செய்திகள் :

BBTAMIL 8: DAY 53 : தீபக்கிற்கு எழும் எதிர்ப்பும் ஆதரவும்; ‘ரணகள'மான பொம்மை டாஸ்க்!

post image

சுதந்திரம் என்பதற்கும் சுயஒழுக்கம் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அது எந்த தனிநபராக இருந்தாலும் ஓர் அமைப்பிற்குள் நுழையும் போது அங்குள்ள ‘நியாயமான’ விதிகளுக்கு உடன்பட்டுத்தான் ஆக வேண்டும். ‘தனிநபர் சுதந்திரம்’ என்கிற பெயரில் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தி கலகம் செய்தால் ‘சிஸ்டத்தின்’ அடிப்படை ஒழுங்கு கலைந்து குழப்பம் ஏற்படும்.

‘கிச்சன் இன்சார்ஜிடம்’ ஒரு வார்த்தை சொல்லி விட்டு உங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்கிற எளிய விதிக்கு எதிராக பெரும்பாலான போட்டியாளர்கள் குரல் தருவது சுதந்திரம் என்பதின் பொருளையே கேலிக்கூத்தாக்குகிறது. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 53

காட்டுவதற்கு நிறைய ‘சம்பவங்கள்’ இருந்தால் வேக்அப் பாடலை தவிர்ப்பது பிக் பாஸின் ஸ்டைல்.  இன்றைய நாள் அப்படித்தான் ஆரம்பித்தது. “ஹாஸ்டல்ல இருக்கற மாதிரி இருக்கு. கிச்சன் பக்கம் போனாலே சந்தேகமா பார்க்கறாங்க” என்கிற முணுமுணுப்பின் மூலம் பவித்ரா பற்ற வைத்த நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. 

BBTAMIL 8: DAY 53

இன்று காலை மஞ்சரியும் இதே புகாரை தீபக்கிடம் கொண்டு சேர்த்தார். “கிச்சன் பக்கமே போக முடியலை” என்று அவர் சொல்ல “அப்படில்லாம் இல்லை. தாராளமா போங்க. உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க. அதுக்குத்தானே கிச்சன் இன்சார்ஜ்ன்னு ஒருத்தரை நியமிச்சிருக்கோம். அவர் கிட்ட உங்க தேவைகளைச் சொல்லுங்க. நிச்சயம் கிடைக்கும்” என்று சிறப்பாக விளக்கம் அளித்தார் தீபக். “இப்படியொரு ஒழுங்கு இருக்கறது நல்லதுதான். ஆனா ஓவர் கட்டுப்பாடா இருக்கு” என்று முனகியபடி சென்றார் மஞ்சரி. 

தீபக் டாமினேட் செய்பவர் என்கிற முத்திரை ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது. பாய்ஸ் டீம் இந்த விஷயத்தைப் பற்றி பலமுறை புலம்பியிருக்கிறார்கள். தீபக் கேப்டன் ஆன பிறகு இது வீடு முழுக்க பரவும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் கேப்டன் என்கிற நிதானத்துடன் பல நியாயமான ஒழுங்குகளைத்தான் அவர் செய்வதாகத் தெரிகிறது. ‘நொறுக்குத்தீனி வேண்டும்’ என்று விஷால் முனகிய போது ‘சோறுதான் முக்கியம்’ என்று தெளிவான பாதையில் சென்றவர் தீபக்தான். 

BBTAMIL 8: DAY 53

வீட்டு உறுப்பினர்களை அணிகளாகப் பிரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பொறுப்புகளைத் தந்திருக்கும் போது அவர்களிடம் அனுமதி பெறுவதுதான் முறையானது. அந்த ஒழுக்கத்தின் மூலம்தான் பெரும்பாலான சர்ச்சைகள் தவிர்க்கப்படும். மாறாக நினைத்தபடியெல்லாம் ஒருவர் கிச்சனுக்குள் நுழைந்தால் அநாவசியமான குழப்பங்கள் நேரும். ‘ஹவுஸ்மேட்ஸ்’ என்று அழைக்கப்பட்டாலும் அது பிக் பாஸ் வீடுதான்.  பிக் பாஸின் விதிகளுக்கு ஒரு துளி கூட மறுத்துப் பேசாமல் ஒப்புக் கொள்கிறவர்கள், கேப்டனின்  நியாயமான ஏற்பாடுகளுக்கு எதிராக கலகம் செய்வது முறையான செயல் அல்ல. 

