செய்திகள் :

BB Tamil 9 Day 62: பாரு பெஸ்ட் பிளேயரா?; மாட்டிக் கொண்ட ரம்யா, வியானா, விக்ரம்!

post image

ஒரு பக்கெட் துணியை இரண்டு மணி நேரமாக அலசி எபிசோடை முடித்துவிட்டார் விஜய்சேதுபதி. 


‘பிரம்பு வாத்தியார் அவதாரம் எடுக்காமல், சுவாரசியமான டாஸ்க்குகளை வைத்து நடந்த  வீக்கெண்ட் ஷோ நன்றாக இருந்தது. இது தொடர்ந்தால் நன்றாக இருக்கும்’ என்று கடந்த வாரத்தில் எழுதியிருந்தேன். 


ஆனால் இந்த வாரம் மீண்டும் பிரம்பை கையில் தூக்கிவிட்டார் விசே.  

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 62

விசாரிப்பதற்கு பல விஷயங்கள் இருக்கும்போது, இந்தப் பக்கெட் துணி சமாச்சாரத்தை இத்தனை நேரத்திற்கு இழுக்க  என்ன காரணம்? பிக் பாஸின் செல்லப் பிள்ளையான விக்ரம் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பதை நிரூபிப்பதற்கா?  அல்லது பாரு மாதிரி தந்திரமாக விளையாட, ரம்யாவிற்கும் வியானாவிற்கும் தெரியவில்லை என்பதைக் காட்டுவதற்கா?

Vijay Sethupathi
Vijay Sethupathi

இத்தனைக்கும் வெள்ளிக்கிழமை நிகழ்விலேயே அனைத்து சண்டையும் முடிந்து மன்னிப்பு கேட்கப்பட்டு அந்த டிராமா முடிந்து விட்டது. மீண்டும் அதைத் தோண்டி ‘ரம்யா நீங்க சொல்லுங்க. வியானா நீங்க சொல்லுங்க’ என்று இழுத்தது, வெளிப்படையான நேர விரயம். 

இந்த நாடகத்தின் சூத்ரதாரியான பாருவிற்கு ‘நல்லா விளையாடினீங்க’ என்று பாராட்டு கிடைத்தது வேறு கொடுமை. 

நெக்லஸ் பக்கத்தில் குத்துக்கல் மாதிரி அமர்ந்திருந்த விக்ரமை எழுப்புவதற்காக பாரு செய்த ஸ்ட்ராட்டஜி நன்று. அதில் மறுப்பே இல்லை. ஆனால் இந்த பிளானை ரம்யாவிற்கும் வியானாவிற்கும் அதில் தெளிவாகச் சொல்லி விட்டுச் செய்தாரா என்பதில்தான் குழப்பமே. இதில்தான் பாரு தெளிவாக கேம் ஆடியிருக்கிறார். 


வியானாவாவது விசே சற்று அதட்டிக்கேட்டால் ‘தெரியும்’ என்று ஒரு மாதிரி குன்சாக சொல்கிறார். ஆனால் ரம்யாவோ ‘இது எனக்குத் தெரியவே தெரியாது’ என்று வீட்டிலும் சொல்லி விட்டு அழுகிறார். விசாரணையின் போதும் அழுகிறார். 

Ramya
Ramya

எனில் இவர்களுக்கான சந்தேகத்தின் பலனை அளித்து ஒரு குறும்படத்தை விசே வெளியிட்டிருக்கலாம். பாருவின் சமையல் காமெடிக்கெல்லாம் குறும்படம் போட்டு மகிழும் பிக் பாஸ் டீம், இத்தனை அதி தீவிர பிரச்சினைக்கும் ஒரு குறும்படம் போட்டிருந்தால் பாரு சொன்னது உண்மையா, அல்லது வியானாவும் ரம்யாவும் சொன்னது பொய்யா என்று தெரிந்திருக்கும். 

Paaru
Paaru

பாரு போட்ட மாஸ்டர் பிளான் - மாட்டிக் கொண்ட ரம்யா, வியானா, விக்ரம்


‘எனக்கு இது பிளானுன்னு தெரியாது. தலன்றதால என்கிட்ட பாரு புகார் சொல்றாங்க போலன்னுதான் நெனச்சேன். என்னை ஏன் டார்கெட் பண்றீங்க. இந்த விஷயத்துல என்னை ஏன் கெட்டவளா காட்ட முயற்சிக்கறீங்க..?” என்று வீட்டிற்குள்ளேயே வெடித்து அழுகிறார் ரம்யா. 


