Arjun: ``ஜென்டில்மேன் படமும் அப்படிதான்!'' - பட விழாவில் நடிகர் அர்ஜுன்
Autograph: "அதற்காக சேரன் என் கன்னத்தில் அடித்துவிட்டார்!" - 'திருப்பாச்சி' பெஞ்சமின் பேட்டி
தமிழ் சினிமா ஆக்ஷன் காமெடி என்று பயணித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் மனித மனங்களையும் உறவுச் சிக்கல்களையும் படம் முழுக்க உரையாடி வணிக வெற்றியை ஈட்டித்தருவதெல்லாம் அசாதாரணமான விஷயம்.
சேரன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆட்டோகிராஃப்' திரைப்படம் அதைச் செய்தது. நவம்பர் 14-ம் தேதி இத்திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது.

`என்னை நடிகனாக அடையாளப்படுத்திய படம்’
ரீ-ரிலீஸையொட்டி இத்திரைப்படம் தொடர்பாக 'ஆட்டோகிராஃப்' படத்தில் நடித்திருந்த பெஞ்சமினிடம் பேசினோம். கலகலப்பாக பேசத் தொடங்கியவர், "என்னை நடிகனாக அடையாளப்படுத்திய படம் 'ஆட்டோகிராஃப்'.
எனக்கு மட்டுமல்ல அந்தத் திரைப்படத்தில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பலருக்கும் அடையாளத்தையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் அது. ஆரம்பத்தில் நான் சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தேன்.
அப்போதுதான் சேரன் சார் என்னை அடையாளம் கண்டுகொண்டு, 'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். சென்னையில் இருக்கும்போது தினமும் மதிய நேரத்தில் சேரன் சாரின் அலுவலகத்திற்கு செல்வதுண்டு. எங்களை பசியோடு இருக்கவிட மாட்டார்.
ஏழை கலைஞர்கள் மீது மிகவும் பாசமாக இருப்பார். அதற்கு பிறகு 'ஆட்டோகிராஃப்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லி வாய்ப்பளித்தார். இரண்டரை மாதத்திற்குள் முடிக்க வேண்டிய படம் ஏழு மாதத்திற்கு இழுத்துவிட்டது.
கதையில் செந்திலும் நானும் செந்திலின் பள்ளிப் பருவத் தோழி கமலாவை பார்க்க செல்லும் காட்சி ஒன்று வரும்.
அந்தக் காட்சி 5 டேக்குகளுக்கு மேல் சென்றது. அப்போதெல்லாம் பிலிம் ரோல் என்பதால் ரோலுடன் பணமும் கரைந்துகொண்டே போனது.
சேரன் என்ன எதிர்பார்க்கிறார் என்று எனக்கு புரியவில்லை. ஆறாவது டேக்கில் என்னிடம் சொல்லாமல் சேரன் என் கன்னத்தில் அடித்துவிட்டார்.

ஏதாவது தவறு செய்துவிட்டோமா என்று நான் பார்க்க சேரன் 'கட்' என்று சொல்லிவிட்டு 'இந்த ரியாக்ஷன்தான் வேணும் பெஞ்சமின்.
இத வாங்கத்தான் இவ்ளோ நேரம் பாடுபட்டேன்' என்றார். அவருக்கு துளியும் கோபமில்லை. ஆனால், ஷாட் சரியாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். சேரன் சார் மனதில் இடம் பிடிப்பது மிகவும் சிரமம்.
படப்பிடிப்பின் போது உதயம் லாட்ஜில் தங்கி இருந்தோம். ஷூட் இல்லாத நேரத்தில் லாட்ஜின் மாடியில் வாக்கிங் போவோம். ஒருமுறை அப்படி போகும்போது ஏதோ ஒரு உருவம் கத்திக்கொண்டிருந்தது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.
அருகில் சென்று பார்த்தபோதுதான் நடிகை மல்லிகா கராத்தே பயிற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அப்போதே அவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருந்தார்.
அப்போது அவர் ஒன்பதாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தார். அப்போதே இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்தார் மல்லிகா.