இப்படி சுதந்திரத்தை எதிர்பார்க்கிறவர்கள், பொறுப்பில் வந்து அமரும் போது அங்கு நேரும் ஒழுங்கீனங்களை அவர்களும் கட்டுப்படுத்தத்தான் செய்வார்கள். 

தீபக் ஓவராக டாமினேட் செய்கிறாரா?

பொம்மை வாரம் என்பதால் அது தொடர்பான ‘மார்னிங் ஆக்ட்டிவிட்டி’. ‘யார் ஆட்டி வைப்பவராக இருக்கிறார்கள்? யார் பொம்மையாக இருக்கிறார்கள்?’ என்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். ‘ஆட்டி வைப்பர்’ கேட்டகிரியில் பெரும்பாலோனோர் தீபக்கை கை காட்டினார்கள். முத்துவின் பெயரும் வந்தது. ‘பொம்மலாட்டத்தை நடத்துபவர் கண்ணுக்குத் தெரிய மாட்டார்’ என்கிற லாஜிக்கை சொல்லி ஆனந்தியை மஞ்சரி கைகாட்டியது புதுமையான விளக்கம். ஆண்கள் அணிக்கு ஒரு முத்து போல, பெண்கள் அணிக்கு ஒரு ஆனந்தி. பேசிப் பேசியே மூளைச்சலவை செய்து விடுகிறார். 

BBTAMIL 8: DAY 53

ஆட்டி வைக்கப்படும் பொம்மைகளாக ராணவ், சிவா, ரஞ்சித், அருண், பவித்ரா, அன்ஷிதா, சத்யா என்று பல பெயர்கள் வந்தன. ‘நானும்’ என்று தன்னையே உதாரணம் சொல்லிக் கொண்டது சவுந்தர்யாவின் நேர்மையைக் காட்டுகிறது. பல நேரங்களில் உளறுவாயாக இருந்தாலும் சவுண்டிடம் ஓர் அடிப்படையான நேர்மை இருக்கிறது. ‘நானும்’ என்று சொன்ன இன்னொரு நபர் அன்ஷிதா. அவரும் ஓர் உண்மை விளம்பிதான். 

எல்லோரும் செல்லும் பாதையில் சென்றால் அது முத்துவாகி விட முடியுமா? எனவே ‘வித்தியாசமாக’ யோசித்த முத்து, ‘பார்ப்பதற்கு அப்பாவி போல தெரியும் இந்த ராணவ்தான் அமைதியாக இருந்து எல்லோரையும் ஆட்டி வைப்பவர்’ என்று சொல்ல ‘நானா.. நெஜம்மாவா சொல்ற.. ரொம்ப பெருமையா இருக்கே’ என்கிற மாதிரி நம்ப முடியாமல் புன்னகைத்தார் ராணவ். 

காலைக்கடன் நேரத்தில்தான் கூட்டத்தைக் கூட்டி பழைய கடன்களைப் பற்றி பேசுவது தீபக்கின் பழக்கமாக இருக்கிறது. எனவே மக்களில் சிலர் வயிற்றைப் பிடித்தபடி அவஸ்தையுடன் இருந்தார்கள்.  ‘எனக்கு மூச்சா வருது’ என்று எழுந்து போனார் சாச்சனா. “உங்க அவஸ்தை புரியுது. டக்குன்னு சொல்லுங்க. வேற என்ன பிரச்சினை. பேசிட்டு கலைஞ்சுடலாம்” என்றார் தீபக். 

ஆர்வக் கோளாறாக செயல்பட்ட சாச்சனா


“உங்களை மறுபடியும் ஒன்று கூட்டறதே பெரிய விஷயமா இருக்கு” என்பது தீபக் சொன்ன காரணம். பிக் பாஸ் வீடு என்பதே சிறியது. சமைப்பது, குளிப்பது, டாஸ்க் தவிர அவர்களுக்கு அங்கு வேறொன்றும் வேலை இல்லை. பெரும்பாலான சமயங்களில் பேசியே பொழுதைக் கழிக்கிறார்கள். எனில் தங்களின் அடிப்படையான பிரச்சினைகளைப் பற்றி பேசக்கூட நேரம் ஒதுக்காமல் அப்படியென்ன வேலை என்கிற சந்தேகம் எழுகிறது. 

கிச்சன் ஏரியாவில் நுழையக்கூட அனுமதி  தேவையா என்பது தொடர்பான புகாரை பவித்ரா, ஜாக்குலின், ஆனந்தி, சவுந்தர்யா போன்றோர் எழுப்பினார்கள். “எல்லோருக்கும் பசிக்கும். எனக்கும் பசிக்கும். நான் சமைக்கப் போகட்டுமா?” என்று அனுமதி கேட்டு கிளம்பிச் சென்றார் ஜாக்குலின். 

