பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!
6 மாத கர்ப்பிணி மனைவி, 6 வயது மகளைக் கொன்று, தற்கொலைக்கு முயன்ற இளைஞர்! - கரூரில் நடந்தது என்ன?
தென்காசி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் செல்வகணேஷ் (வயது:45). அவரது மனைவி கல்பனா (வயது 42). இவர்களது மகள் சாரதிபாலா (வயது 6). இவர்கள் கடந்த ஏழு வருடங்களாக கரூர், வெங்கமேடு வி.வி.ஜி நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை செய்தாலும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வசித்து வந்த செல்வகணேஷ், தனது ஆறு மாத கர்ப்பிணி மனைவி கல்பனாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, ரத்த பரிசோதனை செய்துள்ளார். இந்த பரிசோதனையில் கணவன், மனைவி இருவரும் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு முடிவுகளை தெரிந்து கொண்ட செல்வகணேஷூக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கணவன், மனைவி இருவரது ரத்தத்திலும் தீராத நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், மனமுடைந்த செல்வகணேஷ், தனது ஆறு மாத கர்ப்பிணி மனைவி கல்பனா மற்றும் ஆறு வயது மகள் சாரதிபாலா ஆகிய இருவரையும் கழுத்தறுத்து கொலை செய்தபோது, அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். அதற்குள் செல்வ கணேஷ் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து, வெங்கமேடு காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில், அங்கு வந்த போலீஸார் வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது, மயக்க நிலையில் செல்வகணேஷ் இருந்துள்ளார். அவரது மனைவியும், மகளும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இதனால், வெங்கமேடு காவல் நிலைய போலீஸார் செல்வகணேஷை மீட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதேபோல், அவரால் கொலை செய்யப்பட்ட அவரின் மனைவி கல்பனா மற்றும் மகள் சாரதிபாலா ஆகிய இருவரின் உடல்கள், உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தனது குடும்ப உறுப்பினர்களை கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்வகணேஷ், சிகிச்சை முடிந்ததும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கர்ப்பிணி மனைவியுடன் ரத்தப் பரிசோதனை செய்து கொண்ட நபருக்கும், அவரது மனைவிக்கும் தீராத நோய்த்தொற்று இருந்ததால், குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.