செய்திகள் :

BB Tamil 8 Day 68: சவுண்டு கொளுத்திப் போட்ட பட்டாசு; `ஜெப்ரி நடிக்கறார்ப்பா' - அம்பலப்படுத்திய சூரி

post image
`நாமினேஷன் ஃப்ரீ பாஸ்’ ஜெப்ரிக்கு கிடைத்ததைப் போன்ற அபத்தம் வேறு எதுவுமே இருக்க முடியாது. நிர்வாகம் - தொழிலாளர் டாஸ்க்கில் ஜெப்ரி எங்குமே தெரியவில்லை. ஒருவருக்கு அனுதாபம் காட்டி வெற்றியை பரிசளிப்பதென்பது ஒருவகையில் அவரை அவமானப்படுத்துவதாக ஆகும். இந்த விஷயம் விசாரணை நாளில் விசாரிக்கப்படும் என்று யூகிக்கிறேன். விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 68

அருணின் மீதான புகார்களை ஜாக்குலினிடம் தொடர்ந்து கொண்டிருந்தார் முத்து. ‘பர்சனலா பேசி பிரவோக் பண்றாரு.. எவ்வளவுதான் பொறுத்துக் கொள்வது?’ என்று முத்து புலம்ப, ‘இப்படித்தான் இருக்கும்’ என்று ஆறுதல் சொன்னார் ஜாக். மக்களின் கருத்துக் கணிப்பின் படி, ‘எந்தப் போட்டியாளர் செய்தி வாசித்தால் நன்றாக இருக்கும்?’ என்கிற தகவல் வந்தது. சவுந்தர்யாவை நியூஸ் ரீடராக பார்க்க மக்கள் விரும்புகிறார்களாம்.  (ரைட்டு.. கலாய்க்க முடிவு செஞ்சுட்டாங்க போல!). செய்தி வாசிப்பதற்கென்றே செய்துவைத்த குரல் மாதிரி இருப்பது மஞ்சரியின் குரல்தான். ஷோபனா ரவியின் துல்லியத்தின் சாயல் அவரிடம் இருக்கிறது. 

BBTAMIL 8: DAY 68

‘நானா.. நியூஸ் வாசிக்கணுமா...  அடப்பாவிகளா... சரி... உங்க தலையெழுத்து!.’ என்கிற மோடில் சங்கடமான சிரிப்புடன் எழுந்துவந்தார் சவுந்தர்யா. அவர் வாசித்த... மன்னிக்கவும்  சொன்ன பாணி கோக்குமாக்காக இருந்தாலும் போகிற போக்கில் அவர் கொளுத்திப் போட்ட பட்டாசு நாள் முழுவதும் வெடித்துக் கொண்டிருந்தது. 

சவுண்டு கொளுத்திப் போட்ட பட்டாசு

ரஞ்சித், ஜாக்குலின் ஆகிய இருவரையும் கலாய்த்த சவுந்தர்யா,  ‘நன்றாக இருந்த கோவா கேங்கில் இருந்து விலகி தனியான பிளேயராக தன்னை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கிறார் ஜெப்ரி’ என்று குண்டூசிக் குத்தலாக சொன்னதில் ஜெப்ரி மனம் புண்பட்டுவிட்டார் போல.

பிறகு சாப்பிட்டு கைகழுவும் இடத்தில் “இவங்களே இந்த கேங்கை கழுவிக் கழுவி ஊத்துவாங்களாம்..” என்று சத்யாவிடம் சொல்ல, பின்னால் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரயான், இதை அப்படியே அங்கு சென்று போட்டுக்கொடுத்தார். 

விஜய் சேதுபதியின் தலையீட்டிற்குப் பிறகு கோவா குழுவிலிருந்து ஜெப்ரி விலகி நிற்பது புத்திசாலித்தனமான மூவ். இந்த விஷயம் என்றல்ல, நிறைய விஷயங்களில் ஜெப்ரி சாமர்த்தியமாக இந்த ஆட்டத்தை ஆடி வருகிறார். குழுவாக இருப்பது வழக்கமான ஆட்டங்களில் பலமாக இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் என்பது வேறு ஆட்டம். இங்கு டீமாக இருந்தால் தனித்தன்மை தெரியாமல் கும்பலாகக் காணாமல் போகும் சாத்தியமே அதிகம். 