BBTAMIL 8: DAY 53

குழம்பு பஞ்சாயத்து இன்னொரு வடிவில் எழுந்தது. “எனக்கு மூணு தோசை போதும்ன்னு சொன்னேன். உன்னோட  பங்கு நாலு தோசைன்னு வெச்சுட்டாங்க. ஒண்ணு காய்ஞ்சு போச்சு.. மத்தவங்களுக்கு ஷேர் கூட பண்ண முடியலை’ என்கிற புகாரை எழுப்பினார் ஆனந்தி. ‘உணவு போதவில்லை’ என்பதுதான் பிக் பாஸ் வீட்டில் வழக்கமான புகாராக இருக்கும். ஆனால் ‘உணவு அதிகமாக இருக்கிறது’ என்பது புதுமையான புகார்தான். ‘உன்னோட பசி தீர்ந்த பிறகும் சாப்பிடற இட்லி, இன்னொருத்தனோடது’ என்று விஜய்ண்ணா சொன்ன கம்யூனிச தத்துவத்தை பிக் பாஸ் வீட்டில் கடைப்பிடிக்கிறார்கள் போல. 

இந்த விஷயத்தில் அருண் நிச்சயமாக முரண்டு பிடிக்கிறார். ‘எனக்குப் போதும்’ என்று ஒருவர் சொன்ன பிறகு ‘ஓகே.. மறுபடியும் கேக்காதீங்க.. பிரச்சினையாகி விடும்’ என்று உணவை நிறுத்தி விடுவதுதான் சரியானது. “அதெல்லாம் தெரியாது.. இதான் உன் கோட்டா.  நான் வெச்சுடுவேன். நீ என்ன வேணா செஞ்சுக்கோ’ என்பது ஒருவகையான இயந்திர அணுகுமுறை. “அதிகமான உணவை ஒரு பாக்ஸில் போட்டு வைத்து தேவையானவர்களுக்கு கொடுத்து விடுங்கள்’ என்று அருணே இதற்கு ஒரு தீர்வு சொன்னது பாராட்டத்தக்கது. 

தீபக்கின் மீதுள்ள கோபத்தை எப்படியாவது காட்ட வேண்டுமென்று சாச்சனா துடித்துக் கொண்டிருந்தார் போல. எனவேதான் ‘சுச்சா வருது’ என்று எழுந்து சென்றார். அது ஒருவகையான புறக்கணிப்பு.  இப்போதும் தீபக் வியாக்கியானம் தந்து கொண்டிருந்ததால் “ஒரு லீடர்ன்றவருக்கு முதல்ல கேக்கற பொறுமை வேணும். அடுத்தவங்களை பேச விடணும். தீபக் அண்ணாவிற்கு இது எதுவுமே இல்லை” என்கிற காரணத்தைச் சொல்லி ஒரு பூவைத் துண்டித்து எடுத்து விட்டார். “இரும்மா. நான் விளக்கம் சொல்றேன்” என்று தீபக் சொன்னாலும் சாச்சனா அதற்கு செவி மடுப்பதாக இல்லை. அவரின் டார்கெட் பூவை வெட்ட வேண்டும். எனவே முடிவு செய்து வந்ததைப் போலவே இருந்தது. 

தீபக்கிற்கு எழும் எதிர்ப்பும் ஆதரவும்


“எல்லோருமே இப்ப அர்ஜெண்ட்ல இருக்காங்க. அதனாலதான் நான் வேக வேகமா பேசி முடிக்கறேன். அதை பேச விடமாட்டேன்ற மாதிரி டிவிஸ்ட் பண்ணா என்னதான் பண்றது?” என்று தீபக் சொன்ன காரணம் நியாயமாகத்தான் தெரிந்தது. “சேது அண்ணனே.. என்ன எதிர்பார்க்கிறார்.. சுருக்கமா, தெளிவா பேசணும்னுதானே?” என்று தகுந்த சமயத்தில் விஜய்சேதுபதியையும் துணைக்கு அழைத்துக் கொண்டது தீபக்கின் சாமர்த்தியம். 

