இருவரி கவிதைக்குச் சிறையா? பர்ஷாஸ்ரீ புராகோஹைன்! கவிதைதான் குற்றம் - 8
BB Tamil 8 Day 54: தீரா காதல்; தொடர் அழுகை - ரணகளமாகும் கிச்சன் ஏரியா
பிக் பாஸ் வீட்டின் சர்ச்சைகளுக்கு உணவுதான் பெரும்பாலும் அடிப்படையான கச்சாப்பொருளாக இருக்கும். சாப்பாடுதான் பெரும்பாலான சண்டைகளை உற்பத்தி செய்யும். அந்த வகையில் இன்றைய எபிசோடு ரணகளமாக இருந்தது.
இன்றைய நாளின் ஹீரோயின் நிச்சயமாக மஞ்சரிதான். ஒரு பக்கம் அனைவரிடமும் மல்லுக்கட்டி சுழன்று சுழன்று போராடினார். இன்னொரு பக்கம் இம்சை ராணியாகவும் இருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 54
“சவுண்டு தனியா விளையாடினாலே சூப்பரா ஆடுவா. எதுக்கு இந்த ரயானைக் கட்டிக்கிட்டு அழறான்னு தெரியல” என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஆனந்தி. விஷால் - தர்ஷிகா, ராணவ் - பவித்ரா, ரயான் - சவுந்தர்யா என்று மூன்றுவிதமான டிராக்குகள் வீட்டுக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன. மூன்றுமே வேஸ்ட். “ஜாக்குலின் கிட்ட பேசவே எனக்குப் பிடிக்கலை” என்று முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தார் அன்ஷிதா.
‘தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?’ என்பது ஒரு காலத்திய அரசியல் சூழலில் பிரபலமான பொன்மொழி. அது போல கிச்சன் டிபார்ட்மெண்டில் இருப்பவர்களுக்கு மீதமான உணவு ஒரு போனஸ். அந்த வகையில் ஒரு எக்ஸ்ட்ரா சப்பாத்தியை தர்ஷிகாவிற்கு ‘காதல் தானம்’ செய்து கொண்டிருந்தார் விஷால். (இந்தக் கொசுத் தொல்லை தாங்கலை நாராயணா’ என்கிற மாதிரிதான் இருக்கிறது!). சப்பாத்தியுடன் இருந்த எக்ஸ்ட்ரா சைட்டிஷ்ஷைப் பார்த்த மஞ்சரி “என்னத்த தனியா வெச்சு திங்கறீங்க?” என்று கேட்டார். அவர் கேட்டது கேஷூவலாக இருந்தாலும் ‘என்னத்தையோ நீங்க மட்டும் தின்றீங்க?’ என்கிற புகார் உள்ளே மறைந்திருந்தது.
‘நொய்.. நொய்’ என்று கேள்வி கேட்கும் மஞ்சரியைப் பார்த்தாலே அருண் காண்டாகி விடுகிறார். ‘இந்த வீட்ல இருந்து வெளிய போனாக்கூட பார்க்க விரும்பாத முகம்” என்கிற அளவிற்கு மஞ்சரி குறித்து எரிச்சலாகிக் கொண்டிருந்தார். “விடு மச்சான்.. எல்லோருக்கும் சாப்பாடு போட்டுட்டு கடைசில நீங்க சாப்பிடறதெல்லாம் கிரேட்” என்று அருணிற்கு சான்றிதழ் தந்து கொண்டிருந்தார் விஷால்.
இந்தத் துண்டுக்காட்சிகளையெல்லாம் பிக் பாஸ் எடிட்டிங் டீம் ஏன் காட்டிக் கொண்டிருக்கிறது என்றால் அடுத்த நாளின் சண்டைக்கான விதை இதில்தான் இருக்கிறது.