BBTAMIL 8: DAY 68

ஜாக், ரயான், சவுந்தர்யா ஆகியோர் மனதளவில் இன்னமும் அந்தக் குழுவில் இருக்கிறார்கள். எனவே மந்தையிலிருந்து விலகிய ஆடாக ஜெப்ரி தனித்திருப்பது அவர்களின் கண்களை உறுத்துகிறது. குழுவைப் பற்றி தவறாகப் பேசியதால் ரயான் இதுகுறித்து ஆட்சேபிக்க ஜெப்ரிக்கும் அவருக்கும் வாக்குவாதம் நடந்தது. “நான் எல்லோர் கிட்டயும் பேசிட்டுதான் இருக்கேன்... யாரையும் அவாய்ட் பண்ணலையே?” என்று சாதித்தார் ஜெப்ரி. 

மந்தையிலிருந்து விலகிய ஆடு - ஜெப்ரி


பிறகு தனியாக அமர்ந்திருந்த ஜெப்ரியிடம் “ஏண்டா.. நம்மள்லாம் ஒட்டுக்கா இருப்போம்ல. இப்ப என்னடா ஆச்சு?’ என்று பாசமாகப் பேசியபடி வந்தார் ஜாக். பிறகு நால்வரும் பேசிக் கொண்டதில் சூடு ஏறியதில் ‘இனிமே உன் கிட்ட வந்து ‘ஏன் தனியா இருக்கேன்’னு கேக்க மாட்டேன்’ என்று வருத்தத்தோடு விலகினார் ஜாக். 

ரயானுக்கும் சரி, சவுந்தர்யாவிற்கும் சரி,  இந்தக் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற முனைப்போ உழைப்போ ஆர்வமோ இருப்பது போல் தெரியவில்லை. ‘வந்தோம்.. ஜாலியா இருந்துட்டு போவோம்’ என்கிற மாதிரிதான் உலவுகிறார்கள். ஆனால் ஜாக்குலின் அப்படியல்ல. தனியாக விளையாடினால் இறுதிக்கட்டம் வரைக்கும் செல்லக்கூடியவர். எனவே கோவா கேங்கை ஒழித்துக் கட்டினால் இதில் பலன் அடையக்கூடியவர் அவராகத்தான் இருப்பார். 

BBTAMIL 8: DAY 68

யாருக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ், யாருக்கு டைரக்ட் நாமினேஷன் என்பதை முடிவு செய்து சொல்லுங்கள் என்று பிக் பாஸ் அறிவிக்க, தொழிலாளர்கள் மத்தியில் நடந்த விவாதத்தில் டைரக்ட் நாமிஷேனுக்காக பெரும்பான்மை என்கிற அடிப்படையில் ராணவ் பலியாடாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எல்லோருமே ஈஸியாக அடிக்கும் டார்கெட்டாக இருப்பது அவர் மீதான அனுதாபத்தை அதிகப்படுத்தும்.

‘எதையாவது செய்து’ தன்னை நிரூபிக்கும் ஆர்வக்கோளாறு ராணவ்விடம் இருக்கிறதே தவிர, அதை முறைப்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனம் குறைவாக இருக்கிறது. ‘யூனியன் லீடர் என்கிற பொறுப்பு வந்த போது அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை’ என்று ரயான் சொன்ன குற்றச்சாட்டு சரியானது. டைரக்ட் நாமினேஷனில் ராணவ் வந்தாலும் நிச்சயம் அவர் மக்களால் காப்பாற்றப்படுவார். மிக்சர் பார்ட்டிகளை விடவும் துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டேயிருக்கும் ராணவ்வின் வெள்ளந்தித்தனம் அவரை ஓரளவிற்கு காப்பாற்றும். தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எவ்வித எதிர்ப்பும் இன்றி வழக்கம் போல் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் ராணவ். 

‘யாருக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ்?’


