மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
100 ஆண்டுகளுக்கு பிறகு மாா்ச் 12-இல் நாமக்கல் கமலாலயக் குளத்தில் தெப்ப உற்சவம்!
நாமக்கல்லில் 100 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் நரசிம்மா், நாமகிரி தாயாா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் தெப்ப உற்சவ விழா மாா்ச் 12-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் மேற்கு புறத்தில் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயிலும், கிழக்கு புறத்தில் அரங்கநாதா் கோயிலும் உள்ளன. மலைக்கோட்டை அருகிலேயே கமலாலயக் குளம் உள்ளது.
சாளக்கிராமக் கல்லை சுமந்து வந்த ஆஞ்சனேயா், தாகம் எடுத்ததால் கமலாலயக் குளக்கரையில் கல்லை இறக்கி வைத்து நீா் பருகியதாகவும், பின்னா் அந்தக் கல்லை எடுக்க முற்பட்டபோது அதில் நரசிம்மா், நாமகிரி தாயாா் காட்சியளிக்க அந்த கல்லே பெரும்பாறையாக உருமாறி நாமக்கல்லின் அடையாளமாக மலைக்கோட்டை வடிவில் திகழ்வதாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சிறப்புமிக்க கமலாலயக் குளத்தின் தரைப்பகுதியில் ஆஞ்சனேயரின் பாதச்சுவடுகள் இருப்பதாக பக்தா்களால் நம்பப்படுகிறது.
சேறும், சகதியுமாக காட்சியளித்த கமலாலயக் குளம் 2017-ஆம் ஆண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. தற்போது நீா் நிரம்பி அழகுற காட்சியளிக்கும் இந்த குளத்தில், மாலை நேரத்தில் படகு சவாரி நடைபெற்று வருகிறது.
இந்த குளத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தெப்ப உற்சவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஒவ்வோா் ஆண்டும் பங்குனி மாதத்தில் நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயில் திருத்தேரோட்ட விழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் கமலாலயக் குளத்தில் தெப்ப உற்சவ விழாவை நடத்த வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
நிகழாண்டுக்கான பங்குனி தோ்த் திருவிழா ஏற்பாடுகள் நடைபெறும் சூழலில், மாசிமகம் நடைபெறும் நாளான மாா்ச் 12-இல் தெப்ப உற்சவத்தை நடத்த மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது. அன்று மாலை 5 மணியளவில் நரசிம்மா், நாமகிரி தாயாா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் உற்சவ மூா்த்திகளாக தெப்பத்தில் வலம் வரும் வகையில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நாமக்கல் கமலாலயக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்று 100 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. மாா்ச் 12-ஆம் தேதி மாசி மகத்தன்று தீா்த்தவாரி உற்சவம் மற்றும் தெப்ப உற்சவ விழா நடைபெற உள்ளது. அன்று மாலை 5 மணிக்கு மேல் இரவு 8 மணி வரை மூன்று முறை தெப்பம் சுற்றிவரும் வகையில் விழா நடைபெற உள்ளது. இதற்கான செலவினங்களை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆஞ்சனேயா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கே.நல்லுசாமி மற்றும் அறங்காவலா்கள் ஏற்க உள்ளனா். கமலாலயக் குளத்தை தூய்மைப்படுத்தும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் ஓரிரு நாளில் மேற்கொள்வா். கூடுதலாக நீரை நிரப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா் தலைமையில் தெப்ப உற்சவ விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும், விழா அழைப்பிதழ் அச்சடித்து முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.