BBTAMIL 8: DAY 53

பூவை வெட்டியவுடன், ‘ஹப்பாடா… வந்த வேலை முடிந்தது’ என்பது மாதிரி சாச்சனா கிளம்ப “அப்ப உச்சாவை அடக்கிக்கிடடு உக்காந்திருக்கிற நாங்கள் எல்லாம் முட்டாள்களா?” என்று அருண் ஆட்சேபம் எழுப்ப “அவங்க புரிதல் அவ்வளவுதான்” என்று தீபக் சாச்சனாவை மட்டம் தட்ட ‘அப்படில்லாம் சொல்லாதீங்க’ என்று சாச்சனா எதிர்க்குரல் எழுப்ப ஒரே கூச்சலும் குழப்பமும். ‘இதை நான் டீல் பண்ணிக்கறேன்’ என்று துணிச்சலாக சொன்னார் சாச்சனா. ஆனால் விஜய்சேதுபதி இதை விசாரித்தால் நிச்சயம் கண்ணீர் சிந்தி அனுதாபத்தைத் தேடுவார். ‘இந்த மாதிரி பண்றது நம்மளை இல்ல. அவங்களைத்தான் பாதிக்கும்” என்று தீபக் சொன்னது சரியானது. 

இந்த மீட்டிங் முடிந்ததும் “நான் சொல்லாத விஷயத்தை ‘நான் சொன்னதா’ ஏன் சொன்னே?” என்று சவுந்தர்யாவிடம் விசாரித்தார் பவித்ரா.  தனது அறியாமை காரணமாக ஒருவர் சொன்னதை மாற்றிப் புரிந்து கொண்டு பரப்புவது சவுந்தர்யாவின் வழக்கம். மஞ்சரியும் முன்பு இதே மாதிரியான பிரச்சினையை சவுந்தர்யாவிடம் கொண்டு வந்தார். ஒரு கட்டம் வரைக்கும் விதாண்டா வாதம் செய்து பிறகு உரத்த குரலில் “உனக்கு என்ன பிரச்சினை. எனக்கு அப்படி ஃபீல் ஆச்சு.. சொன்னேன்.. என்ன இப்ப?” என்று கத்துவதும் சவுந்தர்யாவின் ஸ்டைல். எனவே முதலில் ‘ஸாரி’ சொன்ன சவுந்தர்யா, பவித்ரா விடாமல் மல்லுக்கட்டுவதைப் பார்த்ததும் தனது பாணியில் சாமியாடத் துவங்கி விட்டார்.  கிச்சன் விவகாரம் குறித்து தனிப்பட்ட வகையில் சொல்லியதை சவுந்தர்யா பொதுப் பிரச்சினையாக்கி விட்டார் என்பதுதான் பவித்ராவின் கோபத்திற்கு காரணம். 

BBTAMIL 8: DAY 53

“நீ செஞ்சது கரெக்ட்டுண்ணே.. சாச்சனா செஞ்சதும் கரெக்ட். அவங்கவங்க ரூபங்கள் வெளியே வரட்டும். அப்பத்தான் ஆட்டம் சுவாரசியமாகும்” என்பது மாதிரி தீபக்கிடம் பேசிக் கொண்டிருந்தார் முத்து. பிக் பாஸ் ஃபார்மட் பற்றிய கான்ஷியஸூடன் இருப்பவர்களில் முக்கியமானவர் முத்து. “லீடர்ஷிப்பிற்குன்னு ஒரு தகுதி இருக்குன்னு சொன்னல்ல..  நம்ம கிட்டயும் அது இருக்கணும். நீ கொஞ்ச நேரமாவது டைம் கொடுத்திருக்கணும்” என்று சாச்சனாவிற்கு தகுந்த அட்வைஸ் தந்து கொண்டிருந்தார் ராணவ். 

‘ரண’களமான பொம்மை டாஸ்க்


பொம்மை டாஸ்க் மீண்டும் துவங்கியது. முந்தைய சீசன்களில் நடந்த பொம்மை டாஸ்குகளில் ரணகளமான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. 'இந்த சீசனில் அதெல்லாம் நடக்கவில்லை.. பரவாயில்லையே’ என்று நாம் ஆறுதல்பட்டுக் கொண்டிருக்கும் போதே அது பிக் பாஸ் மூக்கில் வியர்த்து விட்டது போல. புதிய விதிகளை அமல்படுத்தி உக்கிரத்தைக் கூட்டினார். அது சரியாக வேலை செய்தது. 

என்னதான் கோடு கலைக்கப்பட்டு, ஆண், பெண் அணிகள் ஒழிக்கப்பட்டு விட்டாலும் வீட்டில் தனித்தனியான அணிகள் உருவாகியிருப்பதை நன்றாக உணர முடிகிறது. ஜாக்குலினுக்கும் விஷாலுக்கும் இடையில் ஆரம்பத்தில் இருந்தே கடுமையான வெறுப்பு இருக்கிறது. இப்போது ஜாக்குலினுக்கு எதிராக அன்ஷிதாவும் இணைந்திருக்கிறார். 