மேனேஜர்கள் மீட்டிங்கில் ‘நாமினேஷன் பாஸிற்காக’ பெரிய போட்டியே நடந்தது. ‘தனக்கு இது எத்தனை முக்கியம்’ என்று தீபக்கும் மஞ்சரியும் வாதிட்டார்கள். ‘எனக்கு வேண்டாம்’ என்று நேர்மையாக ஒதுங்கிக் கொண்டார் சத்யா.  ‘எப்பவுமே அதிர்ஷ்டம் என் பக்கத்துல வந்து போயிடும்’ என்று அனத்தினார் பவித்ரா. ‘நான் வளர வேண்டியவன்’ என்று சென்டிமென்ட்டை ஊற்றினார் ஜெப்ரி. அந்த டெக்னிக் நன்றாக வேலை செய்தது. மஞ்சரி தனக்காக இரண்டாவது ரவுண்டு வாதாடியதில் அருண் எரிச்சலானார். ‘பேசிட்டே இருக்காதீங்க’ என்று அவர் காண்டானது சுவாரசியமான முரண். அப்படியாக அவர் பேசி எத்தனை முறை மற்றவர்களை வெறுப்பேற்றியிருக்கிறார்?!

இறுதியில் ஜெப்ரியின் மீதான அனுதாப அலை பலமாக அடிக்க, பாஸ் அவருக்கு கிடைத்தது. இந்தத் தேர்வு நியாயமாக நடக்கவில்லை என்பதை அவர்களே யோசித்திருந்தால் புரிந்திருக்கும். வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்களுக்கே இந்த முடிவு ஆச்சரியத்தையும் விமர்சனத்தையும் எழுப்பியது. 

BBTAMIL 8: DAY 68

சவுந்தர்யா பல சமயங்களில் மந்தமாக இருந்து சொதப்பினாலும் சில சமயங்களில் பளிச்சென்று எரிந்து ஆச்சரியப்படுத்துகிறார். அவர் ஜெப்ரிக்கு சொன்ன அட்வைஸ் ‘அடடே’ ரகம். “பாவம் பார்த்து தர்ற வெற்றியெல்லாம் நிலைக்காது. உண்மையா விளையாடி ஜெயிச்சு வாங்கறதுதான் நல்லது’ என்பது போல் ஜெப்ரியிடம் சவுந்தர்யா சொன்ன அட்வைஸ் அல்டிமேட் நேர்மை. “இந்த டாஸ்க்ல ஜெப்ரியோட பங்களிப்பு கண்ணுக்கே தெரியல. அவனுக்கு எப்படி கொடுத்தாங்க” என்று ரயான் ஆச்சரியப்பட்டார். “நீங்க சத்யாவை தேர்ந்தெடுப்பீங்கன்னு நெனச்சேன்” தர்ஷிகா சொன்னதும் சரியே. தொழிலாளர்கள் அணியில் ராணவ்வாவது எதையாவது கத்திக் கொண்டிருந்தார். ஆனால் சத்யா அதைக்கூட செய்யவில்லை. 

இந்த முடிவுகள் பொதுவில் அறிவிக்கப்பட்ட போது ஜெப்ரியை வாழ்த்திய பிக் பாஸ், ராணவ்வின் டைரக்ட் நாமினேஷன் பற்றிய முடிவிற்கு ‘புத்திசாலித்தனமா இருந்தா பொழச்சப்பீங்க’ என்று சூசகமாக சொன்னது சுவாரசியமான விளையாட்டு. 

ரஞ்சித்திடம் வெளிப்பட்ட ‘சந்திரமுகி’

‘இந்த 10 வாரங்களில் பெஸ்ட் யார், வொர்ஸ்ட் யார்?’ என்கிற தோ்வு அடுத்ததாக நடத்தப்பட்டது. சிறப்பான நபர்களில் மூன்று பெயர்களைச் சொல்ல வேண்டும். இந்த வாக்கெடுப்பில் முத்து, தீபக், மஞ்சரி, ஜாக், அருண், தர்ஷிகா போன்ற பெயர்கள் சொல்லப்பட்டது பொருத்தம். விஷாலைக் கூட யோசித்து ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ரஞ்சித்தின் பெயரைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார் அருண். பவித்ராவின் பெயரைச் சொல்லி ‘தான் கோவா கேங் இல்லை’ என்பதை நிரூபிக்க விரும்பினார் ஜெப்ரி. ‘அப்ப பிடிக்கலை.. இப்ப பிடிக்குது’ என்று மஞ்சரியைப் பற்றி நேர்மையாக சொன்னார் அன்ஷிதா. 

