`1 லி கெமிக்கலிலிருந்து 500 லி பால்' - 20 ஆண்டுகளாக ஏமாற்றிய தொழிலதிபர் கைது
பாலில் தண்ணீரைக் கலந்து விற்பது, பால் பவுடர் கலந்த நீரை சுத்தமான பால் என்று விற்பது போன்ற மோசடிகளுக்கு மத்தியில், உத்தரப்பிரதேசத்தில் ஒரு தொழிலதிபர் வெறும் கெமிக்கல் மூலம் செயற்கையாகப் பால் மற்றும் பால் பொருள்களை விற்று வந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அஜய் அகர்வால் என்றறியப்படும் இவர், புலந்த்ஷாஹரில் `அகர்வால் டிரேடர்ஸ்' என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாகப் பால் மற்றும் பால் பொருள்களை விற்றுவருகிறார்.
இந்த நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அதிகாரிகள், அகர்வால் கடை மற்றும் நான்கு குடோன்களில் இரண்டு நாள்களுக்கு முன்பு திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில், கெமிக்கலை வைத்து உண்மையான பாலைப் போலவே நிறம், சுவை என செயற்கையாகப் பாலை அகர்வால் உற்பத்தி செய்திருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, பாலில் சேர்க்கப்படும் சில செயற்கை சுவையூட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவையுமே கூட இரண்டு ஆண்டுகள் காலாவதியானவை. மேலும், குடோன்களிலிருந்து காஸ்டிக் பொட்டாஷ் (caustic potash), வே பவுடர் ( whey powder), சர்பிடால் (sorbitol), மில்க் பெர்மீட் பவுடர் (milk permeate powder) மற்றும் ரீஃபைனுடு சோயா கொழுப்புகள் (refined soya fats) ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரியொருவர், ``போலி பாலை உருவாக்கப் பயன்படுத்திய கெமிக்கல் குறித்த தகவலை அகர்வால் வெளியிடவில்லை. இருப்பினும், 5 மி.லி கெமிக்கலில் 2 லிட்டர் பாலை அவர் உருவாக்குகிறார்." என்று கூறினார். மேலும், இந்த ஃபார்முலாவை அகர்வால் எங்கிருந்து கற்றுக்கொண்டார் என்பது குறித்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவரும் அதேவேளையில், ``கடந்த 6 மாதங்களில் அகர்வால் இந்த பால் பொருள்களை எங்கு சப்ளை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்று FSSAI அதிகாரி வினித் சக்சேனா தெரிவித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...