BBTAMIL 8: DAY 53

இந்த நாளின் முதல் ரவுண்டு ஆரம்பமாகியது.  ஜாக்குலின் பொம்மையை சத்யாவும், சாச்சனாவின் பொம்மையை ரயானும், விஷாலின் பொம்மையை சாச்சனாவும் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஜாக்குலினை எப்படியாவது அவுட் ஆக்க வேண்டுமென்று விஷால் துடித்துக் கொண்டிருந்தார். விஷாலை பழிவாங்க ஜாக்குலின் காத்துக் கொண்டிருந்தார். எனவே ரயானிடம் “நீ சாச்சனாவின் பொம்மையை வைத்து விடு. போட்டி சாச்சனா vs சத்யாவாக மாறும். சின்னப் பெண்ணிடம் பொம்மையைப் பிடுங்க மாட்டார்கள்” என்றார் ஜாக்குலின். “எவ்ள நேரம்னாலும் நிப்பேன்” என்று சாச்சனாவும் வாக்களித்தார். எனவே சாச்சனாவின் பொம்மை காப்பாற்றப்பட்டது. 

சத்யாவும் சாச்சனாவும் களத்தில் இருந்தார்கள்.  அன்ஷிதாவைப் போல இவர்களும் நேரத்தை இழுத்து கார்டன் ஏரியாவை ‘கலீஜ்’ ஆக்கி விடுவார்களோ என்று பயந்த பிக் பாஸ், ‘பத்து நிமிஷத்துக்குள்ள’ பஸ்ஸர் அடிக்கும்’ என்று விதியை மாற்றினார். எனவே விஷால், ஜாக்குலின் என்று  இரண்டு பேரும் அவுட் ஆனார்கள். ஈகோ வென்றது. ஸ்போர்ட்டிவ்னஸ் தோற்றது. 

BBTAMIL 8: DAY 53

டாப் 10 பிளேயர்கள் இருக்கும் போது ‘இந்த ஆட்டத்தில் வெல்பவர் எவிக்ஷன் பிராசஸஸில் இருந்து விடுவிக்கப்படுவார்’ என்று சொல்லி உக்கிரத்தைக் கூட்டினார் பிக் பாஸ். இதில் சத்யா அவுட். அடுத்த ரவுண்டில் இன்னுமொரு புதிய விதியைச் சேர்த்தார் பிக் பாஸ். வெளியில் இருப்பவர்களும் உள்ளே வரலாம். யார் வைக்கலாம், வைக்கக்கூடாது என்கிற தடுப்பாட்டத்தை அவர்கள் மேற்கொள்ளலாம். எனவே பொம்மையை வைக்கும் வாசலில், பழைய ரஜினி படங்களின் fdfs மாதிரி ஒரே நெரிசல். தள்ளுமுள்ளு.

அடிக்கப் பாய்ந்த ரயான்,  பதிலுக்கு சீறிய ராணவ்

பந்துகள் நிரம்பிய குளத்தில் ‘அவுட் ஆனவர்’ செல்லக்கூடாது என்கிற விதியை மீறி ராணவ் இருந்ததை பிக் பாஸ் எச்சரித்தார். ஜெப்ரியை செல்ல விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தார் ராணவ். அவரை பின்னால் வளைத்துப் பிடித்தார் ரயான். இன்னொரு பக்கம் மஞ்சரி செல்ல விடாதவாறு மல்லுக்கட்டினார் சவுந்தர்யா. பிறகு மஞ்சரியை வலுக்கட்டாயமாக தடுத்தார் ரயான். மஞ்சரியைக் காப்பாற்ற முயன்றார் முத்து. இதனால் பொம்மை இல்லாத நிலையிலும் ரயானை பிடித்துக் கொண்டிருந்தார். 

ஒரு கட்டத்தில் ராணவ்வை அடிக்கப் பாய்ந்தார் ரயான். பதிலுக்கு முரட்டுக்காளை மாதிரி ராணவ்வும் பாய்ந்தார். இருவருக்குள்ளும் எழுந்த வெறி அச்சமூட்டுவதாக இருந்தது. இருவரையும் சமாதானப்படுத்தி அமர வைத்தார்கள். சுண்டெலி மாதிரி இருக்கும் ஜெப்ரியை ஆறடி உயரமுள்ள ராணவ் அழுத்திப் பிடித்தது குறித்து ஜெப்ரிக்கு கோபம். இறுதியில் ரயான் அவுட். ரயான் அடிக்கப் பாய்ந்த விஷயம் விசாரணை நாளில் நிச்சயம் பிரச்சினையாகும். ரயான் தன்னை பலவந்தமாக பிடித்து இழுத்தாலும் அதை மஞ்சரி ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொண்டது பாராட்டத்தக்கது.

