மணிப்பூரில் மேலும் 2 நாட்களுக்கு மொபைல் இணைய சேவை துண்டிப்பு!
BB Tamil 8 Day 47: `ரோஷம்னு ஒன்னு இருக்கா; நடிக்கிறா...' - வன்மம் கொட்டிய ஹவுஸ்மேட்ஸ்?!
ரோஸ்ட்டிங் டாஸ்க், கேப்டனுக்கான போட்டி, பெண்களுக்கு ஆண்கள் சமைத்துத் தந்தது போன்ற விஷயங்களால் இன்றைய எபிசோடு சற்று சலிப்பு இல்லாமல் நகர்ந்தது. ஆனால் சுவாரசியமாக மாறவில்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 47
ரணகளமாக ‘ரஞ்சிதமே’ பாடலுடன் பொழுது விடிந்தது. பாட்டரி தரும் போது ‘கூமுட்டை’ என்று பவித்ராவை முத்து சொல்லி விட, அப்போதைக்கு நிதானித்து பிறகு தனியாக வந்து தன் கோபத்தைக் காட்டிய பவித்ராவின் பொறுமை பாராட்டத்தக்கது.
மார்னிங் ஆக்ட்விட்டி. ‘யார் தனித்தன்மையுடன் ஆடுகிறார்கள், யார் தனித்தன்மையுடன் இல்லை, யார் ஒன்றுமே செய்யவில்லை’ என்று மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். ‘தனித்தன்மையுடன் இல்லை’ என்பதை ‘டீமாக ஆடுகிறார்’ என்று போட்டியாளர்களே பாசிட்டிவ்வாக மாற்றி விட்டார்கள்.
‘தனித்தன்மையுடன் ஆடுகிறார்’ என்கிற கேட்டகிரியில் முத்துவின் பெயர் பெரும்பான்மையாக வந்ததில் ஆச்சரியமில்லை. டீமாக ஆடுகிறார் என்கிற கேட்டகிரியில் கலவையான பெயர்கள் வந்தன. ‘ஒன்றுமே செய்யவில்லை’ என்கிற கேட்டகிரியில் ஏறத்தாழ 90 சதவிகிதம் பேர் வர்ஷினியைக் குறிப்பிட்டார்கள். ‘எனக்குத்தான் தெரியுமே’ என்கிற புன்னகையுடன் அவற்றை அமைதியாக ஏற்றுக் கொண்டார் வர்ஷினி.
வர்ஷினியை ரவுண்டு கட்டி அடித்த போட்டியாளர்கள்
வர்ஷினியை தனியாக அழைத்த ஜாக்குலின் “இங்க ஆடாமயே நிறைய பேர் இருக்காங்க. இருந்தாலும் உன்னை ஏன் சொல்றாங்கன்னா.. நீதான் சேஃப்பான சாய்ஸ். அதான். கவலைப்படாத” என்று ஆறுதல் சொல்ல “அதான் தெரியுமே!” புன்னகையை அங்கும் தவழ விட்டார் வர்ஷினி. ராணவ் கூட வர்ஷினிக்கு ஆறுதல் சொல்லுமளவிற்கு முன்னேறி விட்டார். “வந்த புதுசுல என்னையும் இப்படித்தான் பண்ணாங்க. நானும் இப்படித்தான் ஃபீல் பண்ணேன்” என்று ஆறுதல் சொல்ல “அதான் தெரியுமே.. நான்தான் சேஃப்பான சாய்ஸ். அதான்” என்று புன்னகையைத் தொடர்ந்தார் வர்ஷினி.