சின்ன ரொட்டிக்காக, லார்ஜ் பிட்ஸா அளவிற்கு பெரிய சண்டை
நாள் 54 விடிந்தது. ‘பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லி வாசம்’ என்கிற ரகளையான பாடல் ஒலித்தது. வேகமான தாளயிசை கொண்ட பாடலாக இருந்தாலும் அதைக் கவிதை மாதிரி ஒலிக்க வைக்கும் மேதமை இளையராஜாவிடம் இருக்கிறது.
புரமோஷன் என்றால் பொதுவாக மாலையில்தான் நடக்கும். காலையிலேயே பாடல் சத்தம் கேட்டது. ‘பாராசூட்’ என்கிற வெப்சீரிஸிற்காக சக்தி என்கிற சிறுவனும் ‘கயல்’ என்கிற சிறுமியும் உள்ளே வந்தார்கள். பையன் புத்திசாலி போலிருக்கிறது. ‘நான் பிக் பாஸ் பார்க்கறதில்ல’ என்றது சிறப்பு. ‘எங்க பாட்டிக்கு சவுந்தர்யாவைப் பிடிக்கும்’ என்று சொல்ல, ‘பாட்டிகளை இம்ப்ரஸ் செய்த சவுந்தர்யா’ என்று கிண்டலடித்தார் முத்து.
குழந்தைகளுடன் ஆடிய டாஸ்க்கில் குழந்தையாகவே மாறி ரஞ்சித் செய்த வேடிக்கை பார்க்க சுவாரசியமாக இருந்தது. குழந்தைகள் என்பதால் பலரும் விட்டுத் தந்து ஆடினார்கள். “நான் பெரிசானப்புறம் என்னையும் கூப்பிடுங்க பிக் பாஸ்” என்று இப்போதே கர்ச்சீப் போட்டு விட்டுச் சென்றான் சக்தி. (நல்லா வருவே தம்பி!).
கிச்சன் டீமில் ஒரு சண்டைக்கான மேகங்கள் திரள ஆரம்பித்தன. அனைவருக்கும் பிரெட் ஆம்லேட் தயார் செய்து கொண்டிருந்தார்கள். இன்னமும் சில பேருக்கு தயார் செய்ய வேண்டியிருந்தது. இந்த நிலையில் தரப்பட்ட உணவு போதாது என்பதாலும் எக்ஸ்ட்ரா பிரெட் கொடுங்க என்று சாச்சனா கேட்டதாலும், ஆஸ்பிட்டல் வார்டு பாய் மாதிரி ஒரு பிரெட் துண்டை அனைவருக்கும் விநியோகம் செய்தார் அருண்.
இன்னமும் சிலருக்கு சமைக்க வேண்டும். கிச்சன் டீம் இன்னமும் சாப்பிடவில்லை. அடுத்தது மதிய வேளைக்கான உணவு ஏற்பாட்டை கவனிக்க வேண்டும். இப்படியொரு சூழலில் எக்ஸ்ட்ரா ரொட்டியை டோஸ்ட் செய்து தர நேரமில்லை என்று அருணும் ஜாக்குலினும் சொன்னது நியாயமான காரணம். மறுப்பேயில்லை. இந்த நோக்கில் கிச்சன் டீமின் உழைப்பும் தியாகமும் போற்றத்தக்கது.
கிச்சன் டீம் அதிகாரத்தைக் காப்பாற்ற நினைக்கிறதா?
ஆனால் - எக்ஸ்ட்ரா பிரெட்டை டோஸ்ட் செய்வதற்காக சவுந்தர்யாவையோ தர்ஷிகாவையே ஒதுக்குவதற்கு ஏன் அருணிற்கு மனம் வரவில்லை? கிச்சன் அதிகாரத்தை முழுக்க முழுக்க தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க நினைக்கிறார்களா? வெறும் ரொட்டியை சாப்பிட்டால் தொண்டை வலிக்கும். தோசைக்கல் இருக்கிறது. செய்ய ஆளும் இருக்கிறார். பின் அடுப்பை ஒதுக்கித் தருவதில் என்ன பிரச்சினை? என்று மஞ்சரி கேட்பதில் நியாயமுள்ளது.