ரஞ்சித், பவித்ரா போன்றவர்கள் இயல்பிலேயே மென்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களிடமும் வேறு சில பக்கங்கள் நிச்சயம் இருக்கும். அவற்றை அவர்கள் கவனமாக ஒளித்து வைத்துக் கொள்கிறாார்களா என்று தெரியவில்லை. அது இயல்பாகவே இருந்தாலும் இந்த ஆட்டத்திற்கு அது சுவாரசியமாகப்படவில்லை. இறுதியில் அதிக வாக்குகளைப் பெற்று ‘பெஸ்ட்’ கேட்டகிரியின் முதலிடத்தைப் பிடித்தார் ஜாக். இரண்டாமிடத்தை முத்துவும் மூன்றாம் இடத்தை விஷாலும் பெற்றார்கள். (பாவம் தீபக், ஜனநாயக வாக்கெடுப்பு படுத்தும் பாடு!). இந்த மூவரும் அடுத்த வார தலைவர் போட்டியில் ஈடுபடுவார்கள். 

BBTAMIL 8: DAY 68

‘இந்த வீட்டில் இவர்கள் எப்படி இன்னமும் இருக்கிறார்கள்?’ என்று இரண்டு பெயர்களைச் சொல்ல வேண்டும். இதில் பெரும்பாலும் ரஞ்சித், சத்யா, அன்ஷிதா போன்ற பெயர்கள் வந்தன. ரஞ்சித் மற்றும் பவித்ராவின் பெயர்களைச் சொன்ன முத்துவின் விளக்கம் மிகத் துல்லியமாக இருந்தது. விதிவிலக்காக சவுந்தர்யாவி்ன் பெயரை தர்ஷிகா மட்டுமே சொன்னார். ‘வெறும் க்யூட்னஸ் மட்டும் போதாது’ என்று சவுந்தர்யா குறித்து அவர் சொன்ன காரணம் சரியானது. இறுதியில் ரஞ்சித் மற்றும் பவித்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் உள்ளே புகுந்த பிக் பாஸ் “இந்த நிகழ்ச்சி உங்களுக்குப் பிடிக்குதோ..இல்லையோ.. ஆனா உங்க கிட்ட இருக்கற உண்மையை பத்து சதவீதமாவது வெளியே கொண்டு வரும். இந்த ஆட்டம் எப்படின்னு தெரிஞ்சுதான் வந்திருக்கீங்க. இங்க சிலர் நேர்ப்பட பேசாறங்க. ஆனா சிலர் தங்களைக் கூண்டுக்குள்ள ஒளிச்சு வெச்சிருக்காங்க. ஏன்னு அவங்கதான் தன்னைப் பார்த்துக்கணும். இந்த வீட்டில் கண்ணாடிக்கு பஞ்சமில்லை” என்று சேஃப் கேம் ஆடுபவர்களை ஊமைக்குத்தாக குத்தினார். 

பிக் பாஸ் பேசி முடித்ததும் ஜாக்குலின் தன்னிச்சையாக கைத்தட்டி சிரிக்க, அவரை முறைத்துப் பார்த்த ரஞ்சித் “இதுக்கு என்ன அர்த்தம்?” என்று மெல்லிய கோபத்துடன் கேட்டார். “சும்மாதான். அவர் பேசினது பிடிச்சிருந்தது” என்றார் ஜாக்குலின். அந்தச் சமயத்தில் ரஞ்சித்தைப் பார்த்த போது ‘அவளுக்குள்ள இருக்கற சந்திரமுகியை அப்போதான் நான் முதன் முதலில் பார்த்தேன்’ என்கிற மாதிரி இருந்தது. தன் பெயரை பலரும் குறிப்பிட்டதில் ரஞ்சித் உள்ளூற புண்பட்டிருக்கலாம். 

ஜெப்ரியின் மீது எழும் ‘திடீர்’ விமர்சனங்கள்


கோவா கேங்கில் இருந்து ஜெப்ரி அதிகாரபூர்வமாக விலகிய செய்தி வந்து விட்டதால் அவரைப் பற்றிய எதிர் விமர்சனங்கள் அந்தக் குழுவிடம் இருந்து அதிகம் வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. “ஜெப்ரி ஒண்ணும் அவ்வளவு கஷ்டப்படறவன்லாம் இல்ல. நல்ல நல்ல டிரஸ்லாம் வருது’ என்றார் ஜாக். “அனுதாபப்பட்டு இந்த பாஸை கொடுத்தது அவன் தகுதியைக் குறைக்கறா மாதிரி இருக்கு’ என்று சரியாகச் சொன்னார் மஞ்சரி. “மத்தவங்க நம்பிக்கையையெல்லாம் இதுவரைக்கும் வாங்கிட்டு சட்டுன்னு விலகிப் போற மாதிரி இருக்கு” என்றார் ரயான். ‘பவித்ராவிற்கு எப்படி பெஸ்ட் பிளேயர்ன்னு ஜெப்ரி கொடுத்தான்..?’ என்கிற கேள்வியின் மூலம் சமீபத்தில் பவித்ராவுடன் அதிகமாக பேசத் துவங்கியிருக்கிற ஜெப்ரியை கேள்விக்கு உட்படுத்தினார்கள். 

