அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா
108 பேரிடம் ரூ.100 கோடி! டிஜிட்டல் கைது மோசடியில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை!
நாட்டிலேயே முதல் முறையாக, சைபர் மோசடி குற்றத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 108 பேரிடம், இந்த கும்பல் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாவும், இதில் ஒரு பெண் உள்பட 9 பேர் மகாராஷ்டிரம், ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதும், இவர்கள் நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு ரனகத் பகுதியைச் சேர்ந்த ஒருவரை, டிஜிட்டல் கைது செய்திருப்பதாகக் கூறி, அவரிடமிருந்து ரூ.1 கோடி மோசடி செய்தது தொடர்பான வழக்கை வசிரித்த வந்த மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணி நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை பிறப்பித்துள்ளது.
கைது செய்யப்பட்டிருக்கும் 9 பேர் மீதும், மோசடியாக ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு, பொருளாதார பயங்கரவாதம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், இந்த குற்றவாளிகள் அனைவரும், தங்களுக்கு எதிராக மிக உறுதியான டிஜிட்டல் சாட்சிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.
இவர்களிடமிருந்து ஏராளமான வங்கிக் கணக்குப் புத்தகம், ஏடிஎம் அட்டைகள், சிம் கார்டுகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மோசடிப் பணத்தை நாடு முழுவதுமிருக்கும் ஏராளமான வங்கிக் கணக்குக்கு இவர்கள் பரிமாற்றம் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் ஐந்து மாத காலம் நடைபெற்ற விசாரணையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 29 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வங்கி மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2,600 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்களது மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்தவர்கள், தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்துவிட்டதாகவும், இது பொருளாதார பயங்கரவாதம் என்றும் அரசுத்தரப்பு வழக்குரைஞர் வாதத்தை முன்வைத்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக நிதி மோசடிக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.