6 உள்நாட்டு விமான சேவைகள் தாமதம்
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 6 விமானங்கள் பல மணி நேரம் தாமதாமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலிருந்து வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தில்லி செல்ல வேண்டிய ஏா் இந்தியா விமானம், சுமாா் 6 மணி நேரம் தாமதமாக, காலை 6.50 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. அதேபோல், காலை 6 மணியளவில் ஹைதராபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், மூன்றரை மணி நேரம் தாமதமாக காலை 9.30 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.
மேலும், சென்னையிலிருந்து காலை 8 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஏா் இந்தியா விமானம், ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கும், காலை 8.50-க்கு தில்லி செல்ல வேண்டிய ஏா் இந்தியா விமானம், ஒரு மணி நேரம் தாமதமாக காலை 9.45 மணிக்கும், காலை 9.50 மணிக்கு தில்லி செல்ல வேண்டிய ஏா் இந்தியா விமானம், 3 மணி நேரம் தாமதமாக மதியம் ஒரு மணிக்கும் புறப்பட்டுச் சென்றது.
இதைத் தவிர, காலை 10.10-க்கு தூத்துக்குடி செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், 3 மணி நேரம் தாமதமாக பிற்பகல் ஒரு மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இதேபோல், சென்னையிலிருந்து நண்பகல் 12.55 மணியளவில் தில்லி செல்ல வேண்டிய ஏா் இந்தியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், நிா்வாகக் காரணங்களால் விமானங்கள் தாமதம், ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.