மேற்கு வங்கம்: பாபர் மசூதி கட்ட மம்தா கட்சி எம்.எம்.ஏ பூமி பூஜை; ராமர் கோயில் கட...
5 வயது சிறுவனை தூக்கி சென்று கொன்ற சிறுத்தை - வால்பாறையில் சோகம்
கோவை மாவட்டத்தில் மனித–வனவிலங்கு மோதல் பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. அதிலும் வால்பாறை மலைப் பகுதியில் யானை, புலி, காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

வால்பாறையில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வனவிலங்கு பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவது புலம்பெயர் தொழிலாளர்கள்தான்.
கடந்த சில ஆண்டுகளில் அந்த தொழிலாளர்களின் குழந்தைகளை சிறுத்தை தாக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், வால்பாறை ஐயர்பாடி தேயிலைத் தோட்டத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஜாவெல்லி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அவருக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று (06.12.2025) குழந்தைகள் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய பெற்றோர் வீட்டிற்குள் இருந்தனர்.
அப்போது அங்கு திடீரென வந்த ஒரு சிறுத்தை, சைஃபுல் ஆலம் என்ற 5 வயது சிறுவனை தூக்கிச் சென்றது. சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சிறுவனின் உடல் தேயிலைத் தோட்ட புதரில் சடலமாக மீட்கப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் வால்பாறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















