Basics of Share Market 15: `இது கட்டாயம்' எண்ணிக்கை அடிப்படையிலான ஆய்வு எப்படி செய்ய வேண்டும்?
நேற்று ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு, எந்தெந்த தர அளவீடுகளை பார்க்க வேண்டும் என்று பார்த்தோம். இன்று, எண்ணிக்கை அடிப்படையிலான அளவீடுகளைப் பற்றி பார்ப்போம்.
எண்ணிக்கையில் முதலாவதாக மற்றும் முக்கியமாக, நிறுவனத்தின் வருமானம் மற்றும் வளர்ச்சியைப் பார்க்க வேண்டும். ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்குகிறதா... இல்லையா என்று காட்டும் முக்கிய அளவீடு இது. இதில் ஓராண்டு கால வருமானம் மற்றும் வளர்ச்சியை மட்டும் கணக்கில் கொள்ளக்கூடாது. ஆண்டுகணக்கிலான நிறுவனத்தின் வருமானம் மற்றும் வளர்ச்சியைக் கணக்கிடுவது தான் மிகவும் சரியானது.
அடுத்ததாக, ஒரு நிறுவனம் எவ்வளவு செலவு செய்கிறது... எதற்கு செய்கிறது என்பதைக் கட்டாயம் பார்க்கவேண்டும். காரணம், சில நேரங்களில் ஒரு நிறுவனத்தின் ஆண்டு செலவு அதிகமாக இருக்கும். 'என்ன இது...இந்த நிறுவனம் இவ்வளவு செலவு செய்கிறது அல்லது வருமனத்திற்கு மீறி செலவு செய்கிறது?' என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், அந்த செலவுகளை எதற்குச் செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது மிக அவசியம். ஒருவேளை, அந்த நிறுவனம் எதிர்கால வளர்ச்சிக்காகவோ அல்லது உள்கட்டமைப்பிற்காகவோ செலவளித்திருக்கலாம். இது அந்த நிறுவனத்தின் எதிர்கால வருமானத்தை மற்றும் வளர்ச்சியை கூட்ட தான் செய்யும்.
ஆனால், இதற்கு எதிர்ப்பதமாக, சில நிறுவனங்கள் தேவையில்லாத அல்லது ஆடம்பரமான செலவுகளையும்கூட செய்யும். அதனால், ஒரு நிறுவனம் செலவுகளை எதற்காகச் செய்கின்றன என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தச் செலவுகளை சரியான அளவில் தான் செய்கின்றனவா என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், முன்னரும் இப்படி எதாவது அதிக அல்லது ஆடம்பர செலவுகளை ஒரு நிறுவனம் செய்திருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
பின்னர், ஒரு நிறுவனம் ஆண்டுக்கணக்கில் எவ்வளவு லாபம் ஈட்டியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஏறுமுகமாக இருந்தால் நல்லது... இறங்குமுகமாக இருந்தால் முடிந்தளவு அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதைத் தவிர்க்கலாம். ஏறுமுகம், இறங்கு முகம் என்று இரண்டும் மாற்றி இருந்தால், எப்போது ஏறியிருக்கிறது... எதனால் இறங்கியிருக்கிறது என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்.
கடைசியாக, நிறுவனத்தின் சொத்து மற்றும் கடன்களைத் தெரிந்துகொள்ளுங்கள். நிறுவனத்தின் சொத்துகள் அந்த நிறுவனத்திற்கு ஆபத்தான காலங்களில் உதவுமா என்பதைப் பார்க்கவும். கடன் அதிகம் இருந்தால் வருமானத்தில் இருந்து அதிக வட்டி கடனுக்கே சென்றுவிடும். இதைக் கட்டாயம் கவனிக்க வேண்டும். மேலும் கடன் எதுக்காக வாங்கப்பட்டிருக்கிறது என்பதையும் பாருங்கள்.
ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது நேற்று கூறிய தர அளவீடுகளையும், இன்று கூறியுள்ள எண்ணிக்கையும் அளவீடுகளை ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கிலோ அல்லது லட்சக்கணக்கிலோ முதலீடு செய்யப்போகும் நிறுவனத்தைப் பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பது தான் இதற்கு முக்கிய காரணம். இதுவும், பங்குச்சந்தை முதலீட்டில் அடிப்படை.
நாளை: வருடாந்திர அறிக்கை பற்றி தெரிந்துகொள்வோமா?!