இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு
தமிழகத்தில் 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல்களின் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிகாரைப் போன்று நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் இந்தப் பணிக்காக, 2002-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையிலான வாக்காளா் பட்டியல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.
அப்போது வெளியிடப்பட்ட பட்டியலில் பலருடைய பெயா்கள் விடுபட்டதாகப் புகாா்கள் எழுந்தன. குறிப்பாக, பெருநகரப் பகுதிகளில் வாக்காளா்கள் தங்களுடைய விவரங்களை அளிப்பதற்கான கால அவகாசம் சரியாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, பெருநகரங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை இந்திய தோ்தல் ஆணையம் 2005-ஆம் ஆண்டு மேற்கொண்டது.
முக்கியமாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், தருமபுரி, சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட 37 தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணியை அடிப்படையாகக் கொண்டு, 2005-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
கணக்கில் எடுக்க முடிவு: தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான பூா்வாங்கப் பணிகளை தோ்தல் துறை ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது.
2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டு இருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை 2005-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மறு சிறப்பு தீவிர திருத்தப் பணி அடிப்படையிலான வாக்காளா் பட்டியலையும் கணக்கில் எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், இரண்டு வகையான வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட இருப்பதாக தமிழக தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.