மக்களின் கருத்துக் கணிப்பின் படி “ஒருவேளைக்கு ஆண்கள் பெண்களுக்கு சமைத்துத் தர வேண்டுமாம். அதிலும் அவர்களின் பொருட்களில் இருந்துதான் சமைக்க வேண்டுமாம்”.. இந்த அறிவிப்பை வாசித்து விட்டு பெண்கள் அணி கும்மாளம் போட்டது. ஏனெனில் இந்த வாரத்தில் ஷாப்பிங் டாஸ்க்கில் பெண்கள் டீம் சொதப்பியதால் பிக் பாஸாக பார்த்து தரும் பொருட்களை வைத்துதான் அவர்கள் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியொரு சூழலில் சுவையான விருந்து என்றால் கொண்டாட்டம்தானே?! “ஒருவேளை சாப்பாடுதானே.. செஞ்சிட்டா போச்சு.. அதுக்கேன் இப்படி குதிக்கிறாங்க?” என்பது மாதிரி முகத்தைச் சுளித்து ஆச்சரியமாகப் பார்த்தார் முத்து.
“நமக்கு சாப்பாடு இல்லைன்னு தெரிஞ்ச போது பிக் பாஸ் கிட்ட ரெக்வெஸ்ட் பண்ண அந்த நல்ல உள்ளங்களுக்கு பதிலுக்கு நாம சிறப்பா செஞ்சி தரணும்” என்று முத்து சொன்னது நல்ல விஷயம். சொன்னபடியே பன்னீர் பிரியாணி, முட்டை, கத்தரிக்காய் சட்னி போன்றவற்றை தயார் செய்து “இதுல எங்க பிரியத்தையும் அன்பையும் கலந்து செஞ்சிருக்கோம்” என்று முத்து சொலல, அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட காட்சி பார்க்க நன்றாக இருந்தது.
“செம டேஸ்ட்டா இருக்கு” என்று பெண்கள் ரசித்து சுவைத்து சாப்பிட்டார்கள். வீடுகளில் கூட, வருடம் முழுக்க சமைத்துத் தரும் பெண்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது ஆண்கள் சமைத்துத் தந்து அவர்களை மகிழ்விக்கலாம். பெண்களுக்கான சிறந்த ட்ரீட்டாக அதுதான் இருக்கும். (ஐயா.. ஊருக்கு அட்வைஸ் பண்றவரே.. நீங்க இதை மொதல்ல பண்றீங்களா?!)
சிறப்பாக பங்கேற்ற போட்டியாளர்களாக தீபக் மற்றும் பவித்ரா
“நாம ஒரு ப்ளோல ஏதாவது வார்த்தைகளை விட்டுடறம்ல.. அதையெல்லாம் மக்கள் நிச்சயம் புரிஞ்சிப்பாங்க.. இங்க இருக்கிற சிட்யூவேஷன் அப்படின்றதை அவங்களால உணர முடியும்” என்றெல்லாம் வியாக்கியானம் சொன்ன ஜாக்குலின் “நல்ல தண்ணி. கெட்ட தண்ணி’’ என்றெல்லாம் உதாரணம் சொல்லி விட்டு சாப்பாட்டிற்காக அலை மோதும் சாச்சனாவின் பசியைப் பற்றி உதாரணம் காட்டி பேச ஆரம்பிக்க, சாச்சம்மா தேவி அதற்காக கோபித்துக் கொண்டு விட்டார். “சாப்பாட்டைப் பத்தி பேசாதீங்க” என்று சாச்சனா முகத்தைக் காட்ட ஜாக்கும் அதனால் அப்செட்.
இந்த வாரம் முழுவதும் சிறப்பாகப் பங்கேற்றவரை இரு அணியினரும் தோ்ந்தெடுக்க வேண்டும் என்கிற வழக்கமான சடங்கு ஆரம்பித்தது. ஆச்சரியகரமாக பெண்கள் அணியில் பவித்ராவின் பெயரை பலரும் சொன்னார்கள். ராஜா ராணி டாஸ்க்கில் ராஜகுரு பாட்டியாக முதுகை வளைத்தபடி வலம் வந்து வித்தியாசம் காட்டினாராம். ‘தன்னுடைய பங்களிப்பு கவனிக்கப்படவில்லை’ என்று நீண்ட வாரங்களாக வருந்திக் கொண்டிருந்த பவித்ரா ‘களுக். களுக்’ என்று சிரித்தபடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆண்கள் அணியில் தீபக்கின் பெயர் பல முறை அடிபட்டது. அறிவு சார்ந்த டாஸக்குகளில் கலக்கினாராம். தளபதியாகவும் அசத்தினாராம். ‘சிறந்த போட்டியாளர்’ என்று அருணின் பெயரை ஆனந்தி சொன்ன போது ‘ஓஹோ.. கதை அப்படிப் போகுதா’ என்கிற மாதிரி பலரும் கிண்டலடித்தார்கள். (ராஜா ராணி டாஸ்க்கில் அருணின் காதலியாக ஆனந்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) சிறந்த போட்டியாளர் வரிசையில் ராணவ்வின் பெயரும் இரண்டு முறை வந்தது. மாற்றம். முன்னேற்றம். அழகுமணி.