இதைத் திரையில் பார்த்துக் கொண்டிருந்த விசே, ரம்யாவை விசாரிக்கும்போது தனது வழக்கமான கடுமையைக் காட்டியது முறையானதல்ல.

ஒருவேளை இப்படி நடந்திருக்கலாம். ‘விக்ரமை எப்படியாவது எழுப்ப வேண்டும்’ என்கிற பிளானை பாரு, தன் அணியிடம் முதலில் சொல்லியிருக்கலாம். பிறகு பக்கெட் துணி பிரச்சினையை சொல்லியிருக்கலாம். இதை இரண்டையும் சரியாக கனெக்ட் செய்து யோசிக்கும் அளவிற்கு ரம்யாவிற்கும் வியானாவிற்கும் தெரியாமல் போயிருக்கலாம்.  குறிப்பாக ரம்யாவிற்கு இரண்டையும் கனெக்ட் செய்து யோசிக்கத் தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால்தான் அதையே தொடர்ந்து சொல்லி அழுகிறார். 


“அது எப்படிம்மா உங்களுக்கு தெரியாம போகும்…? என்று ரம்யாவை மீண்டும் மீண்டும் விசே கேள்வி கேட்டு வதைத்தது ஒரு வகையான டார்ச்சர் போலவே தெரிந்தது. ‘கெட்ட வார்த்தைல்லாம் பேசத் தெரியுது. இதை யோசிக்க முடியலையா?” என்று சம்பந்தமில்லாமல் கோர்த்து பேசினார் விசே. 

Vikram
Vikram

வியானாவிற்கும் இதுபோல், பக்கெட் துணி சமாச்சாரத்தை பாருவின் பிளானுடன் இணைத்து யோசிக்கத் தெரியாமல் இருந்திருக்கலாம். இல்லையென்றால் இத்தனை ஆக்ரோஷமாக விக்ரமுடன் சண்டை போட்டிருக்க மாட்டார். ஏனெனில் இந்த விவகாரத்தில் அவருடைய உடைதான் சர்ச்சைக்குள்ளானது. தெரிந்தே பாருவின் பிளானிற்கு ஒப்புதல் சொல்லியிருக்கமாட்டார். 


‘பாரு.. நீங்க பெஸ்ட் வில்லன்’ - சர்காஸமாக பாராட்டிய விக்ரம்


இதையெல்லாம் கூடுதலாக ஒன்றுண்டு. விக்ரமை அப்புறப்படுத்த பாரு பிளான் போட்டது சிறப்புதான். ஆனால் அதற்குப் பின்னால் வியானா மற்றும் ரம்யாவின் அழுகை, விக்ரமின் கோபம் போன்றவை நடந்தததற்குப் பின்னாலாவது விக்ரமிடம் அதைச் சொல்லியிருக்கலாம். 

ஆனால் பாரு சொல்லாமல் கமுக்கமாக இருந்து விட்டார். பிரச்சினை பொிதாக வெடிக்கும் போதுதான் வாயைத் திறந்தார். “பாரு. நீங்க பெஸ்ட் வில்லன். இதுல வியானா ஹர்ட் ஆகியிருக்கா.. நான் அழுதிருக்கேன். அப்பவே சொல்லி இதை முடிச்சு வெச்சிருக்கலாம்’ என்று விக்ரம் பாருவிடம் குறிப்பிட்டது இதைத்தான். 


ஒவ்வொரு போட்டியாளரும் ஐக்யூவில் ஒவ்வொரு மாதிரியாகத்தான் இருப்பார்கள். அந்தந்த மீட்டரில் அவர்களை வைத்து நிதானமாக விசாரிப்பதுதான் ஒரு ஹோஸ்டின் முறையான செயல். ஆனால் விசேவோ, அனைவருமே தன்னுடைய மீட்டரில் யோசித்து சட்டென்று புரிந்து பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அப்படி இயலாதவர்களை ‘உக்காருங்க.. உங்களுக்கு ஒண்ணும் புரியலை’ என்று அவமானப்படுத்துகிறார்.

Vikram
Vikram

ரம்யாவிற்கு இந்த பிளான் தெரியாது என்பதால்தான் வீட்டிற்குள்ளும் மறுத்து அழுகிறார். அதையே விசே வலியுறுத்தும் போதும் ‘எனக்குத் தெரியாது சார். வேணுமின்னா கேம் விட்டு போயிடறேன்’ என்கிறார். அவர் மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. எனில் விசே இதை நிதானமாக ஹாண்டில் செய்கிறார்கள். ‘எப்படி இருக்கீங்க பேபிஸ்?’ என்று அவர் செல்லம் கொஞ்ச வேண்டியதில்லை. காட்ட வேண்டிய இடங்களில் கடுமை காட்டுவது அவசியம். ஆனால் அதையே எல்லாவற்றிலும் பின்பற்ற வேண்டியதில்லை. 


