Stephen: "ஒரு Shortfilm-ல ஆரம்பிச்ச கதை தான் Stephen" - Gomathi Shankar & Mithun...
ஸ்ரீவில்லிபுத்தூர்: கண்மாயில் கவிழ்ந்த வேன்; பட்டாசு தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிழ்தான், கோடாங்கிபட்டி, ஏ. ராமலிங்காபுரம் பகுதிகளில் இருந்து தனியார் பட்டாசுத் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு வேன் புறப்பட்டது.
வழக்கம்போல் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தொழிற்சாலை நோக்கிச் சென்ற அந்த வேன், அச்சம்தவிழ்தான் பெரிய குளம் கண்மாய்க் கரையில் செல்லும் போது, ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து கண்மாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் சென்னாக்குளம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 பெண் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் ஏழு பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளர்கள் ஆவர்.
விபத்து நடந்ததும், அருகில் இருந்த உள்ளூர் மக்கள் உடனடியாக விபத்து இடத்துக்கு விரைந்து வந்து, கண்மாயில் கவிழ்ந்த வேனில் சிக்கியிருந்த காயமடைந்தவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்த விக்கியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த ஏழு பேருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலருக்கு தலை, கை, கால் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவர்கள் அவர்களின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
தேவைப்பட்டால் சிலரை அருகில் உள்ள மதுரை அல்லது விருதுநகர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

















