BB Tamil 8 Day 65: `கால்ல கூட விழறேன்' - கலங்கிய தீபக்; அருண் - முத்து - காரசாரமான மோதல்
ஸ்கில், லேபர் என்று எந்த நேரத்தில் தீபக் சொன்னாரோ, அது கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும். அதன் காரணமாக அருண் - தீபக் இடையே சண்டை கொழுந்து விட்டு எரிந்தது மட்டுமல்லாமல், அதிலிருந்தே வீக்லி டாஸ்க்கிற்கான ஐடியாவை உருவிக் கொண்டார் பிக் பாஸ். (யோவ். நாராயணா. பலே ஆளுய்யா நீ!.. அழுகிய தக்காளியைக் கூட எப்படியோ வியாபாரம் பண்ணிடறே..!)
பிக் பாஸ் வீடு தொழிற்கூடமானது. ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்கிற புரட்சி முழக்கங்கள் ஒலித்தன. தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்க முயன்றது நிர்வாகம். தொழிலாளர்களின் புரட்சியை முன்னின்று நடத்தினார் காம்ரேட் அருண்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 65
‘வேக் அப்’ பாடல் காட்சியைக் காண்பிக்கவில்லையென்றால், அன்று நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்று பொருள். இன்றும் அப்படியே. ஆனால் எந்தச் சம்பவமும் சுவாரசியமாக இல்லாமல் வெறும் சத்தமாக மட்டுமே இருந்தது.
கிச்சன் ஏரியா. பால் இல்லை என்பதால் பிளாக் டீ தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கமாக வந்த அருணை ‘வாங்க டிவிஸ்டர்’ என்று தீபக் கிண்டலாக அழைத்தார். இயல்பான நகைச்சுவைதான். ‘அவன் என்ன கோபத்துல இருந்தானோ தெரியல.. இம்மாம் பெரிய கத்திய உருவிட்டான்.. எடுத்தேன் பாரு ஓட்டம்’ என்கிற ஏட்டு ஏகாம்பரம் காமெடி மாதிரி, அருணுக்கு சட்டென்று பற்றிக் கொண்டது. அடுப்பை விடவும் அதிக உஷ்ணமாகி விட்டார்.
‘ஆமாம்ப்பா... நாங்கள்லாம்... லேபர்தான்.. எனக்கு டீ கொடுக்காதீங்க.. உழைப்பாளிகளுக்கு எந்தக் காலத்துல மரியாதை இருந்திருக்கு.. நடத்துங்க..” என்று காலையிலேயே அருண் புரட்சி முழக்கத்தை எழுப்ப “ஓஹோ.. ரைட்டு.. நீ அந்த ரூட்லயே போறியா.. கன்டென்ட்டா.. ஓகே.. நானும் வரேன். எது நடந்தாலும் வீக்கெண்ட்ல பார்த்துக்கலாம்” என்று மல்லுக்கட்டினார் தீபக்.
காலையிலேயே புரட்சியை ஆரம்பித்த அருண்
“இங்கு தொழிலாளர்ன்ற பிரிவினைவாதம் கூடாது.. இது என்னோட வீடு’ என்று அருண் உரிமைக்குரல் எழுப்ப ‘நூறு நாள் முடிஞ்சவுடனே கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளப் போறாங்க.. என்னமோ பத்திரம் எழுதி வாங்கின மாதிரி பேசறான்’ என்பது மாதிரி அருணை அலட்சியமாக ஹாண்டில் செய்தார் தீபக். “நீ காரியவாதி.. டிவிஸ்டர்…” என்று அருணின் பட்டப் பெயரையும் உரத்த குரலில் கத்தினார்.
“நீர்தான் ஜாக்சன் துரையோ.. நாங்கள் கப்பம் கட்டணுமோ..” என்று வீரபாண்டிய கட்டபொம்மனாக உருமாறினார் அருண். “கமான்… கமான் அருண்.. அப்படியே லெப்ட்ல குத்து.. ஆங். அப்படியே ரைட்ல போடு..” என்று தூரத்தில் இருந்து அருணை நோக்கி உற்சாகமாக கத்திக் கொண்டிருந்தார் சவுந்தர்யா. ‘கபடதாரி அருண்.. அறுபது நாளா நடிச்சியா..?” என்கிற கமெண்ட்டும் கூடவே நக்கலாக வந்தது.
