9.82 லட்சம் ஹெபடைடிஸ் பி, பென்டாவேலன்ட் தடுப்பூசிகள் கையிருப்பு: பொது சுகாதாரத் துறை
தமிழகத்தில் குழந்தைகளுக்கான ஹெபடைடிஸ் - பி, பென்டாவேலன்ட் தடுப்பூசி மருந்துகள் 9.82 லட்சம் குப்பி கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.
தனியாா் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு இலவசமாக அவற்றை வழங்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக டாக்டா் செல்வவிநாயகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாடு தழுவிய தேசிய தடுப்பூசி திட்டம் 1985-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் கீழ் 12 வகையான நோய்களில் இருந்து கா்ப்பிணிகளையும் குழந்தைகளையும் பாதுகாக்க 11 வகை தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வோா் ஆண்டும் 9.58 லட்சம் கா்ப்பிணிகள், 8.76 லட்சம் குழந்தைகள் இந்தத் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனா். தமிழகம் தடுப்பூசி செலுத்துவதில் 99 சதவீத சாதனையை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது.
ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி என்பது கல்லீரல் அழற்சியைத் தடுக்க குழந்தை பிறந்தவுடன் 24 மணி நேரத்துக்குள் செலுத்த வேண்டும். அதன் பின்னா், குழந்தை பிறந்த 6 வாரங்களிலும், 10 வாரங்களிலும், 14 வாரங்களிலும் ரணஜன்னி, கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான் நோய்களைத் தடுக்கும் பென்டாவேலன்ட் தடுப்பூசி தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 9,73,100 ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி தேவைப்படுகிறது. தற்போது கையிருப்பில் 5,19,000 தடுப்பூசிகள் உள்ளன. அதேபோன்று, பென்டாவேலன்ட் தடுப்பூசி 29,20,100 தேவையாக உள்ளநிலையில், தற்போது 4,63,000 கையிருப்பில் உள்ளது.
2024-25-ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பா் வரை பிறந்த 5.68 லட்சம் குழந்தைகளில் 5.63 பேருக்கு ஹெபடைடிஸ்-பி தடுப்பூசியும் (99 சதவீதம்), 5.47 லட்சம் பென்டாவேலன்ட் தடுப்பூசியும் (94 சதவீதம்) வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 32 தனியாா் மருத்துவமனைகளுக்கும் ஹெபடைடிஸ்-பி மற்றும் பென்டாவேலன்ட் தடுப்பூசிகள் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
ஹெபடைடிஸ்-பி மற்றும் பென்டாவேலன்ட் தடுப்பூசிகள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.