இதை மஞ்சரி கேட்டதுதான் அருணிற்கு பிரச்னை. எனவே சர்காஸமான உடல்மொழியில் அவர் கையெடுத்துக் கும்பிட, அந்த உடல்மொழி மஞ்சரியை டிரிக்கர் செய்ய, விடாமல் வாக்குவாதம் செய்தார். ஒரு சூழலை நயமாக கையாளாமல் எதிர் தரப்பை இம்சிக்கும் வகையில் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பதில் மஞ்சரி, இன்னொரு ‘அருணாக’ இருக்கிறார். எனவே வாக்குவாதம் பலமாக முற்றியது.
‘பிரச்னை நம்மிடம் வந்த பிறகு பார்ப்போம். அதுவரை வேடிக்கை பார்ப்பதுதான் சிறந்தது’ என்கிற பாலிசியில் அமர்ந்திருந்தார் தீபக். அதுதான் தலைமைக்கு அழகும் கூட. பிரச்னை வந்தது. இத்தனை நாட்கள் அஹிம்சை முறையைக் கடைப்பிடித்த கேப்டனுக்குள் ‘ஆதிக்கவாதி’ தீபக் விழித்துக் கொள்ள “கையெடுத்துக் கும்பிடறது தப்பான பாடி லேங்வேஜ் இல்ல.. என்ன இப்ப…?” என்று மஞ்சரியிடம் கோபமாக எகிறத் துவங்கி விட்டார். நாம் இத்தனை நாட்கள் பொறுமையாக விளக்கம் சொல்லியும் மக்கள் நம்மை குடாய்கிறார்களே என்று அவர் காட்டிய பொறுமை இன்று வெடித்து விட்டது.
பாட்சாவாக மாறிய கேப்டன் தீபக்
இதே சூழலில் முத்துவாக இருந்தால் மஞ்சரியைப் போல் “டென்ஷன் ஆகி இருக்க மாட்டார். வேறொரு சந்தர்ப்பத்தில் வாழைப்பழத்தில் கடப்பாறையை ஒளித்து வைத்து குத்தி விடுவார். “வேலை செய்யறதுதான் கஷ்டம். அந்த இடத்துல இருந்து யோசிச்சிப் பாருங்க.” என்றெல்லாம் தீபக்காக கத்தியவர், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சமநிலையை அடைந்து ‘கேப்டனாக’ திரும்பி வந்த டிராமா சுவாரசியமானது. “நாங்க இங்க இருக்கட்டுமா?” என்று அருண் கேட்க “இருங்க.. இல்லாட்டி போங்க. என்னை விடுங்கடா” என்கிற மாதிரி தனக்குள் காற்று ஊதிக் கொண்ட தீபக்கின் எமோஷன் காட்சியைப் பாருங்கள். பிக் பாஸ் ஏன் scripted இல்லை என்பதற்காக உதாரணக் காட்சி இது. இப்படியெல்லாம் யாராலும் நடித்துக் காண்பிக்க முடியாது.
“இப்ப நீங்க கேப்டனா.. தீபக்கா?” என்று மஞ்சரி கேட்கும் போது “போன வாரம் நீங்க என்ன பண்ணீங்க?” என்று கேட்டு சிறப்பாக லாக் செய்தார் தீபக். தளபதியாகவும் மஞ்சரியாகவும் எதுவென்றே தெரியாமல் மாறி மாறி அந்நியனாக கடந்த வாரத்தில் நடமாடிக் கொண்டிருந்தார் மஞ்சரி.