காலையிலேயே அருண் ஏழரையைக் கூட்டியதால் அனைவரும் எரிச்சலாக “என்னய்யா. ஆச்சு.. உங்களுக்கெல்லாம்.. நான் எத்தனை முக்கியமான பிரச்சினையைப் பேசறேன்..?” என்று பொதுவாக கத்திய அருண், பிறகு மைக்கை கழற்றியெறிந்து விட்டு மூலையில் அமர்ந்து கண்கலங்க ஆரம்பித்து விட்டார்.
இவ்வளவு களேபரம் நடக்கிறதே.. கண்ட்ரோல் செய்ய வேண்டிய கேப்டன் எங்கே? அவர் தூத்துக்குடியில் இருக்கிறாரோ.. திருநெல்வேலியில் இருக்கிறாரோ.. பாவம்.. “ஏண்டா.. மனுஷனை நிம்மதியா கொஞ்ச நேரம் பாத்ரூம் போக விடறீங்களா..” என்றபடி வந்தார் ரஞ்சித். ‘கவுண்டம்பாளையம்’ படம் எடுக்கும் போது கூட அவர் இத்தனை சிரமங்களை அனுபவித்திருக்க மாட்டார். கேப்டன் ஆகி விட்டு அவர் படுகிற பாடு.. ரஞ்சித் கும்பலின் உள்ளே நுழைந்து ‘சாமி.. தங்கம்’ என்று கெஞ்சினாலும் கூட சண்டை ஓயவில்லை.
“அண்ணே.. நாகராஜ் அண்ணே.. எப்படிண்ணே இருக்கீங்க?”
“டேய்.. நான் நேத்தே ஸாரி சொல்லிட்டேன். அவன் வேணும்ன்ட்டே பண்றான்டா” என்று நண்பர்களிடம் புலம்பினார் தீபக். ராணவ், சத்யா, விஷால் ஆகியோர் அருணை சமாதானம் செய்யப் போனார்கள். இது போல் சண்டையை விலக்கச் செல்பவர்கள் மண்டை வீங்கி திரும்புவது வழக்கமான வரலாறு. அது போல் கிராஸ்பயரில் மாட்டிக் கொண்டார் விஷால். “இது என் பர்சனல் விஷயம்ன்னு சொல்ல வரியா.. நான் தொழிலாளிகளின் சுயமரியாதைக்காக போராடும் லட்சியத்தலைவன்டா” என்பது போல் அருண் எகிறிக் குதிக்க ‘ஆள விட்றா சாமி’ என்று எஸ்கேப் ஆனார் விஷால்.
தீபக்கும் அருணும் சமாதானப் பேச்சிற்கு அமர்ந்தார்கள். “நான் அண்ணன்ற உரிமைல கிண்டல் பண்ணேன். இது தப்பா.. சும்மா கலாய்ச்சேன். அண்ணன் பண்ணக்கூடாதா. தப்புன்னா.. ஸாரிப்பா.. கால்ல கூட விழறேன்” என்கிற மாதிரி தீபக் கண்கலங்க “அய்யோ… என்னண்ணா..” என்று அருணும் கண்கலங்க “அண்ணே.. நாகராஜ் அண்ணே.. எப்படிண்ணே இருக்கீங்க?” என்கிற ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ காமெடி மாதிரி ஒன்றாக இணைந்தார்கள்.
“நான் சிரிச்சிக்கிட்டே இருக்கறதால என்னை சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க போல. இப்ப எனக்கும் அழணும் போல இருக்கு. சண்டையை தடுக்கப் போன என்னை வெளிய துரத்தினாங்க. இப்ப பாரு.. மிக்ஸிங், சைட்டிஷ், மெயின் டிஷ் எல்லாம் ஒண்ணா சிரிச்சிட்டு நிக்குது. என்னைக் கசக்கிப் போட்ட பிளாஸ்டிக் டம்ளர் மாதிரி ஆக்கிட்டாங்க” என்று டாஸ்மாக் காமெடியில் விஷால் அனத்தியது சிறப்பான காட்சி. “உங்க போதைக்கு நான் பாப்கார்னாடா?” என்று அவரது மைண்ட் வாய்ஸ் அலறியது.
டாப் 8 போட்டியாளர்கள் யார்.. யார்?
