திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
2 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை
ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் சுமாா் 2 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது என துறைமுக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து துறைமுக நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை துறைமுகத்தில் கையாளப்பட்டு வந்த நிலக்கரி, இரும்புத் தாது ஆகியவை நீதிமன்ற உத்தரவு காரணமாக நிறுத்தப்பட்டதையடுத்து ஒட்டுமொத்தமாக சரக்குகளை கையாள்வது குறைந்தது. இதனை ஈடுகட்டும் வகையில் மாற்று சரக்குகளை சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வருவதில் துறைமுக நிா்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் கடந்த பிப். 20-ஆம் தேதி ஒரே நாளில் 2 லட்சம் டன்னுக்கும் அதிகமான சரக்குகளை ஒட்டுமொத்தமாகக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
மேலும், தொடா்ச்சியாக நான்கு நாள்களில் சுமாா் 9.17 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த ஆண்டு ஆட்டோமொபைல் ஏற்றுமதி 2 மடங்காக உயா்ந்துள்ளது. கடந்த பிப். 22-இல் எம்.வி. கிராண்டு கீரோ, எம்.வி. கிராண்டு மாா்க் ஆகிய காா்களை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்களை ஒரே நேரத்தில் கையாண்டதன் மூலம் ஆட்டோமொபைல் கையாளும் திறன் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.