கேப்டனாக அவதாரம் மாறி சபையைக் கூட்டிய தீபக் “என்ன பிரச்னை இப்ப சொல்லுங்க” என்று நிதானமான பாவனையுடன் பேச ஆரம்பித்தார். “கிச்சன் வேலைல இருக்கற கஷ்டத்தைப் புரிஞ்சுக்கணும். அரிசி குழைஞ்சா மட்டும் கேக்கத் தெரியுதுல்ல” என்று ஜாக்குலின் பொங்கினார். அப்போதும் மஞ்சரி எதையோ சொல்ல சவுந்தர்யாவிற்கும் இவருக்கும் முட்டிக் கொண்டது. சவுண்டிற்குள் இருக்கும் ‘பேட்டை ரவுடி’ வெளியே வந்து விட ‘மஞ்சரி பொய்.. மஞ்சரி பொய்’ என்று ஹிஸ்டீரியா வந்தது போல் கத்திக் கொண்டிருந்தார்.
அணியுரை நன்றியுரைல்லாம் வேணாம் - முத்துவைக் கலாய்த்த அருண்
“இந்த இடத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அதைப் பின்பற்றுங்க. கிச்சன் டீம் வேலை செய்யும் போது டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு ஏற்கெனவே சொன்னேன்” என்று உரையாடலை ஆரம்பித்தார் தீபக். முதலில் பேச எழுந்த முத்து “அதாகப்பட்டது மக்களே” என்று கதாகாலட்சேப மொழியில் நிதானமாக ஆரம்பிக்க “அண்ணே.. இந்த வாழ்த்துரை நன்றியுரைல்லாம் வேணாம்.. விடிஞ்சுடும்.. நேரா மேட்டருக்கு வரச் சொல்லுங்க” என்று அருண் நக்கல் செய்த காட்சி சுவாரசியமானது.
“அடுப்பு இருந்தது. கல்லும் இருந்தது. செய்ய ஆளும் இருந்தாங்க. என்ன பிரச்னை?” என்று முத்து கேட்டது சரியான கேள்வி. “நீங்க என்ன வேணா கேளுங்க. கிச்சன் டீம் பண்ணித் தருவாங்க” என்று முன்னரே வாக்களித்தவர் தீபக்தான். இப்போது தங்களின் ஆட்களின் பக்கமாக அவர் சாய்வது பாரபட்சமாகத் தெரிகிறது. மஞ்சரி தன் தரப்பைச் சொல்லி முடித்ததும் “உங்களால இத்தனை அமைதியாக கூட பேச முடியுமா?” என்று குண்டூசியால் குத்தினார் தீபக்.
“ஒளிச்சு வெச்சு திங்கறீங்களான்னு கேக்கறாங்க சார். அழுகையா வருது. வெறும் பாத்திரத்தை வெளியே தூக்கிட்டுப் போறோம். ஆனா யாராவது தப்பா நெனச்சிடுவாங்களோன்னு பதட்டமா இருக்கு. நேத்து நைட் அழுதேன்” என்று அருண் சொன்னது நெகிழ்வான காட்சி. “தர்ஷிகா பேசுங்க.. நான் அப்படியா சொன்னேன்?” என்று சாட்சிக்கு தர்ஷிகாவை அழைத்தார் மஞ்சரி. “நீ அப்படிச் சொல்லலதான். ஆனா கேட்கும் போது ஒரு மாதிரியா இருந்தது” என்று இழுத்தார் தர்ஷிகா. “நாங்க எதையும் ஒளிச்சு வெச்சு சாப்பிடல. இது சத்தியம்” என்று சென்டிமென்ட்டை கூட்டினார் அருண்.
தன் மேல் குற்றச்சாட்டு சொல்லப்பட்டதைத் தாங்க முடியாமல் அழுதார் மஞ்சரி. ஏறத்தாழ ஒட்டுமொத்த வீடும் அவருக்கு எதிராக அணி திரண்டது. இதற்கு நடுவில் ஒரு காட்சி. நின்று கொண்டு பேசிய தீபக்கிற்கு முதல் பென்ச் மாணவன் மாதிரி “உக்காருங்க சார்” என்று சேர் போட்டார் சவுந்தர்யா. சார்ஜெண்ட் பதவிக்கு விசுவாசம். இதே சவுந்தர்யா, தீபக்குடன் பயங்கரமாக மோதப் போகும் காட்சியை விரைவில் காணலாம். “எல்லோரும் மஞ்சரியை கார்னர் பண்ற மாதிரி இருக்கு” என்று ஆனந்தி சொன்னது உண்மை.