சபையைக் கூட்டிய பிக் பாஸ், வீக்லி டாஸ்க்கிற்கான முன்னோட்டத்தை ஆரம்பித்தார். ரேங்கிங் வரிசையில் வீடு இரு அணியாக பிரிய வேண்டும். டாப் 8 என்பது ஒரு அணி. பாட்டம் 7 என்பது இன்னொரு அணி. ரேங்கிங் வரிசை என்றால் ரணகளமாக நடக்க வேண்டுமா, இல்லையா,.. ம்ஹூம்…
கேப்டன் ரஞ்சித் இதற்கெல்லாம் வேலைக்கு ஆக மாட்டார் என்பதால் பொறுப்பை தானே வந்து வம்படியாக ஏற்றுக் கொண்ட முத்து “நீ இங்க நில்லு.. நீ அங்க போய் நில்லு.. இடுப்பை வளைச்சு நெளிச்சு ஜோரா ஆடணும்.. சரியா?” என்று பருத்தி வீரன் கார்த்திக் மாதிரி உத்தரவுகள் போட ‘ஹலோ.. ஹலோ.. இங்க என்ன நடக்குதுன்னே புரியல” என்று பரிதாபமாக கத்தினார் பவித்ரா.
ஒருவகையில் இந்த ரேங்கிங் டாஸ்க் சரியாகவே நடந்து முடிந்தது என்றாலும் முத்துவின் ஆக்கிரமிப்பு காரணமாக சட்டென்று முடிந்து விட்டதோ என்று தோன்றியது. அதுதான் பவித்ராவின் ஆட்சேபத்திற்கு காரணம். அதை அவரால் தெளிவாக முன்வைக்க முடியவில்லை. “எனக்கு டாப் 8ல இடம் வேணாம்” என்று பள்ளிக்கூட பிள்ளைகள் மாதிரி விஷாலும் அருணும் அடம்பிடித்தார்கள். ‘இது ஒரு ஆரம்பம்’ என்று பிக் பாஸ் சூசகமாக சொல்லியிருந்தாலும் அப்போதைய மனஸ்தாபம் காரணமாக அவர்கள் வீம்பாக மறுத்தது சிறுபிள்ளைத்தனம். என்றாலும் முத்துவின் வற்புறுத்தல் காரணமாகவும் அதிக வாக்குகள் இருந்ததாலும் விஷால் எழுந்து வந்தார்.
ஆக டாப் 8 கேட்டகிரியில் வந்தவர்கள் தீபக், விஷால், ஜாக்குலின், சவுந்தர்யா, முத்து, தர்ஷிகா மற்றும் மஞ்சரி. “எனக்கு இஷ்டம் இல்லா… நான் ஒத்துக்க மாட்டேன். இதுல விஷாலும் தர்ஷிகாவும் இருக்கக்கூடாது. எங்க தலைவர் அருண்தான் இருக்கணும்” என்று ஆட்சேபம் செய்தார் அன்ஷிதா. ஆனால் வாக்கெடுப்பு இவர்களுக்கு ஆதரவாக இருந்ததால் சேச்சியின் அப்ஜெக்ஷனை ‘சீச்சீ.” என்று ஒதுக்கினார்கள். “இல்ல.. எனக்குப் புரியல..” என்று கடைசி வரை பரிதாபமாக அனத்திக் கொண்டிருந்தார் பவித்ரா.
பாட்டம் 7 கேட்டகிரியில் இருந்தவர்கள் ரஞ்சித், ராணவ், அன்ஷிதா, அருண், பவித்ரா, சத்யா மற்றும் ரயான். “நீங்களா முடிவு பண்ண மாதிரி இருக்குது” என்று பவித்ரா கடைசியை முயற்சியை செய்துப் பார்க்க, “போட்டின்னு வந்தா.. நீங்கதான் முன்னாடி வரணும்.. வாக்கெடுப்புபடிதான் நடந்தது” என்று ஆணித்தரமாக முத்து சொன்னதால் ‘என்னமோ போங்க’ என்று சலித்துக் கொண்டே விலகினார் பவித்ரா.
மேனேஜர்கள் - தொழிலாளிகள் - வீக்லி டாஸ்க்
குழாயில் தண்ணீர் வரவில்லை. அடுப்பில் எரிவாயு நின்றது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பிக் பாஸ் வீடு ஸ்தம்பித்தது. “ஐயா.. பாத்ரூம்ல தண்ணி வரலைங்க” என்று பிக் பாஸிடம் முறையிட்டார் ரஞ்சித். நமட்டுச் சிரிப்புடன் கன்ஃபெஷன் அறையிலிருந்து வந்தார் மஞ்சரி.வீக்லி டாஸ்க்கின் அடுத்தக் கட்டம்.