BBTAMIL 8: DAY 53

“என்னை மட்டும் ஏண்டா எல்லோரும் டார்கெட் பண்றாங்க?” என்று அழுகையுடன் வெங்காயத்தை வெட்ட ஆரம்பித்தார் ஜாக்குலின். “அப்படின்னா நாம சரியா ஆடறோம்ன்னு அர்த்தம்” என்று அதற்கு லாஜிக் சொன்னார் ரயான். இந்த 9வது ரவுண்டில் ரயான் அவுட். 

‘பத்து நிமிஷத்துக்குள்ள பஸ்ஸர் அடிக்கும்’ என்று அவசரப்படுத்திய பிக் பாஸ், ஏதாவது சண்டை நிகழும் என்று தெரிந்தால் நாற்காலியின் பின்னால் அமர்ந்து கொண்டு சௌகரியமாக வேடிக்கை பார்ப்பார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. ஜாக்குலினுக்கும் ராணவிற்கும் இடையில் நடந்த காரசாரமான உரையாடலில் ஒரு கெட்ட வார்த்தையை (பீப்) விட்டு விட்டார் ராணவ். இதை ஜாக்குலின் பலமாக ஆட்சேபிக்க, சேலையை வரிந்து கட்டிக் கொண்டு சவுந்தர்யாவும் கத்தினார்.  ராணவ் சொன்ன அவமதிப்பான கெட்ட வார்த்தையை இரண்டு பெண்களும் வீராவேசமாக எதிர்கொண்ட விஷயம் சிறப்பானது.  சில நிமிடங்களில் சமநிலைக்கு வந்த ராணவ் “ஸாரி.. ஜாக்குலின்” என்று சொன்னாலும் அது ஏற்கப்படவில்லை. 

பீப் வார்த்தையை பேசி மன்னிப்பு கேட்ட ராணவ்

“உடம்பைப் பயன்படுத்தாம மூளையைப் பயன்படுத்தி விளையாடுங்கடா” என்று பொதுவாக அட்வைஸ் சொன்னார் முத்து.  ஆனால் சிறிது நேரத்திற்கு முன் மஞ்சரிக்கு ஆதரவாக ரயாவை வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டிருந்தவர் இதே முத்துதான். இந்த விஷயத்தை சரியாகச் சுட்டிக் காட்டி “நீ முதல்ல ஒழுங்கா நடந்துக்கோ. அப்புறம் உபதேசம் பண்ணலாம்” என்றார் ரயான். 

10வது ரவுண்டில் ரஞ்சித் அவுட். ‘உள்ளே வைக்க இடமே விடமாட்றாங்க’ என்று பவித்ரா அவரிடம் புலம்ப, “டேய்.. யாருதான் கடைசில ஜெயிக்கணும்.. அதையாவது சொல்லித் தொலைங்கடா” என்று எரிச்சலில் கத்தினார் ரஞ்சித். அடுத்த ரவுண்டில் ஆனந்தி அவுட்.  ஆட்டத்தை நிறுத்தி AVP என்றார் பிக் பாஸ். 

BBTAMIL 8: DAY 53

இந்தச் சமயத்தில் இடைவெளி விட்டால் உரையாடல்கள் இன்னமும் காரசாரமாகப் பெருகும், ரணகளமான ஃபுட்டேஜ் கிடைக்கும். பொன்முட்டையிடும் வாத்துவை மொத்தமாக அறுத்து விடக்கூடாது என்பது பிக் பாஸின் ஐடியா. ஏறத்தாழ ஐம்பது நாட்களுக்குப் பிறகு பொம்மை டாஸக்கில்தான் அவருக்கு அறுவடை ஆரம்பித்திருக்கிறது. எளிதில் விட்டு விடுவாரா?