மஞ்சரி கார்னர் செய்யப்பட்டாரா?
“என் பக்க நியாயத்தை கேப்டன் கேக்கவேயில்ல. அவங்க சைடாவே பேசறாரு. எனவே ஒரு பூவைக் கட் பண்ணப் போறேன்” என்று கோபத்தில் முடிவெடுத்தார் மஞ்சரி. “நீங்க அமைதியா கேட்டிருந்தா, இந்தப் பிரச்சினையே வந்திருக்காது” என்று தீபக் பதில் சொன்னதும் சரியானது. ஆனால் சாச்சனா மாதிரியே கேப்டனின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட மஞ்சரி, விடாப்பிடியாக நின்று பூவை துண்டித்தார். “ஓகே.. தீபக்கா நான் பேசினதுல தப்பு இருந்தா மன்னிச்சுக்கங்க” என்று கேப்டன் கேட்டது சிறப்பான காட்சி.
“சம்பந்தப்பட்ட நபர்களை மட்டும் தனியாக வைத்து விசாரணை நடத்தினால் இத்தனை களேபரம் வராது. பொதுவில் செய்வதால் ஆளாளுக்கு கத்துகிறார்கள்” என்று பவித்ரா சொன்ன ஐடியா நன்று. சூழலின் அழுத்தம் தாங்காமல் அழுகையுடன் மஞ்சரி பாத்ரூமில் தஞ்சம் புகுந்தார். “கையெடுத்து கும்பிட்டது தப்பு இல்லைன்ற சொல்ற இதே அருண்தான், ரியா கீழே தொட்டுக் கும்பிடறதை ஆட்சேபமா பேசினாரு” என்று சரியான சமயத்தில் பழைய பாயிண்ட்டை நினைவுப்படுத்தினார் ஆனந்தி. பிரில்லியன்ட்.
தீபக் மன்னிப்பு கேட்ட பிறகு அழுது கொண்டிருந்த மஞ்சரியிடம், இன்னொரு முறை வந்து தீபக் மன்னிப்பு கேட்டது பண்புள்ள காட்சி. ஆனால் அதற்குப் பிறகும் படுக்கையில் கண்ணீர் வழிய கிடந்தார் மஞ்சரி. அருணும் முத்துவும் ஒருவரின் ஒருவர் ஈகோவைத் தொட்டுத் தொட்டு உரசிக் கொண்டிருக்க “இன்னுமாடா பேசிட்டிருக்கீங்க?” என்றார் தீபக்.
“வெறும் பேச்சுத் திறமைதான் உனக்கு” என்று அருண் கிண்டலடிக்க, “அதை வெச்சுதான் ஒருத்தர் போன சீசன்ல டைட்டில் வின் பண்ணாங்க” என்று சரியான இடத்தில் குண்டூசியால் குத்தினார் முத்து. ‘இங்க அடிச்சா… அங்க வலிக்கும்’ பாணியில் “இப்ப யாரு பர்சனலா அட்டாக் பண்றது.. பார்த்தியா. உனக்கு வெறும் வாய்தான்.. பா… பா.. பா…’ என்று கையைக் குவித்துக் காட்டியபடி விலகினார் அருண். (டமுக்கு டப்பா.. டமுக்கு டப்பா!).
