Allu Arjun: "நான் மனித நேயமற்றவனா? அன்று நடந்தது இதுதான்..." - நடிகர் அல்லு அர்ஜ...
Bigg Boss 8: ``சௌந்தர்யாவின் அம்மா அப்பா அழுதுட்டிருக்காங்க"- சௌந்தர்யா தோழி நந்தினி
பிக்பாஸ் சீசன் 8 முடிவடைய இன்னும் மூன்று வாரங்களே இருப்பதால் நிகழ்ச்சியில் கடைசிக் கட்ட விறுவிறுப்பைப் பார்க்க முடிகிறது. இன்று வார இறுதி எவிக்ஷனுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிற சூழலில், யார் யார் ஃபைனலுக்குப் போவார்கள், யாருக்கு டைட்டில் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே இப்போதே உருவாகிவிட்டது.
இப்போதைக்கு முத்துக்குமரன், தீபக், சௌந்தர்யா, ஜாக்குலின் உள்ளிட்ட சிலர் வலுவான போட்டியாளர்களாகத் தெரிந்தாலும், கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்.
இந்தச் சூழலில் ஆரம்பத்தில் நல்ல பெயர் வாங்கிவிட்டு பிறகு உள்ளே சக போட்டியாளர்கள் மத்தியிலும் வெளியில் ரசிகர்களிடமும் நெகட்டிவிட்டியைச் சம்பாதித்திருப்பதாகச் சொல்லப்படும் சௌந்தர்யாவின் தோழி நந்தினி ஶ்ரீதரிடம் பேசினோம்.
''நான் அடிப்படையில் டிசைனர். என்னுடைய டிசைனுக்கு அவங்கதான் மாடல். பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கணும்கிறது அவங்களுடைய நீண்ட நாள் ஆசை. ஒவ்வொரு சீசன் தொடங்குற போதும் முயற்சி செய்வாங்க. மாடலிங்,, வெப் சீரிஸ், சினிமா முயற்சியிலிருந்தவங்களுக்கு 'வில்லா டு வில்லேஜ்' வாய்ப்பு கிடைச்சப்ப அதைச் சரியாப் பயன்படுத்தி ஃபைனல் வரை வந்தாங்க.
அவங்க நிஜத்துல எப்படியோ அப்படிதான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளயும் இருக்காங்க. என்னுடைய பெஸ்ட் ஃப்ரண்டுன்னு இதைச் சொல்லலை. நிஜம் இதுதான். ஆனா நிகழ்ச்சிக்குள் போன சில நாட்கள்லயே வலுவான போட்டியாளரா உருவாகிடுவாங்களோன்னு பயந்த சில சக போட்டியாளர்களுடைய ஆதரவாளர்கள் வெளியில இருந்து `அவங்க பி.ஆர்.டீம் வச்சிருக்காங்கன்னு பேசத் தொடங்கிட்டாங்க.
ஏற்கெனவே அவங்களுக்கு சப்போர்ட்டரா இருக்கிறவங்க ஆதரவா சமூக ஊடகங்கள்ல பேசறதையெல்லாம் பி.ஆர் ஒர்க்னு எப்படிச் சொல்ல முடியும்?
தவிர, அந்த வீட்டுக்குள் அவங்களுடைய நடவடிக்கைகள்தான் சமீபமா அவங்களுக்கு நெகட்டிவிட்டியைத் தர்றதாச் சொல்லப்படுது.
இந்த இடத்துல ஒரு விஷயத்தைப் பத்திச் சொல்லியாகணும். அவளுடைய குரல் பிறந்ததுல இருந்தே அப்படிதான் இருக்கு. அது அவளுடைய தவறில்லை. சின்ன வயசுலயே இந்தக் குரலால் அவ நிறைய அவமானங்களை கஷ்டங்களைச் சந்திச்சிட்டாங்க. பள்ளிக்கூட நாட்கள்ல கூடப்படிக்கிற பசங்க இந்தக் குரலைக் கேலி செய்றாங்கன்னு வீட்டுல வந்து அழுது ஸ்கூல் போக மாட்டேனு சொன்னதெல்லாம் கூட நடந்திருக்காம்.
எப்படியோ எல்லாத்தையும் கடந்து மீடியாவுக்கு வந்து இன்னைக்கு இப்படியொரு ஷோவுக்குள் கிட்டத்தட்ட எழுபது நாட்களைக் கடந்திருக்காங்கன்னா அதை பி.ஆர் ஒர்க்னு சொல்றது குறுக்குப் புத்தினுதான் சொல்வேன்.
ஏன்னா பிக்பாஸ் இப்ப எட்டாவது சீசன் போயிட்டிருக்கு. முதல் ரெண்டு சீசன் முடிஞ்சதுமே மக்களுக்கு இந்த ஷோ பத்தின ஒரு அவார்னஸ் வந்திடுச்சு. அதனால இப்பெல்லாம் யார் சரியா கேம் ஆடுறாங்க, வீட்டுக்குள் யார் ட்ராமா போடுறாங்க, வெளியில் யாருக்கு பி.ஆர். ஒர்க் பண்றாங்க... இப்படி எல்லா விஷயமும் அவங்களுக்குத் தெரிஞ்சிடுது. வெறுமனே பி.ஆ.ர் ஒர்க் பண்ணிட்டிருந்தா ஒரு வாரம் இல்லாட்டி ஒருவாரம் எவிக்ஷன்ல அவுட் ஆகிடுவாங்க'' என்றவரிடம்,
'சக போட்டியாளர்களை அடிக்கப் பாய்வது, எரிச்சல் உண்டாக்குவது போன்ற சேட்டைகள் என இவரை விஜய் சேதுபதி கண்டித்தது எல்லாம் கூட நட்ந்ததே' என்ற கேள்வியையும் வைத்தோம்.
''முதல்லயே சொன்னேன் இல்லயா, அவங்களுடைய மைனஸான குரலை வச்சு அவங்க கலாய்க்கப்படுறதை எதிர்கொள்ள இந்த மாதிரி சில விஷயங்களைப் பண்னிடுறாங்க. வெளியிலயும் அப்படிதான் பண்ணுவாங்க. ஆனா இப்ப ஊருக்கே தெரியறப்ப அது கொஞ்சம் அதிகமாகத்தான் இமேஜை டேமேஜ் செய்யுது. ஆனாக்கூட அன்னைக்கு விஜய் சேதுபதி சார் 'இப்படியெல்லாம் இனி பண்ணக்கூடாது'னு சொன்ன பிறகு அதைக் குறைக்க முயற்சி செய்றாங்கனுதான் எனக்குத் தோணுது.
அதேநேரம் அந்த வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள்ல இவங்க நல்ல ஃப்ரண்டுன்னு நம்பின சிலர்கூட இவங்களைக் கேலி செய்ததெல்லாம் நடந்துச்சு. இந்த இடத்துல இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்யணும். ஸ்கூல் நாட்கள்ல அவங்க எப்ப்படி இந்தக குரல் பிரச்னைக்காக அழுதாங்களோ, அதேபோல இப்ப சில நேரம் ஷோ பார்த்துட்டு 'இன்னும் எத்தனை நாள்தான் இதை வச்சே அவளை மட்டம் தட்டுவாங்க'னு சௌந்தர்யாவின் அம்மா அப்பா அழுதுட்டிருக்காங்க' என்கிறார்.