‘தெனம் தெனமும் உன் நினைப்பு வளைக்கிறதே..’ என்று இளையராஜாவின் குரலில் பாடல் ஒலிக்க மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சி. (‘ஏதாவது வைல்ட் கார்டோ?!’) கன்ஃபெஷன் அறையின் வழியாக மஞ்சு வாரியர், சூரி, (பரோட்டா என்கிற முன்னொட்டை இப்போது யாரும் குறிப்பிடுவதில்லை, கவனித்தீர்களா?!) கென் கருணாஸ் ஆகிய மூவரும் விடுதலை -2 திரைப்படத்தின் பிரமோஷனிற்காக வந்தார்கள்.

BBTAMIL 8: DAY 68

அந்தப் பாட்டு மீண்டும் ஒலித்த போது மக்கள் ஆத்மார்த்தமாக கேட்டு ரசித்து நெகிழ்ந்தார்கள். ஹார்லி க்வீனின் நினைப்பு வந்து ரகசியமாக கண்கலங்கினார் அருண். “வரிகள் புரியற மாதிரியான பாட்டு”என்று ரஞ்சித் பாராட்டியது உண்மை. (அனிருத்தின் கவனத்திற்கு!) “காமெடி நடிகனா இருந்த என்னை வேற மாதிரி செதுக்கியது இயக்குநர் வெற்றி மாறன்” என்று சிலாகித்தார் சூரி. ‘இளையராஜா இசையில் என்னுடைய முதல் பாடல் இது” என்று மகிழ்ந்த மஞ்சு வாரியர், இளம் வயதில் நாகர்கோவிலில் வளர்ந்த போது இளையராஜாவின் இசை எப்படி வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை விவரித்த போது தொன்னூறு சதவீத பார்வையாளர்கள் அவருடைய பேச்சுடன் கனெக்ட் ஆகி தங்களையும் பொருத்திப் பார்த்திருப்பார்கள்.

‘ஜெப்ரி நடிக்கறார்ப்பா..’ -  அம்பலப்படுத்திய சூரியின் மகன்


‘காமெடி நடிகனா இருந்த எனக்கெல்லாம் பாட்டு வர்றதே பெரிய விஷயம்’ என்று சொல்லி சிரிக்க வைத்தார் சூரி. விஜய்சேதுபதி வாய்ஸில் பேசி சபையை மகிழ்வித்தார் விஷால். “இ்ந்தப் படம் பாடப்படாத நாயகர்களைப் பற்றிய கதை” என்றார் மஞ்சு.

நாமினேஷன் ப்ரீ பாஸ் ஜெப்ரிக்கு வழங்கப்பட்டது. பொம்மை டாஸ்க்கில் ராணவ்வால் வளைத்து பிடிக்கப்பட்ட ஜெப்ரி வலியால் கத்தியதை தொலைக்காட்சியில் பார்த்த சூரியின் மகன் ‘அவரு நடிக்கறாருப்பா’ என்று சொன்னதை ஜாலியாக இந்தச் சமயத்தில் பகிர்ந்து கொண்டார் சூரி. அதனால் ஜொ்க் ஆன ஜெப்ரி “அனகோண்டா மாதிரி வளைச்சு பிடிச்சிட்டான்.. என்ன பண்றது?” என்று ஆட்சேபித்து முனகினார். 

BBTAMIL 8: DAY 68

விஷாலின் வேண்டுகோளுக்கு இணங்க ‘மனசிலாயோ’ பாடலுக்கு ஸ்டெப்ஸ் போட்டார் மஞ்சு. பிறகு இந்தக் குழு விடைபெற்றது. 

