Mali: முதல் முறையாக தனிநாட்டைக் கைப்பற்றும் அல்-கொய்தா; ஆப்பிரிக்காவை சூழ்ந்துள்...
25 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாம்பியன் யார்? - 5 முக்கிய மோதல்கள்!
அரை நூற்றாண்டு காலமாக நடைபெற்றுவரும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இன்று நவி மும்பையில் மோதுகின்றன.
நடப்பு 13-வது உலகக் கோப்பையில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை (7) வீழ்த்தி மூன்றாவது முறையாக இந்தியாவும், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்தை (4) வீழ்த்தி முதல்முறையாக தென்னாப்பிரிக்காவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கின்றன.

ICC Women's World Cup: 25 வருடங்களுக்குப் பிறகு ஒரு சாம்பியன்!
இதன்மூலம், 2005 முதல் மாறி மாறி உலகக் கோப்பையை வென்றுவந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இந்த இரு அணிகளும் நடப்பு எடிஷனில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியா அல்லது தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளில் யார் வென்றாலும் 25 வருடங்களுக்குப் பிறகு ஒரு சாம்பியன் கிடைக்கப்போவது உறுதி. இருப்பினும், உலகக் கோப்பையில் 1978 முதல் ஆடிவரும் இந்தியாவும், 1997 முதல் ஆடிவரும் தென்னாப்பிரிக்காவும் நிச்சயம் தங்களின் முதல் கோப்பைக்காக கடுமையாகப் போராடுவார்கள். நடப்பு தொடரில் இரு அணிகளும் லீக் சுற்றில் தோற்ற அணிகளிடம் அரையிறுதியில் வெற்றிபெற்று பலமாக இறுதிப் போட்டிக்குத் திரும்பியிருப்பதால் இரு அணிகளுக்கும் இந்த இறுதிப் போட்டி சவாலானதாக இருக்கக்கூடும். எனவே, இரு அணிகளுக்கும் சவாலளிக்கக்கூடிய 5 முக்கிய விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
இந்தியாவின் ஓப்பனிங் பவுலர்ஸ் vs தென்னாபிரிக்காவின் டாப் ஆர்டர்!
லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் மோதியபோது பவர்பிளேவில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் கிராந்தி கவுட் மட்டுமே தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டரில் இரண்டு பேரை முதல் ஆறு ஓவர்களிலேயே வீழ்த்தி நெருக்கடியை ஏற்படுத்தினார். பவர்பிளேவுக்குப் பின்னர், இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அந்த மொமென்ட்டமை கெட்டியாகப் பிடித்து 20 ஓவர்களில் தென்னாப்பிரிக்காவை 81-5 என்ற நிலைக்குத் தள்ளியது. இருப்பினும், தென்னாபிரிக்காவின் ஓப்பனிங் வீராங்கனை கேப்டன் லாரா வோல்வார்ட்டை (70 ரன்கள்) இந்திய பவுலர்கள் கவனிக்கத் தவறியதன் விளைவு அப்போட்டியில் இந்தியாவை தோல்விக்கு அழைத்துச் சென்றது. இங்கிலாந்துக்கெதிரான அரையிறுதியில்கூட லாரா வோல்வார்ட் தனியாளாக 169 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவின் வெற்றியை உறுதி செய்தார். தற்போது அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 470 ரன்களுடன் லாரா வோல்வார்ட்தான் முதலிடத்தில் இருக்கிறார். எனவே, இந்தியாவின் ஓப்பனிங் ஸ்பெல்லும், தென்னாபிரிக்காவின் டாப் ஆர்டரும் ஒன்றுக்கொன்று சவாலானதாக இருக்கும்.

