பேரிடர் காலங்களில் அரசியல் பாகுபாடு காட்டக்கூடாது: பிரியங்கா
Allu Arjun: `கவலைப்பட ஒன்றுமில்லை, நான் நன்றாக இருக்கிறேன்' - ஜாமீனுக்கு பிறகு பேசிய அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி உயிரிழந்ததை தொடர்ந்து, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாகத் திரைப்பிரபலங்கள் சிலர் குரல் கொடுத்திருந்தனர். இதனிடையே ஜாமீன் கோரி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை நடைபெற்று ஜாமீன் நேற்றிரவே வழங்கப்பட்டது. அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போதிய ஆவணங்கள் நீதிமன்றத்திலிருந்து கிடைக்கவில்லை என்பதால் சிறை நிர்வாகம் விடுதலை செய்ய மறுத்துவிட்டது. இதனையடுத்து இன்று காலை அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
வெளியே வந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அல்லு அர்ஜூன், “கடந்த 20 ஆண்டுகளாக எனது திரைப்படம் வெளியாகும்போது திரையரங்கிற்குச் செல்வது வழக்கம். இம்முறை துரதிஷ்டவசமாக விபத்து நடந்துவிட்டது.
இறந்தவர் குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன். என்னை நினைத்து கவலைப்பட ஒன்றுமில்லை நான் நன்றாக இருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.