டாப் 8-ல் வந்தவர்கள் மேனேஜர்களாக இருப்பார்கள். பாட்டம் 7-ல் வந்தவர்கள் தொழிலாளிகளாக இருப்பார்கள். நிர்வாகிகள் அனைத்து வசதிகளுடன் வீட்டிற்குள் இருக்க, தொழிலாளிகள் வீட்டிற்கு வெளியே வேப்ப மரத்தடியின் கீழே படுக்க வேண்டும். (அடேய் தீபக்கு..!) தொழிலாளிகள் சைக்கிள் ஓட்டினால்தான் வீட்டிற்குள் தண்ணீர் வரும், அடுப்பு எரியும். மேனேஜர்கள் ‘Nomination free Zone’-ல் இருப்பார்கள். சிறப்பாக பங்கேற்காதவர்கள் தினமும் ஒரு முறை அணிமாற்றம் செய்யப்படுவார்கள். நாமினேஷன் ஃப்ரீ பாஸ், டைரக்ட் நாமினேஷன் என்கிற பரிசுகள் இறுதியில் கிடைக்கும்.
தொழிலாளிகள் சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்க மீண்டும் தண்ணீர் வந்தது. “நாம ஒண்ணும் பிச்சைக்காரங்க இல்லை. எதுக்கும் கெஞ்ச வேணாம். நம்ம உரிமையை கேட்டு வாங்குவோம்” என்று தன்னைத்தானே தலைவராக நியமித்துக் கொண்ட அருண் உரத்த குரலில் பிரசங்கம் செய்தார்.
மேனேஜர்கள், தொழிலாளிகளுக்கான விதிகளை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்பதின் அடிப்படையில் முத்து வெளியே வந்து முத்தான மூன்று விதிகளைச் சொன்னார். ஒன்று, மேனேஜர்களை ‘சார்.. மேடம்’ என்றுதான் அழைக்க வேண்டும். இரண்டு, உரையாடலின் போது குறுக்கே பேசக்கூடாது. மூன்று, யூனியன் லீடர் யார் என்பதை நிர்வாகம் முடிவு செய்யும்.
முத்து சொன்ன மூன்று விதிகளுமே அபத்தமானவை. “எங்களுக்கு பேச்சுரிமை இருக்கு. அதைத் தடுக்க முடியாது” என்று எகிறினார் ராணவ். “உங்க விதிகள் அராஜகமாக இருக்கு. ஏத்துக்க முடியாது” என்று ஆத்திரப்பட்ட அருண் வேலை நிறுத்தத்தை அறிவிக்க தண்ணீர் நின்று போனது. பாத்ரூமில் இருந்தவர்களின் கதி என்ன ஆயிற்றோ?! மீண்டும் ரணகளமான சண்டை. நடுவில் நின்று கும்பிடு போட்டு தடுக்க முடியாமல் அல்லாடினார் ரஞ்சித்.
அருண் - முத்து - காரசாரமான மோதல்
“தண்ணிய சேமிச்சு வெச்சிட்டு அப்புறம் விதியைச் சொல்லியிருக்கலாம்” என்று தந்திரமாக யோசித்தார் ‘தந்திரவாதி’ ஜாக்குலின். “நீ டிவிஸ்டர்” என்று முத்து கத்த “நீ வெறும் மவுத்பீஸ். பா. பா… பா..” என்று கேலி செய்தார் அருண். “டேய் உங்களுக்கு மேல எனக்கு கத்தத் தெரியும்” என்று கத்திப் பார்த்தார் ரஞ்சித். “யூனியன் தலைவரை நாங்கதான் தேர்ந்தெடுப்போம். அது எங்கள் உரிமை. ஆனா இதை பர்சனல் சண்டையா கொண்டு போக மாட்டேன். பிராமிஸ்” என்று உறுதிமொழி ஏற்றார் அருண்.
நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படும் தொழிலாளியை பினாமியாக நிர்வாகம் நியமிக்கும் என்பதெல்லாம் நடைமுறையில் உள்ளதுதான். ஆனால் அது திரைமறைவாக நடக்கும் விஷயம். ‘நாங்கள்தான் யூனியன் லீடரை தேர்ந்தெடுப்போம்’ என்று எந்த நிர்வாகமும் சொல்ல முடியாது. அதைத் தொழிலாளர்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் முத்து ஏன் இந்த அபத்தமான விதிக்கு மல்லுக்கட்டுகிறார் என்று தெரியவில்லை.
“நாம மூணு பேரை நாமினேட் பண்ணுவோம். அதுல இருந்து ஒருத்தரை அவங்க தேர்ந்தெடுக்கட்டும்” என்று விதியை தளர்த்தினார் முத்து. தீபக்கிற்கு இதில் உடன்பாடில்லை என்றாலும் முத்துவின் இம்சை தாங்காமல் சம்மதித்தார்.
“என் பெயர் இனியா - இனிமையான குரல்” - சவுந்தர்யா காமெடி
நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் மீட்டிங் ஆரம்பித்தது. டாப் 8 நபர்களும் தங்களுடைய புனைப்பெயர்களுடன் எட்டு விதிகளை வரிசையாக சொன்னார்கள். பவித்ராதான் யூனியன் லீடராம். (ஒரு பிள்ளைப்பூச்சியைப் போய்..!) “என் பெயர் இனியா.. இனிமையான குரல்ன்றதால அந்தப் பேரு” என்று சுயபகடியுடன் சவுந்தர்யா பேச ஆரம்பிக்க அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்கள். ‘பரஸ்பர மரியாதை முக்கியம்’ என்றாா் விஷால். ‘லீடர் மட்டும்தான் பேசணும்” என்றார் சவுந்தர்யா. “வேலை நிறுத்தம் கூடாது” என்றார் ஜாக்குலின். தீபக் சொன்ன விதி என்னவென்றே புரியவில்லை. “மோசமான பங்கேற்பாளரை ஓரமாக அமர்த்தி விடுவோம்” என்று குழப்பமாக ஏதோ சொன்னார்.
“என்னய்யா.. இது வரிசையா சொல்றாங்க” என்று திகைத்த பவித்ரா, “எங்களுக்கு யோசிக்க டைம் வேணும்” என்று ஜகா வாங்கினார். பாதுகாப்பிற்கான தொப்பியை அணியாமல் சிலர் பணி புரிய அதை ஆட்சேபித்தார் சவுந்தர்யா. (சைக்கிள் ஓட்டறதுக்கு எதுக்குய்யா தொப்பி?!). மீண்டும் ஒரு மீட்டிங். “எனக்கு சுச்சா போகணும்” என்று அருண் கிளம்ப, “அதுவரைக்கும்லாம் மீட்டிங் காத்திருக்காது” என்று முத்து முரண்டு பிடிக்க “சுச்சா.. எங்களின் அடிப்படை உரிமை” என்று முட்டியை உயர்த்தி முழக்கமிட்டார் அருண். நிர்வாகிகளின் தரப்பில் இருந்த சவுந்தர்யா தலையில் துண்டை கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தது ஏன் என்று தெரியவில்லை.
யூனியன் லீடர் அன்ஷிதா
“மரியாதையை கொடுத்துட்டு இன்னொரு மரியாதையை ஆஃபர்ல வாங்குங்க.. சொடக்குப் போட்டு கூப்பிடாதீங்க” என்று ராணவ் ஆத்திரப்பட இன்னொரு கலவரம். “நாங்கதான் யூனியன் லீடரை தேர்ந்தெடுப்போம். எங்க குழந்தைக்கு நாங்கதான் பெயர் வைப்போம்” என்று டயலாக்கில் அருண் பின்னியெடுக்க “உங்க குழந்தை நல்லாயிருக்கணும்ன்னுதான் நாங்க கவலைப்படறோம்” என்று அபத்தமாக கவுன்ட்டர் கொடுத்தார் தர்ஷிகா. யூனியன் லீடர் ஆன பாவத்திற்காக பவித்ராவும் உரத்த குரலில் கத்தி சாதனை செய்தார்.
