Spiders: தங்களுடைய வலைகளையே சாப்பிடும் சிலந்திகள்; அறிவியல் சொல்லும் காரணம் தெரி...
BB TAMIL 9:DAY 39: ‘அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்’ -பிக் பாஸ் டெக்னிக்; ரணகளமான ரேங்கிங் டாஸ்க்
பிக் பாஸ் பாருவின் ரசிகர் போல. பாரு சொல்லும் விஷயங்களையெல்லாம் டாஸ்க்கில் நுழைத்து விடுகிறார். பல எபிசோடுகளுக்கு முன்பே கனியை ‘ராஜமாதா’ என்று பாரு கிண்டலடிக்க, அதே பாத்திரம் கனிக்கு ராஜா - ராணி டாஸ்க்கில் கிடைத்தது. விக்ரமை ‘பாணபத்திர ஓணாண்டி’ என்று பாரு கிண்டலடிக்க, அவருக்கு புலவர் பாத்திரம் கிடைத்தது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 39
‘எனக்கு ராஜா வேஷம் கொடுத்துட்டாங்கன்னு எஃப்ஜேக்கு வயித்தெரிச்சல், பொறாமை’ என்று பதவி போன கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தார் திவாகர். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்று பாரு அசந்தர்ப்பமாக தத்துவம் சொல்ல “நீ போ.. நீயும்தான் கேம் ஆடறே.. ஆனா அதுல நோ்மை இருக்கணும்.. நான் சொல்ற விஷயங்களையெல்லாம் காப்பியடிச்சு சொல்லி நீ பேர் வாங்கிக்கற” என்று மூச்சு விடாமல் பாருவை எதிர்த்துப் பேசி பாருவின் வாயையே அடைக்கும் சாதனையைச் செய்தார் திவாகர். (சரியான ஜோடி!)

“சரிப்பா.. நீதான்.. எல்லாம்.. நீதான் டைட்டில் வின்னரு.. நீதான் ராஜா.. நீ சொல்றது சரி.. ஓகேவா?” என்று சர்காஸ கோபத்தில் பாரு சொன்னதெல்லாம் ஒருவகையில் அவருக்கே பொருந்திப் போனது.
இரண்டு டாஸ்க்கிலும் வெற்றி பெற்றதால் தர்பீஸ் ராஜ்ஜியத்திற்கு இரண்டு வைரக்கற்கள் பரிசாகக் கிடைத்தன. (பத்திரமா எடுத்து வையுங்க.. கற்கண்டுன்னு நெனச்சு அதையும் எடுத்து தர்பீஸ் சாப்ட்றப் போறாரு.. - வினோத் கமெண்ட்!).
தீர்ப்பு சொல்வதில் பல்டியடித்த கண்ணழகி பாரு
டாஸ்க் ஆரம்பம். ‘ராணியைப் புகழ்ந்து அரசவை நிகழ்வை ஆரம்பிப்போம்’ என்றார் ராஜமாதா. எதிர் டீமைப் பார்த்து இடி முழங்கிய குரலில் சிரித்தார் திவாகர். ‘வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி, பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி’ என்று பாட்டால் கவுண்ட்டர் கொடுத்தார் வினோத்.
“எங்களது மன்னரின் சிரிப்பே ஒரு வைரக்கல். ஆனால் நீங்கள் அமைச்சராக வைத்திருப்பது ஒரு பாறாங்கல்” என்று வினோத்தின் கிண்டல்கள் தொடர்ந்தன.
அரோரா vs திவாகர் வழக்கு விசாரணை தொடர்ந்தது. நேற்று கொடுத்த தீர்ப்பை அப்படியே மாற்றி ‘இருவருமே சிறைக்குச் செல்ல வேண்டும்’ என்று அநியாயமான தீர்ப்பை வழங்கினார் அரசி பாரு. வினோத்தை நோக்கி திவாகர் தவறாகப் பேசியதைத்தான் அரேரா ஆட்சேபித்தார். அதற்காக அரோராவையும் ‘ஏய்.. ‘ என்று ஆரம்பித்து மோசமாக பேசினார் திவாகர்.

திவாகரைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற சேஃப் கேம் மாதிரி தெரிகிறது. “என் மீது வைத்தால் புரட்சி வெடிக்கும்” என்று சிணுங்கினார் அரோரா (அத்தனை லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்களோ?!)
பாரு ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை
இதற்கிடையில் சாண்ட்ராவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு திவாகர் தடுக்க முயல, அவர் அய்யோவென்று அலற, பிரஜின் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து சாண்ட்ராவை மீட்டார்.
‘இந்த நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்று எதிரியின் நாட்டில் தஞ்சம் புகுந்தார் அரோரா. ‘ராமர் இருக்கும் இடமே, சீதைக்கு அயோத்தி’ என்கிற பாலிசியில் சாண்ட்ராவும் எதிர் டீமிற்கு ஷிஃப்ட் ஆனார்.
‘எதிர் நாட்டிற்கு தளபதி சாண்ட்ரா சென்று விடுவாரோ என்றுதான் அவரைப் பிடித்தேன்’ என்று திவாகர் காரணம் சொல்ல. அவருக்குக் கொடுமையான தண்டனையை வழங்கினார் அரசி பாரு. ஆம், அமைச்சரின் வாயில் டேப் போட்டு ஒட்டப்பட்டது. (இது திவாகருக்குத் தண்டனையாக இருக்கலாம். பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல வெகுமதி!).
“அவருக்குத் தெரிந்தது பேசறது மட்டும்தான். அதையும் மூடி விட்டீர்களா.. கிருஷ்ணன் வெண்ணைய்யைத் தின்றது போல், இந்த அமைச்சர் தாரை ஊற்றி குடித்து விட்டது போல் இருக்கிறது” என்று கறுப்பு நிற டேப்பை கிண்டலடித்தார் வினோத்.

மாறி மாறி உருவக்கேலி செய்யும் திவாகர் - வினோத்
‘எங்களது நாடகத்தை ஆரம்பிக்கும் முன் விநாயகரை வணங்கி விட்டு வருகிறேன்’ என்று திவாகரை ஓடிச் சென்று வணங்கினார் வினோத். இவர் செய்யும் கிண்டல்கள் சமயங்களில் ரசிக்க வைத்தாலும் சில சமயங்களில் உருவக்கேலியாக அமைந்து விடுவது கண்டிக்கத்தக்கது. என்றாலும் திவாகர் சும்மா இருப்பாரா? பதிலுக்கு ‘கா.. கா’ என்று கத்தி வினோத்தின் நிறத்தைக் கிண்டலடித்தார்.
கண்டுகொண்டேன் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரஜினும் திவ்யாவும் நடித்துக் காட்டினார்கள். பிரஜின் உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டிருக்குச் சிரிப்பு தாங்க முடியாமல் தவித்தார் திவ்யா.
அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். பிளாக்ஸ் கொண்டு கோட்டையைக் கட்டும் போட்டி. ஒரு அணி கட்டும் போது எதிர் அணி பந்துகளை அடிப்பதின் மூலம் அவற்றைக் கலைக்க வேண்டும். வழக்கம் போல் கச்சா முச்சாவென்று நடந்து முடிந்தது. ஒரு கட்டத்தில், தன் சொந்த அணிக்குப் பாதகமாக இருந்தாலும் நோ்மையான பதிலை சபரி சொல்ல, “அப்படியெல்லாம் சொல்லாத" என்று கத்தினார் திவாகர்.
‘ரீகேம் வேண்டும்’ என்று நடுவர்களில் ஒருவரான பாரு சொல்ல, ‘தேவையில்லை’ என்றார் இன்னொரு நடுவர் விக்ரம். இடையில் புகுந்த பிக் பாஸ் ‘மீண்டும் ஆட்டம்…..’ என்று இடைவெளி விட துள்ளிக் குதிப்பதற்குத் தயாராக இருந்தார் பாரு. “கிடையாது’ என்று பிக் பாஸ் வாக்கியத்தை முடிக்க, சாக்லேட் பிடுங்கப்பட்ட குழந்தை மாதிரி சோர்ந்து போனார் பாரு, (அப்படி என்ன அவசரம்?!)
கோட்டை கட்டும் டாஸ்க்கில், தர்பீஸ் அணி கோட்டை விட்டதால் கானா அணி வெற்றி பெற்றது. என்றாலும் முந்தைய இரண்டு போட்டிகளிலும் தர்பீஸ் ராஜ்ஜியமே வெற்றி என்பதால் இந்த டாஸ்க்கில் அவர்களே வெற்றி. இவர்களில் ஒருவர் வீட்டு தல டாஸ்க்கில் பங்கு பெறலாம்.

