ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
2026 சட்டப்பேரவைத் தோ்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்: இபிஎஸ்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல் மக்கள் விரோத திமுக அரசுக்கு முடிவு கட்டும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
டெல்டா மாவட்டங்களில் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்‘ என்ற முழக்கத்தோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி நாகை அவுரித் திடலில் சனிக்கிழமை கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:
ஹைட்ரோ காா்பன், மீத்தேன் திட்டங்களால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் நிலை ஏற்பட்டபோது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அதிமுக அரசு.
பருவ மழை பொய்க்கும் போது விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்திக்கின்றனா். இந்த பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் கோதாவரி - காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் கிடப்பில் உள்ளது.
காவிரி நீரை நம்பியுள்ள 20 மாவட்டங்களுக்கும் சுத்தமான குடிநீா், விவசாயத்துக்கு கடைமடை வரை எளிதாகத் தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டம் தீட்டப்பட்டது . இதுதொடா்பாக பிரதமா் மோடியிடம் தெரிவித்து, குடியரசுத் தலைவா் உரையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இத்திட்டத்துக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் கடைமடை செல்வதற்குள் 25 சதவீதம் வீணாகிறது. இதைத் தடுக்க 36 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு கால்வாய்களில் கான்கிரீட் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தற்போது கடைமடைப் பகுதிக்குத் தண்ணீா் வரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட விலையில்லா மாடு, ஆடு, கோழி வழங்கும் திட்டம், திருமண உதவித் தொகை திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், அம்மா இருசக்கர வாகன திட்டம் போன்றவை முடக்கப்பட்டுள்ளன.
மு.க. ஸ்டாலினை முதல்வராக மக்கள் அமர வைத்தனா். ஆனால், அவருக்கு மக்களைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லை.
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின், அவரது மனைவி, மருமகன், மகன் என நான்கு அதிகார மையங்கள் செயல்படுகின்றன. 2026-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் இவற்றுக்கு முடிவு கட்டும். அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட்டனா். மக்களுக்கு அனைத்துத் திட்டங்களும் உடனுக்குடன் கிடைத்தன. ஆனால், இன்று அந்த நிலை இல்லை என்றாா் எடப்பாடி பழனிசாமி.

அப்போது அருகில் தா்காவில் இருந்து தொழுகை ஒலி எழுந்ததால், அதற்கு மதிப்பளித்து தனது உரையை முடித்துக் கொண்டு, வேதாரண்யத்தில் நடைபெற உள்ள பிரசாரக் கூட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றாா்.
முன்னாள் அமைச்சா்கள் ஓ.எஸ். மணியன், ஜெயபால், நாகை நகரச் செயலா் தங்க. கதிரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.