2 நாள்களில் 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி; பெர்த் டெஸ்ட்டுக்கு தீயாய் தயாரான ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும் முன்பாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (நவம்பர் 22) பெர்த்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தது. இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: முதல் நாள் விளையாடிய ஆடுகளமா இது? ஆச்சரியத்தில் ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர்!
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 218 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
2 நாள்களில் 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி
முதல் இன்னிங்ஸில் 0 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளத்தின் தன்மைக்கேற்றவாறு பேட்டிங் செய்து 90 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள குறைந்த நாள்களே இடைவெளி இருந்தது. இருப்பினும், ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப விளையாடுவதற்காக ஜெய்ஸ்வால் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, முதல் போட்டி நடைபெறும் பெர்த் ஆடுகளத்தின் பௌன்சர்களுக்காக அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: புதிய சாதனையை நோக்கி நகரும் பெர்த் டெஸ்ட்!
பார்டர் - கவாஸ்கர் தொடருக்கு முன்பாக அவர் மேற்கொண்ட பயிற்சி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் ஜூபின் பரூச் பகிர்ந்துகொண்டதாவது: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, பார்டர் - கவாஸ்கர் தொடர் தொடங்குவதற்கான கால இடைவெளி குறைவாக இருந்தது. அதனால், ஜெய்ஸ்வால் மும்பையின் தாணே மைதானத்திலேயே பயிற்சியில் ஈடுபட்டார். மிகவும் லேசான பந்துகளை பயிற்சிக்காக பயன்படுத்தினோம். ஏனெனில், லேசான பந்துகள் காற்றில் வேகமாக பயணிக்கும்.
ஷார்ட் லென்த்தில் கான்கிரீட் ஸ்லாப் ஒன்றை குறிப்பிட்ட கோணத்தில் பந்துகள் பௌன்சராக வருமாறு வைத்து அவர் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்பாக, இரண்டு நாள்களில் ஜெய்ஸ்வால் கிட்டத்தட்ட 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். வழக்கமான பயிற்சி ஆடுகளங்களில் எப்போதும் பௌன்சர்கள் வீச முடியாது. அதனால், கான்கிரீட் ஸ்லாபை பயன்படுத்தினோம். இந்த பயிற்சியில் வேகப் பந்துவீச்சின் சில நுணுக்கங்களை கொண்டுவர இயலாது. இருப்பினும், இது மிகவும் சிறப்பான பயிற்சியாக இருந்தது என்றார்.