‘அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்’ - பிக் பாஸ் டெக்னிக்
பரிசு கிடைக்கப் போகிறது என்றதும் எதிர் அணிக்குத் தாவிச் சென்றவர்கள் எல்லாம் திரும்பினார்கள். “அதையெல்லாம் ஒத்துக்க முடியாது” என்றார் பாரு. “டாஸ்க் நடந்தப்ப நாங்க கேரக்டர் பிளே பண்ணோம்.. இருந்தாலும் உங்க டீம்தானே?” என்று லாஜிக் பேசினார் எஃப்ஜே. (இவரு எத்தனை கேரக்டர்தான் பிளே பண்ணுவாரோ?!) இவர்கள் திரும்பி வந்தது வீண்தான். மெஜாரிட்டியாக வாக்கு பெற்று சுபிக்ஷா ‘தல’ போட்டிக்குத் தேர்வானார். (சைலண்ட்டா ஸ்கோர் பண்ணுதுப்பா இந்தப் பொண்ணு!).
இது பிக் பாஸின் வழக்கமான டெக்னிக்தான். ‘அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்’. காரணம் சொல்லாமல் அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘இந்த வீட்டில் பெரியமனுஷத்தனமாக நடந்து கொள்ளும், முடிவுகளைச் சரியாக எடுக்கும் பொறுப்புள்ள மூன்று நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்போது மூட்டையை அவிழ்த்தார் பிக் பாஸ். ரேங்கிங் டாஸ்க்கில் இந்த மூவரும் நடுவராக இருந்து ஆட்களைத் தேர்வு செய்வார்கள். மிகவும் முதிர்ச்சியாக நடந்து கொள்ளும் போட்டியாளர் எண்.1-ல் இருப்பார். மிகவும் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்பவர் கடைசி எண். 14-ல் இருப்பார். இந்த ஆர்டரில் செலக்ஷன் நடைபெற வேண்டும்.
அதன்படி நடுவர் குழு தோ்வு செய்தது. சபரி (1), சுபிக்ஷா (2), கெமி (3), சாண்ட்ரா (4), பிரஜின் (5), வியானா (6), அரோரா (7), ரம்யா (8), திவ்யா (9), கம்ருதீன் (10), வினோத் (11), எஃப்ஜே (12), பாரு (13), திவாகர் (14).

ரணகளமாக நடந்து முடிந்த ரேங்கிங் டாஸ்க்
நிதானமாகவும் பொறுமையாகவும் முதிர்ச்சியாகவும் நடந்து கொள்பவர்கள் டாப் ஆர்டரில் இருப்பார்கள். தேவையில்லாமல் கத்துதல். மற்றவர்களை மோசமாகக் கிண்டலடித்தல், ஒரு பிரச்னையைப் பெரிதாக்குதல் போன்ற விஷயங்களைச் செய்பவர்கள் கடைசி ஆர்டரில் இருப்பார்கள். இதுதான் எங்களுக்குத் தரப்பட்ட வழிகாட்டு விதிகள் என்று நடுவர்கள் விளக்கினார்கள்.
ரேங்கிங் டாஸ்க் என்றால் தகராறு இல்லாமல் இருக்குமா? “என்னால இதை ஏத்துக்கவே முடியாது” என்று கலகத்தை ஆரம்பித்தார் பாரு. “இவர்களுக்கு நடுவர்களாக இருக்க தகுதியே இல்லை” என்று கத்தினார் திவ்யா. எஃப்ஜேவும் கூடவே கத்தினார். “கனியக்கா என்னைப் பத்தி நிறைய புறணி பேசியிருக்காங்க” என்று மூச்சு விடாமல் தம் கட்டினார் திவாகர்.
முதல் மூன்று இடத்தைப் பெற்றவர்களுக்குத் தகுதியே இல்லை என்று கூச்சல்கள் எழுந்தன. “எனக்கு மூணாவது இடம் வேண்டும்” என்று வாக்குவாதம் செய்தார் வியானா. “எங்களால நடிச்சு சேஃப் கேம் ஆட முடியாது. நேச்சுரலா இருப்போம்” என்று கம்ருவும் வினோத்தும் கூட்டாகச் சொன்னார்கள்.
கூச்சல் குழப்பத்திற்குப் பிறகு, "இதுதான் உங்கள் இறுதி முடிவா?” என்று நடுவர்களைக் கேட்டார் பிக் பாஸ். அவர்கள் உறுதியாக ‘ஆம்’ என்றதும், கடைசி மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குச் சிறைத்தண்டனை என்று பிக் பாஸ் அறிவித்ததும், “அய்யோ.. பிக் பாஸ்.. என்ன இப்படிப் பண்றீங்க?” என்று சோகமாகச் சிணுங்கினார் பாரு.