ரம்யாவிற்கும் வியானாவிற்கும் உண்மையிலேயே பாருவின் பிளான் தெரியாதா?


விக்ரம் மீது  வியானாவிற்கு ஒரு சாப்ட் கார்னர் உண்டு. என்றாலும் இந்த விவகாரத்தில் அவர் ஆரம்பத்தில் முரண்டு பிடித்ததற்கான காரணத்தை இறுதியில் அவரே சொல்லி விட்டார். “நான் ரம்யாவையும் பாருவையும்தான் முதல்ல கேட்டிருக்கணும்.. உங்களைக் கேட்டது தப்பு. நீங்க முன்னாடி சொன்ன விஷயங்கள் என்னைப் பாதிச்சது. அதை வெச்சு இதுல உங்களை குற்றம் சுமத்திட்டேன்” என்று மன்னிப்பு கேட்டது சிறந்த காட்சி.

இதைப் போலவே ‘என் கிட்ட மன்னிப்பு கேளு. ஏன்னா உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். நீ அந்த மாதிரி ஆளுன்னு கிடையாது. வேற யாராவது இருந்தா இப்படி கேட்க மாட்டேன். நீ மன்னிப்பு கேட்க மாட்டேன்னு சொல்றது ஒரு hierarchy (அதிகார படிநிலை) தெரியுது. அதை நான் உன் கிட்ட எதிர்பார்க்கலை. ஸோ.. மன்னிப்பு கேட்ரு” என்று வியானாவிடம் விக்ரம் உரிமையுடன் கேட்டது சிறந்த காட்சி. நுண்ணுணர்வுள்ளவர்களால்தான் இப்படி யோசிக்க முடியும். இதன் மூலம் இருவரின் மனவருத்தமும் உடனே அகன்று சமநிலையுள்ள நண்பர்களாக மீண்டும் மாறி விடுவார்கள். 


‘வெள்ளை பக்கெட் கதையை பாரு ஆரம்பியுங்க’ என்ற விசே ‘ரொம்ப சுத்தாம சொல்லுங்க.. மத்தவங்க யாரும் நடுவுல சொதப்பாதீங்க.. ‘சாவு’ன்னு சொன்னா மட்டும் கோபம் வருது. பிக் பாஸ் சொல்றத கேட்காம சண்டை போடறீங்க.. அப்ப எங்களுக்கு சுயமரியாதை இல்லையா?’ என்று விசே பொங்கியது சரியாது. “ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு வாங்க. இல்லைன்னா சாவுங்க’ என்று எரிச்சலின் உச்சத்தில் விக்ரம் சொன்னது பிழைதான் என்றாலும் இயல்பானது. இவர்களின் ராவடி அந்த அளவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

Bigg boss housemates
Bigg boss housemates

‘என்னால முடியல.. நான் வெளில போறேன்’ என்று ரம்யா உணர்ச்சிவசப்பட்டு சொன்னதும் “அப்படில்லாம் யாரும் உங்களை கட்டாயப்படுத்தல. வெளியே வந்துடுங்க’ என்று விசே பதிலடி தந்ததும் பிரமோவில் காட்டிய போதே தெரிந்துவிட்டது. அப்படி நிகழப் போவதில்லை என்று. சக போட்டியாளர்கள் ‘இது நல்ல சான்ஸ். வார்த்தையை விட்றாத’ என்று உபதேசம் தந்ததும் மனம் மாறிவிட்டார் ரம்யா. 


‘கைய விட்டுப் பார்த்தாரா?’ என்று பக்கெட் விவகாரத்தில் யாரோ கமெண்ட் அடித்தார்கள் என்று அதற்கும் விக்ரம் மீது பாய்ந்தார் வியானா. கடைசியில்தான் தெரி்ந்தது அந்தக் கமெண்டை அடித்தவர் அரோரா. அதிலும் விக்ரமிற்கு ஆதரவாகத்தான் அந்தக் கமெண்ட்டை அடித்திருக்கிறார். இப்படியாக ரம்யா, பாரு, அரோரா மீது காட்ட வேண்டிய கோபத்தை ஒட்டுமொத்தமாக விக்ரம் மீது வியானா காட்டியதால்தான் இத்தனை பெரிய ‘பக்கெட்’ பஞ்சாயத்து. 