ஆக.. தீபக்கும் பவித்ராவும் தலைவர் போட்டிக்கு மோதுவார்கள். இப்போதே அதையும் சொல்லி முடித்து விடலாம். பிறகு அந்த டாஸ்க் ஆரம்பித்தது. இரு பக்கமும் இருக்கிற சாய்வாக இருக்கும் பலகையில் பந்தை உருட்டி விட்டு ஒன்று திரும்பி வரும் போது தள்ளி விட்டு அது போய் விட்டு வருவதற்குள் இன்னொரு பந்தையும் இன்னொரு பந்தை தள்ள வேண்டும். ஒரு EMI-ஐ கட்டி விட்டு நிமிர்வதற்குள் இன்னொரு செலவு வரும் போது மிடில் கிளாஸ் ஜனம் அதையும் சமாளிக்க வேண்டும் அல்லவா? அப்படியொரு அவஸ்தையான டாஸ்க்.
இதில் பவித்ரா ஆடியது ஆரம்பக்கட்டத்தில் சிறப்பாக இருந்தது. மூன்று வாய்ப்புகளில் தீபக் இரண்டை தவறவிட்டார். எனவே பவித்ரா ஜெயிக்கக்கூடும் என்கிற மாதிரியான நிலைமை. ஆனால் பதட்டம் காரணமாகவோ, என்னவோ, இறுதியில் அவர் சொதப்பி விட நூலிழையில் தீபக் ஜெயித்து கேப்டன் ஆனார். பவித்ராவை விடவும் தீபக் காப்டனாக இருந்தால் நிறைய சுவாரசியமான விஷயங்கள் நடக்கும் என்று தோன்றுகிறது. பார்ப்போம். பெண்களின் சம்பிரதாயப்படி, போட்டியில் தோற்றதற்காக பாத்ரூமில் மறைந்து அழுதார் பவித்ரா.
சவுந்தர்யாவிற்கு வழங்கப்பட்ட கொடுமையான தண்டனை
இந்த வாரத்தில் சிறப்பாகப் பங்கேற்காதவர்கள் கேட்டகிரியில் சிவகுமாரும் சவுந்தர்யாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களுக்கான தண்டனை சற்று கொடுமையாகத்தான் இருந்தது. இவர்களை இருவரையும் பொதுவில் அமர வைத்து மற்ற அனைவரும் ரோஸ்ட் செய்ய வேண்டுமாம். பாரபட்சமெல்லாமல் பார்க்காமல் வெளிப்படையான கருத்துக்களைச் சொல்ல வேண்டுமாம். இவர்கள் பதிலுக்கு எதுவும் சொல்லக்கூடாது. இதற்கான டாஸ்க் பஸ்ஸர் அடிக்கும் போதெல்லாம் இந்த வறுத்தெடுத்தலை செய்ய வேண்டுமாம். ‘அவ்வை சண்முகி’ டெல்லி கணேஷ் பேசும் வசனம் மாதிரி “ஏண்டா.. தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிக்கறீங்க?”
