்தபோது ஒப்புதல் பெறப்பட்டது.
ஆனால் அது படிப்படியாக குறைந்து இந்த ஆட்சியில் வெறும் ரூ.700 கோடிக்கு வந்திருக்கிறது. பொதுப்பணித்துறையை பொறுத்தவரை விஞ்ஞான ரீதியில் ஊழல் நடைபெற்றிருக்கிறது. நான் முதல்வராக இருந்தபோது, புதுச்சேரி ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை புனரமைப்பதற்காக முதற்கட்டமாக ரூ.15 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.47 கோடிக்கு திட்டமிட்டு, அடுக்குமாடி கடைகள் கட்டுவதற்கு முடிவெடுத்தார்கள்.
அதையடுத்து 4 ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த பேருந்து நிலையத்தை இடித்து, அடுக்குமாடி கடைகள் இல்லாமல் கட்டுவதற்கு ரூ.29 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரை எடுத்த Natural Building Construction Corporation - NBCC என்ற நிறுவனம், அதை சென்னை சில்க்ஸ்க்கு உள் ஒப்பந்தமாக (Sub-Contract) கொடுத்தது. புதுச்சேரியில் சென்னை சில்க்ஸ் கடையை நடத்தும் அமல்ராஜ் என்பவருக்குத்தான் அந்த உள் ஒப்பந்தம் (Sub-Contract) கொடுக்கப்பட்டது. அந்த கட்டுமானப் பணிகள் குறித்து நாங்கள் விசாரித்தோம்.
ரூ.29 கோடி ஒதுக்கப்பட்ட அந்த பேருந்து நிலையத்தில், 46 பேருந்துகள் நிற்பதற்கான இடம், 31 கடைகள், ஒரு உணவகம், ஒரு முன் பதிவுக்கான இடம், கழிப்பறைகள் போன்றவைதான் இருக்கின்றன. வாகனங்கள் நிறுத்தும் இடத்தைப் பொறுத்தவரை அங்கு ஏற்கெனவே தரை இருக்கிறது. அதை மேலே மட்டும் கொத்திவிட்டு சிமெண்டால் பூசியிருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த கட்டுமான பணிகளையும் கணக்கெடுத்துப் பார்த்தால், அதிகப்படியாகவே ரூ.15 கோடிக்கு மேல் செலவாகாது. ஆனால் ரூ.29 கோடிக்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது. இதில் ரூ.14 கோடிக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது.
இதுதான் விஞ்ஞான முறையிலான ஊழல். அடுத்தது குமரகுருபள்ளத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல். அதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.45.5 கோடி. 400 சதுர அடியில், 12 அடுக்கில், 220 குடியிருப்புகள் நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு இரண்டு முறை டெண்டர் விடப்பட்டும், அதற்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை. அதையடுத்து சிங்கிள் டெண்டர் முறையில், அதே சென்னை சில்க்ஸ் அமல்ராஜுக்கு 7% சதவிகிதம் தொகையை சேர்த்து கொடுத்திருக்கிறார்கள். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வாழைக்குளம் பகுதியில், 370 சதுர அடியில் 219 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ரூ.20 கோடியில் கட்டப்பட்டது.
அதன்படி அப்போது ஒரு வீட்டுக்கு ஆன செலவு ரூ.9.6 லட்சம். ஆனால் தற்போது குமரகுருபள்ளத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு வீட்டுக்கு ஆன செலவாக இவர்கள் கூறுவது ரூ.21.5 லட்சம். நவீன தொழில்நுட்பங்களில் கட்டும்போது கட்டுமானப் பணிகள் குறையும். அதனால் இந்த குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.30 கோடிக்கு மேல் செலவாகியிருக்காது. அதன்படி இதில் ரூ.15 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது. இது இந்த அரசில் நடைபெற்றிருக்கும் ஒரு கூட்டுக்கொள்ளை. மூன்றாவது, முதல்வர் ரங்கசாமி அவர்கள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அந்த திட்டத்தை துவக்கி வைத்த பாதாள சாக்கடை திட்டம்.
இந்த திட்டத்தில் பாதாளத்தில் இருக்கும் சாக்கடையை கேமரா வைத்து பார்ப்பார்களாம். அதன்பிறகு அதில் தேங்கும் கழிவுகளை நவீன இயந்திரத்தை வைத்து தள்ளுவார்களாம். இதுக்கு 50 கோடி ரூபாயா ? நான்காவது ஸ்மார்ட் நிழற்குடை ஊழல். 15 நிழற்குடைக்கு ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அதற்கான டெண்டரை விட இருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னதாகவே சென்னையைச் சேர்ந்த `The sky advertising agency’ என்ற நிறுவனத்துடன் வாய்மொழியாக ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள். நிழற்குடைகளில் விளம்பரம் செய்யும் உரிமத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டால், அவர்கள் இலவசமாக நிழற்குடையை கட்டிக் கொடுத்துவிடுவார்கள்.