பொம்மை டாஸ்க்கில் வென்ற ஜெப்ரி
இந்தச் சண்டையின் மூலம் தேவையான அளவிற்கான ஃபுட்டேஜ்களை அள்ளிக் கொண்ட பிக் பாஸ், ‘சரி.. அடுத்த அயிட்டத்தை வெளில எடுப்போம்” என்று பொம்மை டாஸ்க்கை மீண்டும் ஆரம்பித்தார். “பொம்மைங்களை ஒளிச்சு வையுங்க” என்று போட்டியாளர்களிடமே அந்தப் பொறுப்பை தந்தது தவறான விஷயம். ஏனெனில் ஓடி வரும் போது பொம்மை எங்கே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிந்து விடும். பிக் பாஸ் ஏன் இதை யோசிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அடுத்த சுற்றில் இதை அமல்படுத்தி ‘அட’ என்று ஆச்சரியப்பட வைத்தார்.
முதல் சுற்றில், சாச்சனாவைத் தடுக்கப் போன மஞ்சரியின் தலையில் அடி. “பாத்தியா.. இதுக்குத்தான் சொன்னேன். சாச்சனாவிற்கு அடிபடலாம். நாம ஜாக்கிரதையா இருக்கணும்” என்று சிவாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அருண். அடுத்த சுற்றில் அருண் அவுட். அதற்கடுத்த சுற்றில் சாச்சனா அவுட்.
கடைசியாக சிவாவும் ஜெப்ரியும் களத்தில் நின்ற போது ஒரு டிவிஸ்ட் வைத்தார் பிக் பாஸ். அவர்களுக்குப் பதிலாக இன்னொருவர் விளையாட வேண்டும். ரயானை உடனே தேர்ந்தெடுத்தார் ஜெப்ரி. ஆனால் சிவாவோ சற்று யோசித்து அருணை தேர்ந்தெடுத்தார். “யாருக்கும் அடிபடக்கூடாதுன்னு நெனக்கற அந்த நல்ல மனசு இருக்கே. அதுதான் சார் கடவுள்” என்பது சிவா சொன்ன காரணம்.
ஆனால் அருணிற்கு தயக்கம். ‘கால்ல அடிபட்டிருக்கு” என்று சொல்லிப் பார்த்தார். ஒருவேளை தோற்று விட்டால் பழி தன் மீது வந்து விடும் என்று அஞ்சினாரோ, என்னமோ. “அண்ணே.. உங்களால முடியும்ண்ணே.. லவ் யூண்ணே.. உங்க நல்ல குணத்தைப் பார்த்து நான் லவ்ல விழுந்துட்டேன். என்ன முடிவு வந்தாலும் ஓகேண்ணே.. நீங்க விளையாடுங்க. ராமர் கிட்ட அனுமார் மாதிரி உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்” என்று அருணிடம் என்னென்னமோ வசனம் பேசினார் சிவா. சிவாஜி வீட்டு வாரிசுதான். அதற்காக இத்தனை ஓவர் ஆக்ட் டிராமாவா?
ஜெப்ரியை ஜெயிக்க வைத்தாரா அருண்?
போட்டி ஆரம்பித்தது. அருணிற்குத்தான் முதலில் பொம்மை கிடைத்தது. ஆனால் அது ஜெப்ரியின் பொம்மை. ஒரு நொடி தயங்கிய அருண், பிறகு ஓடிச் சென்று அதை உள்ளே வைத்தார். எனில் வெளியே இருந்தது, சிவாவின் பொம்மை. எனவே அவர் அவுட். போட்டியில் வென்றது ஜெப்ரி.
ஜெப்ரியின் பொம்மையை கையில் எடுத்த அருண், பிறகு ஏன் ரயானிடம் போராடாமல் உள்ளே வைத்தார்? ஆனந்தி பிறகு முத்துவிடம் எழுப்பிய இந்தச் சந்தேகத்தில் நியாயமுள்ளது. “ஜெப்ரி ஜெயிக்கணும்ன்னு அருண் நெனச்சான். முடிச்சிட்டான்” என்று முத்து விளக்கம் அளித்தார்.