ஒருமுறை மதிய உணவை முடித்துவிட்டு தென்னந்தோப்பு ஒன்றில் ஓய்வெடுத்தோம். தென்னை மரங்களை பார்த்ததும் இளநீர் குடிக்கத்தோன்றியது, யாருக்காவது மரம் ஏறத்தெரியுமா என்று விசாரித்தபோது அருகில் வந்த மல்லிகா படபடவென்று மரத்தில் ஏறி இளநீரை வாயில் கடித்துக்கொண்டு கீழே இறங்கினார்.
எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. மல்லிகா அவர் ஊரில் தென்னந்தோப்பு இருப்பதாகவும் பெண்கள் அங்கு மரம் ஏறுவதுண்டு என்றும் கூறினார், அந்த வயதில் மல்லிகா அப்படி இருந்ததைப் பார்த்து நான் மிரண்டு போனேன்.
மழைக்காலத்தில் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டோம். படப்பிடிப்பு கடும் சிரமமாக இருந்தது. தினமும் மழை குறுக்கிட்டது.
படத்தின் முதல் பாதியில் வரும் என்னுடைய காட்சிகள் இரண்டு நாட்களில் முடிக்கப்பட வேண்டியவை, 15 நாட்களுக்கு மேல் படம்பிடிக்க வேண்டியதாயிற்று.
படப்பிடிப்பை தற்காலிகமாக தள்ளிப்போடச் சொல்லி பலரும் சேரனிடம் கூறியபோதும் அவர் விடாப்பிடியாக படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் சென்றார்.
தாமதமாகும் ஒவ்வொரு நாளும் பட்ஜெட் கூடிக்கொண்டே போனது. படத்தை அவரே தயாரித்ததால் அவருக்கு முடிவெடுப்பதில் சுதந்திரம் இருந்தது.

ஆனாலும், நொந்துபோய்விட்டார். கிளைமாக்ஸ் காட்சிக்கு பல மண்டபங்களில் இடம் கேட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை. பிறகு ரஜினி சாரை சந்தித்து சூழலை புரியவைத்தோம்.
அவர் எங்கள் சிரமங்களை புரிந்து கொண்டு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பணம் ஏதும் கொடுக்காமலே ஷூட் செய்துகொள்ள வாய்ப்பளித்தார். ஆனால், மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டும்.
சேரனிடம் அப்போது போதுமான பணம் இல்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து, மண்டபத்தின் மேனேஜர் சத்தம் போட ஆரம்பித்தார். நான்காவது நாள் மிகவும் கத்திவிட்டார்.
நாங்களும் சமாதானம் செய்ய முயற்சித்தோம், முடியவில்லை. 'கரண்டு பில்லு கட்ட கூட காசில்லாம எதுக்கு படம் எடுக்குறீங்க' என்று சேரன் சார் காதுபடவே சொல்லிவிட்டார். எங்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது.
முக்கியமாக அன்று சேரன் சாரின் அப்பா அம்மா படப்பிடிப்பிற்கு வந்திருந்தார்கள். சேரன் மண்டபத்தில் கிளைமாக்ஸ் காட்சி எடுத்துக்கொண்டிருக்க, மேனேஜர் ஒரு பக்கம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.
சேரனின் அப்பா சமாதானம் செய்ய முயற்சித்தபோது, மேனேஜர் அவரையும் கத்தியிருக்கிறார். நான் வெளியில் வரும்போது சேரனின் அப்பா படியில் உட்கார்ந்திருந்தார். நாங்கள் அருகில் விசாரிக்கச் சென்றபோது அழுதுகொண்டிருந்தார்.

விசாரிக்கையில் 'கரண்டு பில் கட்டச் சொல்றாங்க. நானும் கையில இருந்ததையெல்லாம் கொடுத்துட்டேன். என்கிட்ட இதுதான் இருக்கு' என்று சில்லறையாக கொஞ்சம் பணத்தைக் காட்டினார்.
எட்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டியதிருந்தது. சேரனின் அப்பா ஒரு தியேட்டர் ஆபரேட்டர், 'இந்தப் படம் ஓடினால்தான் அவனுக்கு லைஃப், எங்களுக்கும் அப்படித்தான், ஓடுமா தம்பி' என்று அழுதுகொண்டே எங்களிடம் கேட்டார்.
சேரனின் தன்னம்பிக்கைக்கு இந்த படம் நூறு நாள் ஓடும் என்று ஆறுதல் கூறினோம். மாறாக, படம் 175 நாட்கள் ஓடியது.
படம் ஷூட் முடிந்து போஸ்ட் புரொடக்ஷனுக்கு மிகவும் சிரமப்பட்டார் சேரன். படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. அதன் பின்தான் புது தயாரிப்பாளர் ஒருவர் சேரன் மீது நம்பிக்கை வைத்து படத்தை விநியோகம் செய்ய முன்வந்தார்.
படம் வெளிவந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிப்படமான பின் எங்கள் அனைவருக்குமான சம்பள பாக்கியை நான்கு மடங்காக போட்டுக்கொடுத்தார் சேரன்.

பிறகு சேரனின் தந்தை ஆபரேடராக வேலை செய்த தியேட்டரையே விலைக்கு வாங்கி, அவரின் அப்பா ஆபரேட் செய்த புரொஜெக்டரை எடுத்து வந்து சென்னையில் இருந்த அலுவலகத்தில் வைத்துவிட்டார். அதற்கு தினமும் பூஜையும் செய்தார்.” என புன்னகையோடு முடித்துக் கொண்டார்.
- கோகுல்

