சிவகுமாராவது பாவம் என்று விட்டு விட்டார்கள். ஆனால் சவுந்தர்யாவை வறுத்தெடுக்க சான்ஸ் கிடைத்தால் மக்கள் சும்மா விட்டு விடுவார்களா? எனவே தரமான சம்பவமாகச் செய்தார்கள். முதலில் வந்த முத்து, சுவுந்தர்யாவை நோக்கி “நீங்க எப்படித்தான் ஏழாம் வாரம் வரைக்கும் வந்தீங்கன்னே ஆச்சரியமா இருக்கு” என்று ஆரம்பித்து “பயப்படாம விளையாடுங்க சிவா” என்று முடித்தார்.
அடுத்து எழுந்த சாச்சனா.. “நீங்க பண்றதெல்லாம் பைத்தியக்காரத்தனமா இருக்கு.. கேலவமா இருக்கு” என்று அர்ச்சனை செய்ய வேறு வழியில்லாமல் புன்னகைத்தார் சவுண்டு. “நீங்க அன்பா இருக்க இங்க வரலை” என்று சிவாவை மயிலிறகால் வருடிக் கொடுத்தார் சாச்சனா. அடுத்து எழுந்த மஞ்சரி “பிக் பாஸ் வீட்டை அவங்க அப்பாவோட பேக்கரின்னு நெனச்சிட்டாங்க போல. அவங்க வெச்சதுதான் சட்டம்ன்ற மாதிரி” என்று இறங்கி அடிக்க “அய்யோ..’ என்று வாய்க்குள் முனகிக் கொண்டார் சவுண்டு.
ஆனந்தி சொன்ன கமென்ட்டிற்கு பிக் பாஸே அகம் மகிழ்ந்து ‘பிராவோ’ என்று பாராட்டினார். “இங்க இரண்டு அணி இருக்கு. ஆனா சவுந்தர்யா மட்டும் மூணாவதா ஒரு அணியை உருவாக்கி அங்க தனி ராஜாங்கம் பண்றாங்க” என்று ஆனந்தி வித்தியாசமாக சொன்னதை பிக் பாஸ் ரசித்திருக்க வேண்டும். வெளிப்படையாக திட்டுவதை விடவும் சர்காஸமாக செய்வதுதான் ரசிக்கத்தக்கது. “நீயென்ன டான்ஸ் ஆடத்தான் வந்தியா. நீ தர்ற எக்ஸ்பிரஷன்லாம் வெச்சு நிறைய இமோஜி பண்ணலாம்” என்றார் ஜாக்குலின்.
பதிலுக்குப் பதில் பழிவாங்கிய சவுந்தர்யா
ரோஸ்ட்டிங் டாஸ்க்கிற்கு ஒரு பிரேக் வந்தது. தன்னைத் திட்டியவர்களை பதிலுக்கு பழிவாங்குவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டார் சவுந்தர்யா. எல்லைக்கோடருகே ஒரு சேர் போட்டு, கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஆண்கள் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து தானும் ஒரு ரோஸ்ட்டிங்கை ஆரம்பித்தார். எல்லோருடைய பலவீனமான புள்ளிகளையும் தொட்டு சவுண்டு சரோஜா பாணியில் இறங்கி அடிக்க, ஆண்களோ. ‘பேசு.. பேசு.. இன்னமும் நல்லாப் பேசு’ என்கிற மாதிரி நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்.
ஆனால் சவுந்தர்யாவின் இந்த ரிவஞ்ச் டாஸ்க் சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல, புத்திசாலித்தனம் அற்றதும் கூட. ஏனெனில் சவுந்தர்யா மற்றும் சிவகுமாருக்கான தண்டனை இன்னமும் முடியவில்லை. பஸ்ஸர் அடிக்கும் போதெல்லாம் மக்கள் வந்து திட்டுவார்கள். அவர்களை தூண்டி விடுவது மாதிரி செய்து சொந்த செலவில் சவுந்தர்யா சூன்யம் வைத்துக் கொண்டார். சவுந்தர்யாவின் குரலை வைத்து ஜெப்ரி செய்த கிண்டலுக்கு, சவுந்தர்யா உட்பட பலரும் சிரித்தாலும் அதுவும் ரசிக்கப்படக்கூடாத, கண்டிக்கத்தக்க கேலிதான்.