‘மூன்று நபர்களை நாமினேட் செய்ய வேண்டும்’ என்று நிர்வாகம் வலியுறுத்தியதால் அதில் ரயான், அன்ஷிதா, பவித்ரா மூன்று நபர்களை தொழிலாளர்களின் தரப்பு பரிந்துரைத்தது. இதில் அன்ஷிதாவை யூனியன் லீடராக நிர்வாகம் தேர்ந்தெடுத்தது. ‘தத்தக்கா பித்தக்கா’ தமிழில் அன்ஷிதா பேசி முடிப்பதற்குள் வீக்லி டாஸ்க் முடிந்து விடும் என்கிற ஐடியா போல.
“ஒரு ஃபேக்டரின்னு இருந்து தொழிலாளர் தவறு செஞ்சா. சம்பளம் கட் பண்ணுவாங்க. இங்க அந்த மாதிரில்லாம் இல்ல. அதனால தண்டனைக்கான ஸ்பேஸ் இருந்தே தீரும். எந்தவொரு தொழிற்சாலையிலும் hierarchy (அதிகார படிநிலை) இருக்கும். இதெல்லாம் பேஸிக்” என்று கார்ப்பரேட் மானேஜர் மாதிரி ஆங்கில வார்த்தைகளைக் கலந்து மஞ்சரி பேச, தொழிலாளர்கள் கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. திக்கித் திணறி மழலைத் தமிழில் அன்ஷிதா சொன்னது என்னவென்றே புரியவில்லை.
“நல்ல எம்ப்ளாயி.. கெட்ட எம்ப்ளாயில்லாம் வேணாம்.. நாங்க எங்க பெஸ்டைத்தான் தருவோம்” என்றார் சத்யா. ‘உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறை மறந்துடாதீங்க’ என்பது மாதிரி “என்னோட மானம், சுயமரியாதை போச்சு. அதுக்கென்ன பதில்? மன்னிப்பு கேளுங்க” என்று ராணவ் முழங்க “இவன் வேற .. குறுக்கால நெடுக்காலயும் ஓடிட்டு இருக்கான்” என்று சலித்துக் கொண்டார் முத்து. “அதெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது. தொழிலாளர் பாதுகாப்பிற்காகத்தான் நான் தொப்பி அணியச் சொன்னேன்” என்று சரியாகவே அடம்பிடித்தார் சவுந்தர்யா.
சவசவவென்று இந்த உரையாடல் போய்க் கொண்டிருக்க, அர்ஜெண்ட்டில் பாத்ரூம் ஓடிய ஜெப்ரி, காமிரா முன்பாக ‘யார் தண்ணீர் இறைப்பது?’ என்பதைச் சொல்ல மறந்து விட்டார். அதற்கான தண்டனையை அன்ஷிதா ஏற்க முன்வந்தார்.
“ஸ்கெட்சு அவங்களுக்கு இல்ல. நமக்குத்தான்” - ஜாக்குலின்
கிடைத்த இடைவெளியில் “இந்த அருண் ப்ரோக்கு என்னதான் ஆச்சு.. சாம்பல் மேடுகளும்.. புகை மண்டலங்களும்..?” என்று நியூஸ் ரீல் மாதிரி அருணைப் பற்றி விஷாலிடம் விசாரித்தார் அன்ஷிதா. “ஏதாவது பர்சனல் பிரச்சினை இருக்குமோ?” என்பது அவரது சந்தேகம். “இந்த விஷாலைப் பாரேன். மேனேஜர்ன்றதையே மறந்துட்டு லேபர் கூட உருண்டுட்டு கிடக்கான்” என்று மற்ற நிர்வாகிகள் கிண்டலடித்தார்கள்.
“இது இந்த சீசனின் முதல் Day, Night டாஸ்க். தொழிலாளிகள் வெளியே படுக்க வேண்டும். டாஸ்க் இரவிலும் தொடரும். தொழிலாளிகள் அனுமதி கேட்டுத்தான் உள்ளே வர வேண்டும்” என்று அறிவித்தார் பிக் பாஸ். “நான் வாசல்ல படுத்துக்கறேன். அவங்க அனுமதி கேட்டா தரணும்” என்றார் முத்து.
“இது அவங்களுக்கான டாஸ்க் இல்ல. நமக்குத்தான். ஒவ்வொண்ணையும் சொல்லி செய்ய வைக்கறதுக்குள்ள உயிர் போகுது” என்றார் ஜாக்குலின்.. மேனேஜ் செய்யறதுன்னா சும்மாவா?!
இந்த டாஸ்க் எப்படி தொடர்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம். இன்குலாப் ஜிந்தாபாத்! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!.. லால் சலாம்!...