தன்னை எல்லோரும் வேஸ்ட் என்று சொல்வதால் எதையாவது முந்திரிக் கொட்டைத்தனமாக செய்து விட்டு ‘மச்சான்.. நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?’ என்று கில்ட்டியாவது ராணவ்வின் வழக்கம். இப்போதும் அப்படியே “நான் செஞ்சது தப்பா?” என்று விஷாலிடம் அவர் அனத்த “எல்லோரும்தான் அடிச்சிக்கிட்டாங்க.. அந்தக் காட்டுமிராண்டி கூட்டத்துல நீயும் ஒரு பயதேன்..  அதுலயும் ஒரு நல்ல விஷயம்.. பசங்களுக்குள்ளதான் அடிச்சிக்கிட்டாங்க.. நீ போயி ஜாக் கிட்ட ஸாரி கேட்டுடு” என்று விஷால் சரியான அட்வைஸ் தந்து கொண்டிருந்தார். ராணவ் தன் தவறை உணராமல், இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிப்பது முறையான செயல் அல்ல. ஒரு பெண்ணை அவமதிப்பான வார்த்தையில் பேசியது நிச்சயம் தவறான செயல். 

“எப்படியும் கதவு பக்கம்தான் வந்திருக்கப் போறேன். அங்க வெச்சு தடுக்காம தொட்டிக்குள்ள ஏன் ராணவ் தடுக்கணும்?” என்று ஜெப்ரி எழுப்பும் ஆவேசமான கேள்வி நியாயமானது. “நீங்க என்ன வேணா பேசிக்குங்க.. ஆனா வெளில பார்க்கற மக்கள் முடிவு பண்ணுவாங்க.. ரெண்டு பேரும் அடிச்சு மூக்குல ரத்தம் வந்திருந்தா ரெட் கார்ட் வாங்கியிருப்பீங்க” என்று முத்து அட்வைஸ் செய்ய “பென்சில் சீவின கேஸையெல்லாம் ஏண்டா கொலை வழக்கு மாதிரியே பெரிசாக்குறே” என்று பயந்தார் ரயான். 

சிவக்குமாரின் ஓவர்ஆக்ட் ரியாக்ஷன்

அடுத்த ரவுண்டு ஆரம்பித்தது. இதில் மஞ்சரியின் பொம்மையை வைக்காமல் மற்றவர்களை தடுத்துக் கொண்டிருந்தார் பவித்ரா. “உன் கிட்ட நான் என்ன சொன்னேன்?” என்று ஆட்சேபித்தார் மஞ்சரி. இப்போது மஞ்சரியின் கையில் பவித்ராவின் பொம்மை இருந்தது. பவித்ராவின் கையில் மஞ்சரியின் பொம்மை இருந்தது. “நான் இந்த வாரம் நாமினேஷன்ல இருக்கேன். விட்டுக் கொடு” என்று மஞ்சரி பேரத்தை ஆரம்பிக்க, விதி அப்போது சிவாவின் வடிவில் உள்ளே வந்தது. 

BBTAMIL 8: DAY 53

“என் டீஷர்ட்டை பிடிச்சு இழுத்தீங்க. கழுத்து இறுக்கிச்சு.. வந்து விசாரிச்சீங்களா.. ஒரு ஸாரியாவது கேட்டீங்களா..” என்று மஞ்சரியிடம் பேச ஆரம்பித்த சிவா, ஒரு கட்டத்தில் ‘இங்க சைலன்ஸ்றதைக் கூட சத்தமாத்தான் சொல்ல வேண்டியிருக்கு’ என்கிற ரேஞ்சில் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார். “நான் பார்க்கலை.. ப்ரோ” என்று மஞ்சரி மன்னிப்பு கேட்டாலும் சிவா அதற்கு மசியவில்லை. 

பொம்மை டாஸ்க்கில் ஜெயிப்பவர் எவர்?

ஆட்ட மும்முரத்தில் வேகம் காட்டினாலும் பிறகு சக ஆட்டக்காரரிடம் ‘ஓகேதானே?’ என்று தட்டிக் கொடுப்பது ஒரு நல்ல ஆட்டக்காரரின் பண்பு. இந்த நோக்கில் சிவா சொன்னது சரியானதுதான். ஆனால் இந்த விஷயத்தில் சிவாவின் ரியாக்ஷன் ஓவராகத் தெரிந்தது. அவருக்கு இருக்கிற திடகாத்திரமான உடம்பிற்கு, மஞ்சரி இழுத்தது வலித்தது என்பது நம்பக்கூடியதாக இல்லை. மேலும் இந்த ஆட்டத்தில் பலருக்கும் அவ்வாறுதான் நிகழ்ந்திருக்கிறது என்னும் போது சிவாவும் இதை ஸ்போர்டிவ்வாக எடுத்திருக்கலாம். தானும் இந்த சீசனில் இருக்கிறோம் என்பதை கத்தி நிரூபித்தார் போல. 

