2031-க்குள் அணுசக்தி உற்பத்தித் திறன் மும்மடங்காக உயரும்: மத்திய அமைச்சர்
இந்தியாவின் அணுசக்தி திறன் கடந்த பத்தாண்டுகளில் இருமங்காக அதிகரித்த நிலையில், 2031-க்குள் இது மூன்று மடங்காக உயரும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். அணுசக்தித் துறை மற்றும் விண்வெளித்துறை உள்பட முக்கிய பதவிகளை வகுத்துவரும் அவர் 2014 முதல் மாற்றியமைத்த முன்னேற்றங்களைப் பற்றி அவர் தெரிவித்தார்.
பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது மொத்த மின்னுற்பத்தி திறன் 4,780 மெகாவாட்டாக இருந்தது. இன்று 2024ல் 8,081 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட திறன், முந்தைய 60 ஆண்டுகளில் எட்டப்பட்டதற்குச் சமமாக உள்ளது என்றார்.
2031-32ல் உற்பத்தித் திறன் மூன்று மடங்கு அதிகரித்து 22,480 மெகாவாட்டை எட்டும். இந்த முன்னேற்றத்திற்குத் தொழில்நுட்ப நிபுணத்துவம் மட்டுமல்ல.. அரசியல் விருப்பத்தின் மாற்றமும் காரணம்.
தமிழகத்தில் மின் பகிர்வு ஏற்பாடுகள் மற்றும் திட்டத் தாமதங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், நியாயமான முறையில் மின்சார விநியோகங்கள் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். தற்போது 50 சதவீத மின்சாரம் சொந்த மாநிலத்துக்கும், 35 சதவீதம் அண்டை மாநிலங்களுக்கும், 15 சதவீதம் தேசிய மின்திட்டத்துக்கும் ஒதுக்கப்படுகிறது.
மேலும் உள்நாட்டு பவினி திட்டம் தோரியம் உபயோகத்தைப் பரிசோதித்து வருகிறது, இது யுரேனியம் மற்றும் பிற இறக்குமதி பொருள்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்று அவர் கூறினார்.