அதனால் ரூ.15 கோடி இவர்களுக்கு லாபம். இப்படி பொதுப்பணித்துறையில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கும் கடிதம் எழுத இருக்கிறேன்” என்றார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன், ``புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் 2017-ம் ஆண்டு சுமார் ரூ.1,800 கோடி அளவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல பணிகள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
2017-ல் இருந்து 2021 வரை ஆட்சியில் இருந்த தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அரசு, இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாமல் புதுச்சேரி மாநிலத்திற்கு துரோகத்தை இழைத்தன. 2021-ல் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு அவசர கதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிவு செய்யப்பட்டன. இதுவரை சுமார் ரூ.700 கோடிக்கு மட்டுமே பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. துவக்கப்பட்ட பணிகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளுடன் திட்டங்களை துவக்கி வைத்ததாக தெரிகிறது.
வாழைக்குளம் பகுதியில் சுமார் 370 சதுர அடி அளவில் 220 பயனாளிகளுக்கு 20 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகிறது. அதே போன்று குமரகுரு பள்ளத்தில் சுமார் 400 சதுர அடி அளவில் 216 பயனாளிகளுக்கு சுமார் ரூ.45.50 கோடியில் பொதுப்பணித்துறை மூலமாக ஸ்மார்ட் சிட்டி நிதியில் இருந்து அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகிறது. வாழைக்குளம் பகுதியில் ஒரு பயனாளிக்கு சுமார் ரூ.9.9 லட்சம் செலவில் அடுக்குமாடி வீடு கட்டப்படுகிறது. ஆனால் குமரகுருபள்ளத்தில் ஒரு பயனாளிக்கு சுமார் ரூ.21.6 லட்சம் மதிப்பில் அடுக்குமாடி வீடு கட்டப்படுகிறது. அரசு சார்பில் வீடுகட்ட மானியம் வழங்கும் வழங்கும் போது, அட்டவணை இனத்து மக்களுக்கே ரூ.6 லட்சம்தான் மானியமாக அரசு வழங்குகிறது.
குமரகுருபள்ளத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு புதிய டெக்னாலஜி அடிப்படையில் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டது. திருப்பூரைச் சேர்ந்த சென்னை சில்க்ஸ் கட்டுமான நிறுவனத்திற்கு இந்த பணியை வழங்க வேண்டும் என முடிவு செய்து டெண்டர் விடப்பட்டது. இரண்டு முறை விடப்பட்ட டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. 3-வது அழைப்பில் புதிய டெக்னாலஜி அடிப்படையில் அந்த டெண்டரில் கலந்துகொண்ட சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு, டெண்டருக்கு மேல் 7% சதவிகிதம் அதிகப்படுத்தி சிங்கிள் டெண்டர் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. புதிய டெக்னாலஜி என்ற பெயரில் மக்களுடைய வரிப்பணத்தை முறைகேடு செய்வதற்கு அதிக அளவில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இது ஒரு விஞ்ஞான ரீதியிலான ஊழலாகும்.
புதிய டெக்னாலஜியை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு வீடு கட்டுவதற்கு, பொதுப்பணித்துறையில் பி.எஸ்.ஆர் ரேட் என்னவென்றே முடிவு செய்யப்படவில்லை. சுமார் ரூ.20 கோடி அளவில் 216 குடியிருப்பு வாசிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட வேண்டிய சூழ்நிலையில், ரூ.45.5 கோடி செலவில் அந்த கட்டுமான பணியை செய்வதற்கு புதுச்சேரி அமைச்சரவை அனுமதி அளித்ததா? இந்த அடுக்குமாடி வீடு கட்ட ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ.4,000 செலவாகியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு சதுரடி 4,000 ரூபாயில் ஒரு 7 ஸ்டார் ஹோட்டலையே கட்டிவிடலாம். எனவே ஸ்மார்ட் சிட்டி நிதியில் குறிப்பிட்ட இந்த பணியில் நடைபெற்ற முறைகேடு சம்பந்தமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், துணைநிலை ஆளுநர் அவர்களும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய முதல்வர் ரங்கசாமி, ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையமும், அடுக்குமாடி குடியிருப்பும் தரமாகவே கட்டப்பட்டிருக்கின்றன. அரசின் திட்டங்களை குறை கூறுவதையே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன. திட்ட மதிப்பீட்டில் முக்கால்வாசி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது சரியல்ல. எங்களைப் பொறுத்தவரை மக்கள் பணி நடைபெற வேண்டும். இவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது. கடந்த ஆட்சியில் இவர்கள் எதுவுமே செய்யவில்லை. ஆனால் இப்போது முறைகேடு நடப்பதாக கூறுகின்றனர். எங்கள் அரசு சொன்னதை செய்து வருகிறது. அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படியெல்லாம் பேசி வருகின்றனர்” என்றார்.