“சபரில்லாம் பொறுமையானவரா.. நல்ல கதையா இருக்கே.. டாஸ்க்ல பாருவை வேணுமின்னே அடிச்சு பழிவாங்கினாரு” என்று ஆவேசப்பட்டார் பிரஜின். “இந்த வாரத்துல அதிகமா அடி வாங்கியது நானு.. கப்பு எனக்குத்தான் சேரணும்” என்று வீர ஆவேசத்துடன் முழங்கினார் பாரு. தங்களுக்குத் தரப்பட்ட வழிமுறைகளைச் சொல்லி சமாதானப்படுத்த முடியாமல் நொந்து நூடுல்ஸ் ஆனார்கள் நடுவர்கள்.
சிறைக்குச் சென்றும் ரீல்ஸ் போட்டு தமிழக மக்களை இம்சை செய்த திவாகர்
“எனக்கு மட்டும் சோதனை மேல் சோதனை நடக்குதே” என்று அனத்தினார் பாரு. சிறைக்குச் செல்ல வேண்டிய தண்டனை குறித்த புலம்பல். “ஜெயில்ல இருக்கறதுதான் ஜாலி. உள்ளே இவங்களோட இருக்க முடியாது” என்று முன்பு சொன்னவரும் இவரேதான். (ஓ. அப்ப கூட இருந்தவர் கம்ருதீன் என்பதுதான் காரணமா?!).
“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சபரியும் எப்படிச் சண்டை போட்டாரு பார்த்தீங்கள்ல.. இந்த வீட்ல நம்மள அப்படி ஆக்கிடுவாங்க.. அதுக்காக என்னைக் கத்தறவனுக்கு முடிவு பண்றதா?” என்று விக்ரமிடம் மல்லுக்கட்டினார் திவ்யா.

சிறைக்குச் சென்றாலும் ரீல்ஸ் தாகம் அடங்காமல் “தமிழக மக்களே.." என்று திவாகர் காமிராவைப் பார்த்து ஆரம்பிக்க, “அய்யோ.. இங்க இருந்து தப்பிச்சு ஓடவும் முடியாதே” என்று சக சிறைவாசிகளான பாருவும் எஃப்ஜேவும் புலம்பினார்கள். நடுவர்களான கனி, விக்ரம் ஆகிய இருவரும் க்ரூப்பிஸம் காரணமாக முதல் மூன்று இடத்தைத் தந்து எங்களைப் பழிவாங்கி விட்டார்கள் என்பது நடிப்பு …… அரக்….கனின்.. புகார்.
நடுவர்களில் ஒருவராக இருந்த பாவத்திற்காக இவர்களிடம் பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே என்று கனி ஒரு பக்கம் அழ ஆரம்பிக்க அவரைச் சமாதானப்படுத்தினார் சபரி. “பாரு.. எத்தனை முறை என்னை வக்ரம். வக்ரமன்னு சொல்லிட்டே இருந்தாங்க. டாஸ்க்ல கூட சொன்னாங்க. இந்த வீட்ல இனிமே நல்லவனா இருக்கக்கூாது போல” என்று கனியிடம் விக்ரம் புலம்ப அதை ஆமோதித்தார் கனி.
இன்னொரு பக்கம் ரம்யாவின் அழுகை. “பாருவை விட பத்து மடங்கு கத்தத் தெரியும். இருந்தாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட்டு ரெண்டு வாரமா அமைதியா இருக்கேன். இது கனிக்கும் விக்ரமிற்கும் தெரியாதா?” என்று ரம்யா புலம்ப, “என்னைக் கூடத்தான் தப்பு தப்பா பேசறாங்க.. பாருவை நான் வேணுமின்னே அடிச்சேன்னு சொல்றாங்க. விடு” என்று இங்கும் சமாதானப் புறாவாக வலம் வந்தார் சபரி.
ஆக.. நடந்து முடிந்த ராஜா ராணி டாஸ்க்கில் கப்பு பார்வையாளர்களுக்கு மட்டும்தான் தரப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அதிகமாக அடி வாங்கியது அவர்களே!



















