Adani: அதானி விவகாரம்.. ஆட்டம் காணும் நாடாளுமன்றம்!
கடந்த 2ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கூட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. 'அவையைச் சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரியம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல், மணிப்பூரில் கலவரம் குறித்து விவாதங்களைக் கிளப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்தச் சூழலில்தான் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராகவும், இந்திய பெரும் பணக்காரர்களில் ஒருவருமான அதானிக்கு எதிராக ஊழல் புகார் வெடித்தது. அதாவது சூரிய சக்தி மின்சாரத்தை இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பதற்காக 250 மில்லியன் டாலர் அளவுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பின. இதனால் இரண்டு நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. இந்த சூழலில்தான் நேற்று (நவம்பர் 28) காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்குக் கூடின. பிரியங்கா காந்தி வத்ரா, வசந்தராவ் சவுதான் ஆகியோர் உறுப்பினர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். பிறகுக் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது 'அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்' என எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வலியுறுத்தினர். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, "உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படும். அதுவரை அமைதி காக்க வேண்டும்" எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் கேட்பதாக இல்லை. அவர்கள் தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு இடையே, வக்ஃப் மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (ஜேபிசி) காலத்தை நீட்டிக்கக் கோரி நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் ஜெகதாம்பிகா பால் விடுத்த கோரிக்கை வாக்கெடுப்பு விடப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. கீழ்சபையில் வக்ஃப் மசோதா மீதான ஜேபிசியை நீட்டிக்கக் கோரினார் ஜெகதாம்பிகா பால். தொடர்ந்து அமளி நிலவியதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அவை கூடியதும், எதிர்க்கட்சி எம்.பிக்கள், "அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை குறித்துத்தான் முதலில் விவாதிக்க வேண்டும்" என வலியுறுத்தி கூச்சலில் ஈடுபட்டார்கள். இதனால் மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதே பிரச்னைதான் மாநிலங்களவையிலும் வெடித்ததது. மாநிலங்களவையில் பேசிய அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், "அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை ஏற்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன். எனவே கேள்வி நேரம் தொடர அனுமதிக்க வேண்டும்" என்றார். ஆனால் இதற்குக் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடிய போதும் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.
அதற்குப் பதிலளித்த ஜக்தீப் தன்கர், "நாடாளுமன்ற செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துவது ஒரு நோய். இத்தகைய இடையூறுகள் நாடாளுமன்றத்தின் அடித்தளத்தைப் பலவீனப்படுத்துகிறது. இன்றைய நிகழ்ச்சி நிரல் படி அவையை நடத்த ஒத்துழைக்க வேண்டும்" என்றார். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபடத் தொடங்கினார்கள். இதையடுத்து அவை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குக் கூடுகிறது. அதுவரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அதானி விவகாரத்தைக் கையில் எடுத்து எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியிருக்கிறது. தொடர்ந்து இதேபோன்ற நிலைதான் இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இன்று (நவம்பர் 29) இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டதால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டன.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...