‘உங்க மீது வன்மத்தைக் கொட்றாங்களே?’ - விசேவிடம் கேட்ட பார்வையாளர்


இது முடிந்ததும் பிரேக் விட்டு திரும்பிய விசே விடம் “சார்.. நீங்க இந்த ஷோவிற்கு ஹோஸ்ட் மட்டும்தான். ஆனா உங்க மேல வன்மத்தைக் கொட்றாங்களே..அதை எப்படிப் பார்க்கறீங்க?” என்று ஒரு பெண்மணி கேட்டார். (செட்டப் கேள்வியா?!) “நல்லாவே கொட்டட்டும். அதை நாங்க வரவேற்கிறோம். வீக்கெண்ட்ல முக்கியமான விஷயத்தை அட்ரஸ் பண்றோம். அதன் மூலம் போட்டியாளர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி, சில புரிதல்களை ஏற்படுத்த முயல்கிறோம். இதுக்குப் பின்னாடி பெரிய டீம் இருக்கு. விமர்சனங்களை நாங்க வரவேற்கிறோம்” என்றார் விசே. “கத்துக்கறதுக்கு சிலபஸ் இருக்கு. ஆனா புரிஞ்சுக்கறதுக்கு சிலபஸ் இல்ல. அதை கத்துக்கறவங்கதான் செய்யணும்”என்று விசே சொன்னது சிறப்பு. 


“விமர்சனங்களை வரவேற்கிறோம். நல்லா கொட்டுங்க” என்று சர்காஸமாக விசே சொன்னாலும், அந்த விமர்சனங்களை வைத்து விசேவோ அல்லது பிக் பாஸ் டீமோ ஏதாவது மாற்றங்கள் செய்திருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. வீக்கெண்ட் விசாரணைகள் முதல் எவிக்ஷன் வரை பார்வையாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பிற்கு மாறாகத்தான் பல விஷயங்கள் தொடர்ந்து நடக்கின்றன. எனில் அந்த விமர்சனங்களுக்கு என்ன மதிப்பு?

அரோரா
அரோரா

“நான் சொன்னாலும் கேக்க மாட்டீங்க. பிக் பாஸ் பேச்சையும் கேக்க மாட்டீங்க. அடுத்த வாரமும் இதையேதான் பண்ணப் போறீங்க?” என்று போட்டியாளர்கள் குறித்து சலித்துக் கொள்கிறார் விசே. ஆனால் பார்வையாளர்களின் ஃபீட்பேக்கை மதிக்காமல் பிக் பாஸ் டீமும் அதைத்தானே செய்கிறது?!


பக்கெட் பஞ்சாயத்து முடிந்ததும், நடிப்பு டாஸ்க்கிற்கு வந்தார் விசே. முதலில் கிருமி சுபிக்ஷாவை எழுப்பி ‘நீங்க என்னதான் பண்ணீங்க?’ என்று கேட்க அவரிடம் பதில் இல்லை. போலவே எஃப்ஜே, அமித், சபரி, ஆதிரை போன்றோரும் பதில் இல்லாமல் திகைத்து நின்றார்கள். 


முந்தைய சீசன்களில் இந்த நடிப்பு டாஸ்க்களில் போட்டியாளர்கள் இயன்றவரை சுவாரசியம் காட்டினார்கள். ஆனால் இந்த சீசனில் உக்கிரமாக சண்டை போட்டதைத் தவிர காரெக்டர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 

‘பாரு பெஸ்ட் பிளேயர்’  - விசேவின் பாராட்டு நியாயமானதா?


‘மோசத்தில் குறைந்த மோசம்’ என்று பார்த்தால் விக்ரம், பாரு, வினோத், கனி ஆகிய நால்வரும் தங்கள் காரெக்டரில் ஓரளிவற்காவது நீடிக்க முயன்றார்கள். டிஆர் மாதிரி ஆரம்பத்தில் அசத்திய வினோத், பிறகு சண்டை போடுவதில் மூழ்கி விட்டார். மற்றவர்களும் இதை அப்படியே கை விட்டு விட்டார்கள்


ஆனால் ‘விக்ரமும் பாருவும் செஞ்சது எனக்குப் பிடிச்சிருந்தது’ என்றார் விசே. எம்.ஆர்.ராதா மாதிரி எதையோ முயன்றார் விக்ரம். போலவே முறுக்கை கடித்து கர்ரக் முர்ரக் என்று மெல்லுவது போல பல்லைக் கடித்து ‘என்ற.. ஒன்ற..’ என்று கோவைத் தமிழ் மாதிரி எதையோ மென்று துப்பினார் பாரு. என்னவொன்று சண்டை போடும் போதுகூட அந்த ஸ்லாங்கில் பேசியது மட்டுமே சிறப்பு. 

