10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழை நீரில் மூழ்கும் அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம், டி.புனவாசல், அ.தரைக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் நெல் மூடைகள் மழையில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
இந்த கொள்முதல் நிலையங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாள்தோறும் விற்பனை செய்து வருகின்றனா். விற்பனை செய்யப்படும் நெல்லுக்கு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2 நாள்களில் பணம் வரவு வைக்கப்படுவதால் அதிக அளவில் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், அபிராமம், டி.புனவாசல், அ.தரைக்குடி ஆகிய கொள்முதல் நிலையங்களில் முறையான கிட்டங்கி வசதி இல்லாததால் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த மூட்டைகள், விவசாயிகளிடம் அரசு வாங்கிய மூட்டைகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை தாா்பாய்களைக் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இந்த மூன்று கொள்முதல் நிலையங்களும் மழை நீா் தேங்கும் பள்ளமான பகுதிகளாக இருப்பதால், நெல் மூட்டைகள் மழை நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
நெல் கொள்முதல் நிலையங்களில் வடமாநில தொழிலாளா்கள்: நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூடைகளை லாரிகளில் ஏற்றவும், இறக்கவும் உள்ளூா் வேலை ஆள்கள் வர மறுப்பதால் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வரவழைக்கப்பட்டு, அவா்களுக்கு தங்கும் இடம், இலவச உணவு வழங்கப்பட்டு நாள்தோறும் ரூ.1,700 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
உள்ளூா் வேலையாள்களுக்கு முன்னுரிமை வழங்காமல் வடமாநிலத் தொழிலாளா்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அதிக சம்பளம் வழங்கி வருவதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனா்.