Stephen: "ஒரு Shortfilm-ல ஆரம்பிச்ச கதை தான் Stephen" - Gomathi Shankar & Mithun...
1989-ல் கடத்தல்: 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை கைது செய்த சிபிஐ! - கடத்தப்பட்டது யார் தெரியுமா?
ஜம்மு காஷ்மீரில் 1989-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் முஃப்தி முகமது சயீத். அவரின் மகள் ருபையா சயீத். அவர் லால் சௌக்கில் உள்ள மருத்துவமனையில் இருந்து நவ்கானில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டார். அப்போது இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, “ருபையா சயீத் விடுவிக்கப்பட வேண்டுமானால், சிறையில் இருக்கும் 'ஜம்மு–காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF)' அமைப்பைச் சேர்ந்த 5 கைதிகளை விடுவிக்க வேண்டும்” என நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, JKLF அமைப்பின் ஐந்து கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. மத்திய அரசின் இந்த முடிவை அப்போது ஜம்மு–காஷ்மீரின் முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா கடுமையாக எதிர்த்தார்.
இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் JKLF அமைப்பைச் சேர்ந்த யாசின் மாலிக் தலைமையிலான குழுவே எனக் கண்டறியப்பட்டது. தற்பொழுது யாசின் மாலிக், பயங்கரவாத நிதி பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசால் விடுதலை செய்யப்பட்ட JKLF அமைப்பின் ஐந்து கைதிகளும், 1999-ம் ஆண்டு கந்தஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814-ஐ கடத்தலில் பங்கேற்றனர் என்பதும் ஒரு வேறு கதை.
இந்த நிலையில், மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI), ருபையா சயீத் கடத்தப்பட்ட வழக்கில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீநகரில் நேற்று ஷஃபாத் அகமது ஷுங்லூ என்பவரை கைது செய்துள்ளது. சாட்சியங்கள் மற்றும் ருபையாவின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள இவர், தற்போது ஜம்முவில் உள்ள TADA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


















