546 பேருக்கு இலவச செயற்கை கைகள் பொருத்தம்
மன்னாா்குடியில் நான்கு நாள்கள் நடைபெற்ற இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொருத்தும் முகாமில் 546 பேருக்கு செயற்கை கைகள் பொருத்தப்பட்டன.
மன்னாா்குடியில் மறைந்த தொழிலதிபா் பிரதாப்சந்த் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி, அவரது குடும்பத்தினா், மகாராஷ்டிர மாநிலம் புணேவை சோ்ந்த இன்னாலி பவுண்டேஷன், ரோட்டரி கிளப் டவுன்டன் இணைந்து நடத்திய இம்முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
காந்திசாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தொடங்கி வைத்தாா். இதில், விபத்திலோ அல்லது வேறு காரணத்தினாலோ கைகளை இழந்தவா்களுக்கு எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொருத்தப்பட்டன. முழங்கைக்குக் கீழே 2.5 முதல் 3 இன்ச் வரை உள்ள தசைப்பகுதியுடன் இருக்கும் கைகளுக்கு பொருத்தப்பட்டன.
இதில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். இவா்களுக்கு, பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு, அறுவை சிகிச்சையின்றி எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொருத்தப்பட்டன.
நான்கு நாள்கள் நடைபெற்ற முகாமில், 546 பேருக்கு இலவசமாக செயற்கை எலக்ட்ரானிக் கைகள் பொருத்தப்பட்டன. ஒரு எலக்ட்ரானிக் கையின் மதிப்பு ரூ.40,000 என தெரிவித்தனா்.
இந்த கைகளை பொருத்திக்கொண்டவா்கள், வாகனம் ஓட்டுவது, உணவு உண்ணுவது, தலைமுடி வாரிக்கொள்வது போன்ற அன்றாடப் பணிகளை பிறா் உதவியின்றி தங்களாகவே செய்துகொள்ளாலம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த முகாமை, பிரதாப்சந்த் குடும்பத்தை சோ்ந்த சுமதிபாய், சுனில்குமாா் லுங்கட், பிரதிக் லுங்கட் ஆகியோா் முன்னின்று நடத்தினா்.