சிவக்குமாரின் கோபம் காரணமாக, டென்ஷன் ஆன மஞ்சரி, பவித்ராவின் பொம்மையை கொண்டு உள்ளே வைத்து விட்டார்.  சமநிலை தவறியதால் வந்த பிரச்சினை. இல்லையென்றால் பவித்ராவும் மஞ்சரியும் பேசி ஒரு முடிவை எட்டியிருப்பார்கள். சிவா உள்ளே புகுந்து சொதப்பி விட்டார். “நானும் நீங்க பேசி முடிப்பீங்கன்னுதான் வெயிட் பண்ணேன் ஸாரி” என்றார் பவித்ரா. ஆனால் அவர் மஞ்சரியின் பொம்மையை வேண்டுமென்றே வைக்கவில்லையோ?! அடுத்த ரவுண்டில் பவித்ரா அவுட் ஆனதில் ஏதோவொரு நீதி இருந்தது. 

BBTAMIL 8: DAY 53

பொம்மை டாஸ்க்கில் மீதமிருந்தவர்கள் சிவா, அருண், சாச்சனா மற்றும் ஜெப்ரி. “இந்த ஆட்டத்தில் சாச்சனாவிற்கு அடிபடலாம். அந்தப் பழி எனக்கு வேணாம். அவங்க மூணு பேருக்குள்ள ஆட்டம் நடக்கட்டும்” என்று அருண் முடிவு செய்தது, அபத்தமான முடிவு. பிறகு நிலைமை மாறக்கூடும். 

இந்த பொம்மை டாஸ்க்கில் யார் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறீர்கள்? எனக்கென்னமோ ஜெப்ரியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. 

BB Tamil 8 Day 52: `என் பொண்ணை ரிஜெக்ட் செய்தவன்' - வி.ஜே.விஷால் குறித்து நடிகையின் அம்மா

அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஐம்பது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. ரவீந்தர், அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி உட்பட பதினெட்டுப் போட்டியாளர்கள் முதலி... மேலும் பார்க்க

BB Tamil 8: `நீ யாரு என்ன சொல்றதுக்கு'- கெட்ட வார்த்தை பேசிய ராணா; எகிறிய சவுந்தர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 53 வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8, 50 நாட்களைக் கடந்திருக்கிறது. இந்த வாரம் பொம்மை டாஸ்க்... மேலும் பார்க்க

Serial Update: ’மாரி’ சீரியலிலிருந்து வெளியேறும் ஆஷிகா - காரணம் இதுதான்

ஜீ தமிழ் தொடரில் ஒளிபரப்பாகி வரும் ‘மாரி’ சீரியலில் அடுத்த சில தினங்களில் ‘இவருக்குப் பதில் இவர்’ மாற்றத்தை எதிர்பார்க்கலாம். தொடரின் ஹீரோயினே மாறவிருப்பதுதான் இதில் ஹைலைட்.இதுதொடர்பாக சீரியலுடன் தொடர... மேலும் பார்க்க

Siragadikka Aasai: `உன் விழிகளில் விழுந்த நாட்களில்...' - வெற்றி வசந்த் - வைஷ்ணவி Wedding Clicks

வெற்றி வசந்த் - வைஷ்ணவிவெற்றி வசந்த் - வைஷ்ணவிவெற்றி வசந்த் - வைஷ்ணவிவெற்றி வசந்த் - வைஷ்ணவிவெற்றி வசந்த் - வைஷ்ணவிவெற்றி வசந்த் - வைஷ்ணவிவெற்றி வசந்த் - வைஷ்ணவிவெற்றி வசந்த் - வைஷ்ணவிவெற்றி வசந்த் - ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 52: `என்னால முடியல'- லவ் அட்ராசிட்டியால் தவிக்கும் பவித்ரா; சவுந்தர்யாவா? ஜெனிலியாவா?

தீபக் இரவு தூங்கி விட்டாலும் அவருடைய மனதிற்குள் தன்னுடைய பொம்மையின் நிலை என்னவாயிற்று? என்கிற கேள்வி உறைந்திருக்க வேண்டும். எனவே வேக்அப் பாடலுக்கு முன்பே எழுந்து வெளியே வந்து குப்பைத் தொட்டியை எட்டிப்... மேலும் பார்க்க

``பசங்க 10 கி.மீ ஸ்கூலுக்கு நடக்குறாங்க!, பஸ் வசதியும் இல்ல!'' - சரிகமப தர்ஷினியின் தந்தை உருக்கம்!

சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.நிகழ்ச்சியின் இந்த சீசனில் திண்டிவனம் அருகிலுள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற 8-ம் வகுப்பு மாண... மேலும் பார்க்க