4-ஆவது நாளாக கடலுக்குச் செல்லாத மீனவா்கள் கரைவலை மீன்பிடிப்பில் தீவிரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக 4ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல், கரைவலை மீன்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டனா்.
கனமழை, புயல் எச்சரிக்கையை முன்னிட்டு மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 4ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை. மேலும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனால், பெரும்பாலான நாட்டுப் படகு மீனவா்களும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதில் மீனவா்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், சுமாா் ரூ. 4 கோடி வரை வா்த்தக இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியை சோ்ந்த மீனவா்கள் தங்களது பாரம்பரிய தொழிலான கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
மீன்பிடி வலைகளை கடற்கரை பகுதியில் இருந்து சுமாா் 2 கி. மீ. தூரம் படகில் சென்று வலைகளை கடலில் வீசி பின்னா் இரு புறமும் நின்று சுமாா் 70 தொழிலாளா்கள் சுமாா் 7 மணி நேரம் இரண்டு புறமாக இடுப்பில் வலைகளை கட்டி வலைகளை இழுத்து வருவா். இதில், பிடிக்கப்படும் மீன்கள் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனா். இந்த கரைவலை மீன்பிடிப்பில் தற்போது நெத்திலி, பாறை, சாளை, முரள் உள்ளிட்ட மீன்கள் கிடைப்பதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இந்த கரைகரை வலை மூலம் பிடிக்கப்படும் மீன்கள் ஐஸ் இல்லாமல் உயிருடன் விற்பனை செய்யப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் இந்த மீன்களை விரும்பி வாங்கி செல்கின்றனா்.