ரோஸ்டிங் டாஸ்க்கிற்கான பஸ்ஸர் மீண்டும் அடித்தது. மக்கள் உற்சாகமாக கொலைவெறியுடன் எழுந்து வந்தார்கள். “ஹேரை திருப்பித் திருப்பி நீ பண்றதெல்லாம் மொக்கையா, கேவலமா இருக்கு’ என்று சவுந்தர்யாவை நோக்கி பேசினார் அன்ஷிதா. ஒரு மாறுதலுக்காக சிவக்குமாரை வறுத்தெடுத்த தர்ஷிகா, “ரோஷம்ன்ற வார்த்தை உங்க டிக்ஷனரில இருக்கா.. இல்லையா.. வேணும்ன்னா எங்க கிட்ட உப்பு வாங்கி போட்டு சாப்பிடுங்க” என்றெல்லாம் இறங்கி அடித்தார். ஆனால் இந்த ஸ்கெட்ச் சிவாவிற்கு இல்லையாம். அவரை டாமினேட் செய்யும் தீபக்கிற்கான மறைமுக இடித்துரைத்தலாம்.
அடுத்து எழுந்த வர்ஷனி “நீங்க என்ன லைப்ரரில வந்து உக்காந்த மாதிரி இருக்கு” என்று சிவாவை கேட்டது சுவாரசியமான கமெணட். சவுந்தர்யாவை ஒரு ரவுண்டு திட்டி அமர்ந்த வர்ஷினி அப்போதும் கொலைவெறி தணியாமல் இரண்டாவது முறையும் எழுந்து ‘ஜால்ரா தட்டித் தட்டியே முன்னுக்கு வந்துடலாம்ன்னு பார்க்கறியா?” என்று அமர்ந்தார்.
இப்படியாக கேப் விட்டு கேப் விட்டு மக்கள் அடித்துக் கொண்டேயிருந்தார்கள். பிக் பாஸ் வேறு ஒரு கட்டத்தில் ‘பஸ்ஸர் அடிச்சாச்சு. ஏன் ரோஸ்ட்டிங் ஆரம்பிக்கலை?” என்று கேட்டு கலாய்த்தார். அந்த அளவிற்கு சாஃப்ட்டாக பேசுகிறார்களாம். “என்ன இருந்தாலும் சிவாவைப் பற்றி தர்ஷிகா அப்படி பேசியிருக்கக்கூடாது” என்று ஜாக்குலின் வருத்தப்பட்டார். சிவாவை சந்தித்த தர்ஷிகா, தான் பேசியதின் நோக்கத்தை விவரித்தார்.
தீபக் - சிவக்குமார் - தல - தளபதி சந்திப்பு
தன்னை அமர வைத்து பலரும் ரவுண்டு கட்டித் திட்டியதால் அப்போதைக்கு சிரிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டாலும் தனிமையில் வந்து அழுதார் சவுந்தர்யா. அவருக்கு ஆறுதல் சொன்னார் ஜாக்குலின். “நான் அழறத பார்த்து சிரிப்பா வருதாம்.. சாச்சனா சொல்றா..இவ்வளவா அவ மனசுல இருக்கும்?” என்று தேம்பித் தேம்பி அழுத சவுந்தர்யாவை சமாதானப்படுத்தினார் ஜாக்குலின். சவுந்தர்யாவைப் பாாக்க பரிதாபமாக இருந்தாலும் அவர் செய்த சேஷ்டைகள் அப்படி. தன்னுடைய அலட்சியமான ரியாக்ஷன்கள், கோபம், கத்தல் போன்றவற்றால் பல விரோதிகளைச் சம்பாதித்துக் கொண்டார். கர்மா திரும்ப வந்து தாக்கும் போது ‘நான் யாருக்கு என்ன பாவம் பண்ணேன்?’ என்று அனத்துவதே பலருடைய இயல்பு.
