பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!
AUSvIND: `4.30 மணி நேர ஸ்டாண்டிங்; ராகுல் -ஜெய்ஸ்வால் கூட்டணி அசத்தல்!' -பெர்த் டெஸ்ட் Day2 Report!
பெர்த் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு விக்கெட் எதையும் இழக்காமல் வலுவான நிலையில் இருக்கிறது. இரண்டாம் நாளில் என்ன நடந்தது?
முதல் நாளான நேற்று இரு அணியின் பேட்டர்களுமே கடுமையாக திணறியிருந்தனர். ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்திருந்தது. இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. ஆஸ்திரேலிய அணி 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை தொடங்கியது. தான் வீசிய முதல் பந்திலேயே அலெக்ஸ் கேரியை எட்ஜ் ஆக்கி வெளியேற்றினார். ஹர்ஷித் ராணா லயனை எட்ஜ் ஆக்கி வெளியேற்றினார். ஆஸ்திரேலிய அணி 79-9 என தடுமாறியது. இந்த சமயத்தில்தான் ஸ்டார்க்கும் ஹேசல்வுட்டும் கூட்டணி அமைத்தனர்.
கடைசி விக்கெட் விரைவாக விழும் என எதிர்பார்க்கையில் இருவரும் நின்று ஆடி பொறுமையை சோதித்தனர். இடையில் கொல்கத்தா அணிக்காக ஆடிய ஸ்டார்க் தனது சக வீரரான ஹர்ஷித்தை செல்ல ஸ்லெட்ஜ்ஜிங் செய்த சுவாரஸ்ய சம்பவமும் நடந்திருந்தது. பிட்ச்சும் முதல் நாளை விட வெகுவாக மாறியிருந்ததை கண்கூடாக பார்க்க முடிந்திருந்தது. நேற்று பச்சை பசேலென இருந்த பிட்ச் இன்று அந்த Freshness இல்லாமல் கொஞ்சம் வறண்டு காணப்பட்டது. இது பேட்டர்களுக்கு சாதகமாக மாறியது. என்ன செய்தாலும் பௌலர்களால் பந்தை பேச வைக்க முடியவில்லை.
ஸ்டார்க் ஹேசல்வுட் கூட்டணி மட்டுமே கடைசி விக்கெட்டுக்கு 110 பந்துகளை எதிர்கொண்டு 25 ரன்களை சேர்த்திருந்தது. ஸ்டார்க் மட்டும் தனியாக 112 பந்துகளை எதிர்கொண்டிருந்தார். ஆனாலும் ஆஸ்திரேலியா அணியால் இந்தியாவின் ஸ்கோரை தாண்ட முடியவில்லை. 104 ரன்களுக்கு ஆல் அவுட். ஹர்ஷித் ராணாவின் பந்தில் பெரிய ஷாட் ஒன்றை அடிக்க முயன்று பண்டிடம் கேட்ச் ஆனார் ஸ்டார்க். இந்திய அணி 46 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
உணவு இடைவேளையை முடித்துவிட்டு இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடங்க ஆயத்தமானது. 'ஆஸ்திரேலிய வீரர்கள் அத்தனை சிறப்பாக பந்துவீசவில்லை. இந்திய வீரர்கள் நம்பிக்கையில்லாமல் ஆடியதன் விளைவாகத்தான் இவ்வளவு மோசமாக விக்கெட்டுகளை இழந்திருக்கின்றனர்.' என நேற்று மார்க் நிக்கோலஸ் வர்ணனையில் பேசியிருந்தார்.
ஸ்டார்க்கும் ஹேசல்வுட்டும் ஆடியதை கண்டு இந்தியாவின் ஓப்பனிங் இணைக்கு நம்பிக்கை வந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை. இருவரும் கடந்த இன்னிங்ஸை விட மிகச்சிறப்பாக இன்று ஆடியிருந்தனர். 'பௌலர்கள் ஸ்டம்ப் லைனுக்கு வெளியே வீசி ஷாட் ஆட வலை விரிப்பார்கள். ஆனால், நாம் அவசரப்படாமல் தன்னம்பிக்கையோடு லீவ் செய்ய வேண்டும். ஒரு கட்டத்தில் நம்மை ஆட வைக்க வேண்டும் என்பதற்காகவே புல் லெந்த்தில் வீசுவார்கள். தவறு செய்வார்கள். அப்போது அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.' என இந்திய வீரர்களுக்கு அறிவுரை சொல்வது போல ராகுல் டிராவிட் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
டிராவிட் சொன்னதில் ஒரு 75% ராகுல் - ஜெய்ஸ்வால் கூட்டணி கடைப்பிடித்தது. ராகுல் ஏதுவாக புல் லெந்தில் விழுந்த பந்துகளை ட்ரைவ் ஆடினார். ஜெய்ஸ்வால் ஸ்டார்க் ஓவர் தி விக்கெட்டில் வந்து ஸ்டம்ப் லைனில் வீசிய பந்துகளையெல்லாம் லாவகமாக காலை நகட்டி ஷாட் ஆடினார். அதுபோக பவுன்சர்களையும் திறம்பட அப்பர் கட் ஆடினார். மற்ற பந்துகளையெல்லாம் இருவருமே பார்த்து லீவ் செய்துதான் ஆடினர். பிட்ச்சுமே பேட்டர்களுக்குதான் முழுமையாக உதவிபுரிந்தது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் ஏறக்குறைய 48% பந்துகள் பேட்டரை ஏமாற்றி திரும்பியிருந்தது. அதாவது ஒவ்வொரு இரண்டு பந்துக்கும் ஒரு பந்து பேட்டரை ஏமாற்றி திரும்பியிருக்கிறது. ஆனால், இன்று இரண்டாம் இன்னிங்ஸில் 27% பந்துகள் மட்டுமே பேட்டரை ஏமாற்றும் வகையில் திரும்பியிருக்கிறது.
நான்கில் ஒரு பந்து கொஞ்சம் சவால்மிக்கதாக இருந்தது என புரிந்துகொள்ளலாம். பிட்ச்சின் தன்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ராகுலும் ஜெய்ஸ்வாலும் நேர்த்தியான இன்னிங்ஸை ஆடினர். இடையில் கேட்ச் ட்ராப்களையும் செய்து ஆஸ்திரேலியர்களும் இந்த கூட்டணிக்கு உதவினர். இருவரும் அரைசதத்தை கடந்தனர். ஜெய்ஸ்வால் சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். இன்றைய நாள் முடிவில் இந்தியா 172 ரன்களை எடுத்து விக்கெட் எதுவும் இழக்காமல் இருந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் 20 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் ஓப்பனிங் இணை ஒன்று 100 ரன்களை கடந்திருக்கிறது. இந்திய அணி மொத்தமாக 218 ரன்கள் முன்னிலைப் பெற்றிருக்கிறது.
நாளைய நாள் ஆட்டம் ரொம்பவே முக்கியம். பிட்ச் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்து எந்த அணி பக்கம் ஆட்டம் செல்லப்போகிறது என்பதும் தீர்மானம் ஆகும். பிட்ச்சில் வெடிப்புகள் ஏற்பட்டு சீரற்ற பவுன்ஸ் இன்னும் அதிகமாக வாய்ப்பிருப்பதாக வார்னர் சொல்லியிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...