Vijay Sethupathi
Vijay Sethupathi

ஆனால் இதற்காக  ‘நடிகர் டாஸ்க்கில்’ பாருவை சிறந்தவர் என்று சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை. கோள்மூட்டி விடுவது, அரோராவை வெறுப்பேற்றுவது, விக்ரமை சீண்டுவது, வீட்டு தல, பிக் பாஸ் ஆகிய இருவரையும் மதிக்காமல் தனியார்வர்த்தனமாக சபையில் கத்திக் கொண்டே இருப்பது. கம்முவுடன் ஜாலியாக ரொமான்ஸ் செய்வது என்பதில்தான் பிஸியாக இருந்தார் பாரு. 


மைக்கை மறைத்துவிட்டு பேசுவது முதல் பாருவின் அட்ராசிட்டிகள் எதையும் அட்ரஸ் செய்யாமல் அவரைப் பாராட்டுவதின் மூலம், இந்த ஷோவை பாரு இருந்தால்தான் ஓட்ட முடியும் என்று பிக் பாஸ் டீம் நினைக்கிறதா? அதனால்தான் அவரது பிழைகள் விசாரிக்கப்படவில்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. 


“என்னைப் பேச வெக்காதீங்க. எப்படியாவது போங்க’ என்று சட்டென்று டாட்டா காட்டி ஷோவை முடித்துவிட்டார் விசே. 


பக்கெட் விவகாரத்தில் பாருவின் சூழ்ச்சி காரணமாகவே இத்தனையும் நடந்தது என்பதை ஒருவழியாக புரிந்து கொண்ட வியானா, கடைசியில் விக்ரமிடம் கட்டியணைத்து மன்னிப்பு கேட்டு ‘இந்த வலையில் தெரியாமல் மாட்டிக்கொண்டேன்’ என்றது சிறப்பான காட்சி. 


இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் நடந்ததா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

‘பக்கெட் துணி’ விவகாரத்தில் பிரதான குற்றவாளி யாரென்று நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள். 

BB Tamil 9: "நீங்க வெளிய வந்துருங்க" - சேதுபதியிடம் வாக்குவாதம் செய்த ரம்யா; திறந்த பிக் பாஸ் கதவு!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாள்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில், கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: தம்பதியில் ஒருவர் அவுட்.! - இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்?

விஜய் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9.வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, எஃப் ஜே உள்ளிட்ட இருபது பேருடன் அக்ட... மேலும் பார்க்க

BB Tamil 9: Day 61: பாரு பற்ற வைத்த நெருப்பு; பொங்கிய ஆதிரை; `நான் அப்படி ஆளு இல்ல' - கதறிய விக்ரம்

இந்த சீசன் அறுபது நாட்களைக் கடந்த நிலையில் இறுதி வரைக்கும் செல்லக்கூடியவர்களாக யார் இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. விக்ரம், சுபிக்ஷா என்று இரண்டு பெயர்கள்தான் தோன்றுகின்றன. நாள் 61பி... மேலும் பார்க்க

'மேக்னா'ஸ் ஃபார்ம்: கால்நடை வளர்ப்பு, மீன் பண்ணை! - இயற்கை விவசாயத்தில் 'பொன்மகள் வந்தாள்' மேக்னா

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' சீரியலில் நடித்த மேக்னாவை நினைவிருக்கிறதா? அப்பாவி மருமகளாக வந்து அனைவரின் ஆதரவையும் அள்ளினாரே, அவரேதான். பிறகு 'பொன்மகள் வந்தாள்' சீரியலிலும் நடித்தார். ... மேலும் பார்க்க

BB Tamil 9: Day 60: முடியாத முக்கோணக் காதல்; பாரு அட்ராசிட்டி - கானா வினோத்தின் முரட்டு சம்பவங்கள்!

வீக்லி டாஸ்க் முடியும் ஒவ்வொரு முறையும் ‘ஹப்பாடா’ என்று போட்டியாளர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள். ஆனால் அப்படி மகிழ வேண்டியது பார்வையாளர்கள்தான்.‘இப்போதாவது முடிந்து தொலைத்ததே’ என்று நிம்மதிப் பெருமூச்... மேலும் பார்க்க