மரிசேன் காப் vs ஸ்மிருதி மந்தனா!
தென்னாப்பிரிக்கா பவுலிங் யூனிட்டின் நம்பிக்கை நட்சத்திரம், அரையிறுதியில் இங்கிலாந்தின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர், இந்திய முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி சாதனையை முறியடித்தவர் எனப் பல முகங்களுடன் பவுலிங் ஆல்ரவுண்டர் மரிசேன் காப்.
ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் 1 பவுலரான இவர் இந்திய பேட்டிங் லைன்அப்-க்கு அச்சுறுத்தலாக இருப்பார். ஒடிஐ பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்மிருதி மந்தனா இவரை எதிர்கொண்டு ஓப்பனிங்கில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருக்கிறது. மரிசேன் காப்-க்கு எதிராக ஒருமுறை மட்டுமே அவுட்டாகியிருந்தாலும், இந்திய பேட்டிங்கில் மற்ற வீராங்கனைகள் மரிசேன் காப்-கு எதிராக 62 ஸ்ட்ரைக்ரேட்டில் மட்டுமே ஆடியிருக்கின்றனர். எனவே, மரிசேன் காப்பின் அழுத்தம் மற்ற வீராங்கனைகள் மீது படாதவாறு ஆடும் முக்கிய பொறுப்பு ஸ்மிருதி மந்தனாவுக்கு இருக்கிறது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் vs தென்னாபிரிக்காவின் மிடில் ஓவர் பவுலர்கள்!
ஜெமிமா ரோட்ரிக்ஸ், இந்தப் பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்தியாவை இறுதிப்போட்டிக்கு கொண்டுவந்த நாயகி. அரையிறுதியில் இந்தியாவின் இடத்தை உறுதிசெய்வதற்கான போட்டியிலும் (நியூசிலாந்துக்கெதிரான போட்டி), இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான அரையிறுதியிலும் சரி எதிரணியின் மிடில் தாக்குதலை அசால்ட்டாக அடித்து நொறுக்கியவர். அந்த இரு போட்டிகளிலும் 76, 127 என நாட் அவுட் வீராங்கனையாக ஜொலித்த அவரை விக்கெட் எடுக்க முடியாமல் எதிரணியினர் திணறினர். உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் ஜெமிமாவை எதிர்கொள்வது தென்னாபிரிக்காவின் மிடில் ஓவர் பவுலர்களுக்கு நிச்சயம் கடினம்தான். இருப்பினும், தென்னாப்பிரிக்காவுக்கெதிரான லீக் போட்டியில் ஜெமிமாவை குளோய் ட்ரையன் டக் அவுட் ஆக்கியது அவர்களுக்கு ஒரு பாசிட்டிவ்.

தென்னாபிரிக்காவின் மிடில் ஆர்டர் பேட்டிங் vs தீப்தி சர்மா!
இந்த உலகக் கோப்பையின் வெற்றிகரமான பவுலர் தீப்தி சர்மா. அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 17 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் 17 விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும் ஆவரேஜ் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறார். எனவே, இன்னும் ஒரு வீக்கெட் வீழ்த்தினாலே தீப்தி சர்மாவுக்கு முதலிடம் உறுதி. எனவே இந்தத் தொடர் முழுக்க எதிரணி மீது இருந்த தீப்தி சர்மாவின் அழுத்தம் இறுதிப்போட்டியில் தொடரக்கூடும். அதை எதிர்கொள்வது தென்னாபிரிக்காவின் மிடில் ஆர்டருக்கு சவால்தான்.
இந்தியா டெத் பவுலிங் vs நாடின் டி கிளார்க்!
இந்தியாவுக்கெதிரான லீக் போட்டியில் 81-5 எனத் தென்னாப்பிரிக்கா தடுமாறிக்கொண்டிருந்தபோது தனியாளாகப் போராடிய லாரா வோல்வார்ட் இன்னிங்ஸுக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில், 8-வது விக்கெட்டில் இறங்கி இந்தியாவின் டெத் பவுலிங்கை சிதறடித்து 84 ரன்களுடன் நாட் அவுட் வீராங்கனையாக இந்தியாவை வீழ்த்தியவர் நாடின் டி கிளார்க். இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் இந்தியாவின் டெத் பவுலிங் வீராங்கனைகளும் அவரை விக்கெட் எடுக்காமல் விட்டால் எத்தகைய பாதிப்பை அது ஏற்படுத்தும் என்பது லீக் சுற்றில் கண்ணெதிரே பார்த்துவிட்டதால் அந்தத் தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருப்பர்.
இந்த 5 சவால்களைத் தாண்டி மேலும் என்னென்ன சவால்களை இரு அணிகளும் எதிர்கொள்ளப்போகிறது, கோப்பையை யார் முதல்முறையாக ஏந்தப்போவது ஆகியவற்றை இன்று பார்க்கலாம்!


.jpg)