சிவாவைத் தோற்க விட்டதற்காக கண்ணீர் விட்டு அழுதார் அருண். இதுவும் ஓவர் ஆக்ட் டிராமாதான். “நீ ஒரு நல்ல ஆன்மா” என்று ஜாக்குலின் பாராட்டினார். ‘அச்சமில்லை.. அச்சமில்லை’ என்று சிவா தனியாக அனத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து ‘என்னடா பண்றான்?' என்று திகிலுடன் கேட்டுக் கொண்டிருந்தார் தீபக்.
சிறந்த போட்டியாளர்கள் - ஜெப்ரி -சாச்சனா
ஆக.. நேற்றைய கட்டுரையில் யூகித்தபடி போட்டியில் வென்றது ஜெப்ரி. இந்த வெற்றி அவரின் மூலமே நிகழ்ந்திருந்தால் கூடுதல் சுவையாக இருந்திருக்கும். டிவிஸ்ட் என்கிற பெயரில் பிக் பாஸ் போடும் விதிகள் சமயங்களில் கொடூரமாக இருக்கும். கடைசி ரவுண்டில் ஏன் யாருமே வாசலை மறிக்கவில்லை?
இந்த வாரம் சிறப்பாகப் பங்கேற்றவர்கள் என்கிற முறையில் ஜெப்ரியும் சாச்சனாவும் தேர்வானார்கள். கடந்த வாரங்களில் ஒரு முறை இதே இருவர்தான் சுமாரான போட்டியாளர்களாக தண்டனையைப் பெற்றார்கள். நல்ல முன்னேற்றம். அருணிற்கும் சாச்சனாவிற்கு சமமான புள்ளிகள் கிடைத்த போது அருண் விட்டுக் கொடுத்தது நன்று.
‘பூவை கட் செய்து கேப்டனின் பதவியைப் பறிக்க முயன்ற’ சாச்சனா, சிறப்பான பங்கேற்பாளர் என்கிற முறையில் தீபக்கின் பெயரைச் சொன்னது முரண். ‘டாக்ஸிக்’ என்கிற காரணத்தைச் சொல்லி முன்பு நாமினேட் செய்த சத்யா, இப்போது பெஸ்ட் பிளேயர் என்று சொன்ன போது ஃபீல் ஆகி அழுதார் ஜாக்குலின்.
சிறப்பாகப் பங்கேற்காதவர்கள் என்கிற கேட்டகிரியில் ராணவ்வும் மஞ்சரியும் தேர்வானார்கள். ‘நான் எந்தக் காலத்துடா படிச்சிருக்கேன்.. ஃபெயில்ன்னு வந்தா ஷாக் ஆகறதுக்கு?” என்கிற மோடில் கவலையே படாமல் சிரித்தபடி அமர்ந்திருந்தார் ராணவ். ஆனால் விடாமல் மல்லுக்கட்டி பேசியே விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்ட மஞ்சரிக்கு இது நிச்சயம் ஒரு தண்டனைதான். எனவே இறுக்கமான முகத்துடன் இருந்தார். ‘ அடுத்த அறிவிப்பு வரும் வரை இருவரும் பொம்மைகளாக இருக்க வேண்டுமாம்’. பொம்மைக்கு சோறு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, சுச்சாவிற்கு அழைத்துச் செல்வது போன்ற விஷயங்களை மற்றவர்கள்தான் செய்ய வேண்டுமாம். ‘ஸ்கெட்ச்சு அவங்களுக்கு இல்ல. நமக்குத்தான்” என்று தீபக் சொன்னது உண்மை.
இன்று பஞ்சாயத்து நாள். ரயான் - ராணவ் சண்டை, கிச்சன் பிரச்சினை, சாச்சனாவின் முந்திரிக்கொட்டைத்தனம் என்று விசாரணைக்காக பல பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த சீசனில் குறும்படம் வெளியாகாமல் இருப்பது ஒரு குறையாகவே இருக்கிறது. இந்த வாரமாவது அது நடக்குமா?