சாப்பாட்டை தட்டு போடாமல் மூடி வைக்காமல் இருந்ததற்காக ஜெப்ரியை கடிந்து கொண்டார் ஜாக்குலின். அவரை மட்டும் சொன்னால் தெரிந்து விடும் என்பதற்காக வம்படியாக ராணவ்வையும் இணைத்துக் கொண்டார். “தெரியாம பண்ணிட்டேன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் ராணவ்வை ஜாடையா திட்றீங்க?” என்று பதிலுக்கு மல்லுக்கட்டினார் ஜெப்ரி. இதுவே கோவா கேங் நீடித்திருந்தால் ஜாக்குலின் இந்தப் புகாரை வெளிப்படையாக சொல்லியிருக்க மாட்டார் என்பதை மட்டும் எளிதாக யூகிக்கலாம். 

இன்று பஞ்சாயத்து நாள். யார் வெளியேற்றப்படுவார் என்பது முதற்கொண்டு பல விஷயங்கள் வெளிப்படும். கடந்த வாரயிறுதியைப் போலவே இந்த வார இறுதியையும் விஜய்சேதுபதி மேலும் சுவாரசியப்படுத்துவார் என்று நம்புவோம். 

`மீண்டும் ஒருவரை நம்பவும், என்னை நானே நேசிக்கவும்..!' - கணவர் வெற்றி வசந்த் குறித்து வைஷ்ணவி

`சிறகடிக்க ஆசை' வெற்றி வசந்திற்கும், `பொன்னி' வைஷ்ணவிக்கும் பெற்றோர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் பிசியாக அவரவர் தொடர்களில் நடித்துக் கொண... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 67: கண்ணீர் விட்ட சவுந்தர்யா; அருண் டார்ச்சர் குறித்து அனத்திய முத்து

இந்த எபிசோடில் எனக்குப் பிடித்த காட்சி என்னவென்றால் ‘இத்துடன் டாஸ்க் நிறைவு பெறுகிறது’ என்று பிக் பாஸ் அறிவித்ததுதான். போட்டியாளர்களைப் போலவே நாமும் ‘ஹப்பாடா’ என்று ஆனந்தக்கூச்சல் போடுமளவிற்கு அத்தனை ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: "செளந்தர்யா ஓவரா நடிக்கிறாங்க; ஆனா தீபக் அண்ணா...'' - நவீன் வெற்றி பேட்டி

பிக் பாஸ் சீசன் 8 பரபரப்பாகச் சென்றுக் கொண்டிருக்கிறது.தற்போது வீட்டில் அருணின் சத்தமே அதிகமாகக் கேட்கிறது. மற்றொரு பக்கம் இந்த வாரம் தன்னுடைய வழக்கமான ஜோனிலிருந்து வெளியே வந்திருக்கிறார் இந்த வார கேப... மேலும் பார்க்க

Siragadikka aasai: புதிய வில்லி அறிமுகம்; முத்து எங்குச் சென்றார்? வரிசைக்கட்டும் பிரச்னைகள்

சிறகடிக்க ஆசை சீரியலின் கடந்த இரண்டு எபிசோடுகளில்,கல்யாண மண்டபத்துக்கு மீனா எடுத்த முதல் ஆர்டரை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறார். கல்யாண மண்டபத்தின் மேலாளர் மீனாவைப் பாராட்டி அவரின் கட்டணத்தைக் கொடுக... மேலும் பார்க்க

FAMILY படம்: ``சீரியல்ல துணை நடிகையா இருக்கிற எனக்கு இந்த அங்கீகாரம் ரொம்பவே பெரிசு" - சுபிக்‌ஷா

’அழுத்தமான வேடத்தில் குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்’னு என்னைப் பத்தி இந்த வார ஆனந்த விகடன்ல எழுதியிருக்காங்க. சீரியல்கள்ல கூட மெயின் ரோல்ல இல்லாம சப்போர்ட் கேரக்டர்கள்ல நடிச்சிட்டிருக்கிற எனக்... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 66: `நான் போகமாட்டேன்' அடம்பிடித்த அன்ஷிதா; வினையாகிப் போன முத்துவின் விளையாட்டு

இந்த சீசனில் எத்தனையோ சுமாரான எபிசோடுகளை எப்படியோ ஒப்பேற்றி எழுதியுள்ளேன். ஆனால் இந்த எபிசோடு இருக்கிறதே.. பயங்கர இழுவை. ஒரு துளி சுவாரசியம் கூட இல்லை. “பிக் பாஸ்.. நான் சுச்சா போறேன்.. எனக்காக ராணவ் ... மேலும் பார்க்க