தீபக்கைப் பற்றி பெண்கள் அனைவரிடமும் புறணி பேசி காலம் தள்ளிக் கொண்டிருந்தார் சிவகுமார். தீபக் செய்யும் டாமினேட்டிங் பற்றி அவரிடமே தனியாக அமர்ந்து எப்போதோ பேசியிருக்கலாம். இப்போது தர்ஷிகா சொன்ன ஆக்ரோஷமான கமென்ட் சிவாவை உசுப்பி விட்டிருக்க வேண்டும். எனவே ஒருவழியாக தீபக்கை நேராக சந்தித்து அவர் பேச அமர்ந்தது நல்ல விஷயம்.
“பந்து டாஸ்க்ல நான் சொதப்பிட்டேன்தான்… ஆனா அதுக்கு ‘யோவ்.. என்னய்யா பண்றேன்றே மாதிரி கோபப்பட்டீங்க. எங்க வீட்லலாம் இதைப் பார்த்துட்டு இருப்பாங்க. மண்டைக்குள்ள சுர்ருன்னு ஏறுச்சு.. இருந்தாலும் அடக்கிக்கிட்டேன்” என்று சிவா சொன்னதையெல்லாம் பொறுமையாக கேட்ட தீபக், “ஓகே.. இனிமே அப்படிப் பேசாம இருக்க டிரை பண்றேன்.. ஸாரி. இப்பவாவது ஓப்பன் ஆனீங்களே.. .” என்று சமாதானக் கையை நீட்டியது நல்ல விஷயம். அவ்வளவுதான். எளிதாக முடிந்து விட்ட விஷயத்தை சிவா மனதிலேயே வைத்து புழுங்கிக் கொண்டிருந்தது அவருக்குத்தான் உளைச்சலாக இருந்திருக்கும். தீபக்கும் இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தார் போல.
சவுந்தர்யாவின் குரலை மிமிக்ரி செய்த ஜெப்ரி - விசாரணை பாயுமா?
ரோஸ்ட்டிங் டாஸ்க் பற்றி சவுந்தர்யா அழுதாலும் அதை முதிர்ச்சியோடு ஏற்றுக் கொண்டார் சிவகுமார். “இது இப்படித்தான் இருக்கும்ன்னு தெரியும். ஒரு மாதிரி அனலைஸிங்காதான் பார்க்கறேன்” என்று ஜாக்குலினிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சிவா. பிறகு சவுந்தர்யாவிடம் பேசும் போது “உன் குரலை வெச்சு ஜெப்ரி கிண்டல் பண்ணது சரியில்லை. எனக்கு அதை விடவும் நல்லா மிமிக்ரி பண்ண வரும். ஆனா நான் செய்ய மாட்டேன்” என்று சிவா சொல்ல “அவன் என் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுதானே பண்றான்?” என்று அபத்தமாக சொன்னார் சவுண்டு.
“அப்படியே இருந்தாலும் வெளில இருந்து பார்க்க மக்களைப் பத்தி நெனக்கணும்னுல்ல. அவங்க கிட்ட எல்லாம் பர்மிஷன் வாங்கிட்டானா.. இது தவறான விஷயம்” என்று சிவா சொன்ன விளக்கம் சிறப்பானது. வீக்கெண்டில் ஜெப்ரி மீது நிச்சயம் விசாரணை பாயும்.
“பாவம் சவுந்தர்யா அழறா.” என்று தர்ஷிகாவும் ஆனந்தியும் வருத்தப்பட “நீங்க வேற.. எப்ப சிரிக்கணும்.. எப்ப அழணும்.. எப்ப அழுதா.. அனுதாபமா மாறும்.. எல்லாக் கணக்கும் அவளுக்குத் தெரியும்.” என்று அருண் சொன்னது உண்மையாகவும் இருக்கலாம். யாராலும் விளங்கிக் கொள்ள முடியாத அல்ஜீப்ரா கவிதை சவுந்தர்யா. அவள் அப்படித்தான்.