மாமல்லபுரம்: விழுந்து நொறுங்கிய விமானப்படை பயிற்சி விமானம் - பாராசூட் மூலம் உயி...
Bihar Results: ``நாங்கள் தோற்கவில்லை வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம்" - செல்வப்பெருந்தகை விளக்கம்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவம்பர் 14) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 200+ இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. இதில், பா.ஜ.க 94 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 83 இடங்களிலும், சீராக் பஸ்வான் கட்சி 20 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

மகாபந்தன் கூட்டணி வெறும் 30+ இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. இதில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் மற்ற கட்சிகள் ஓரிரு இடங்களிலும் முன்னிலையிலும் இருக்கின்றன.
கருத்துக்கணிப்பில் கூட, தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 140 இடங்களுடன் ஆட்சியமைக்கும் என்றுதான் கூறப்பட்டன. ஆனால், தற்போது வெளிவரும் முடிவுகள் கருத்துக்கணிப்பையே பொய்யாக்கியிருக்கின்றன.
இந்த நிலையில், பீகாரில் நாங்கள் தோற்கவில்லை வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார்.
பீகார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ``காங்கிரஸுக்கு எப்போதும் பின்னடைவு கிடையாது. அதிகாரத்தைச் சுவைக்க வேண்டும், ஆட்சியதிகாரம் வேண்டும் என்று காங்கிரஸ் ஆரம்பிக்கப்படவில்லை.
முகமில்லாதவர்களுக்கும், பேச்சுரிமை இல்லாதவர்களுக்குமான இயக்கம் காங்கிரஸ். வெற்றி, தோல்வி பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. இது மக்கள் இயக்கம், மக்களுக்காக இயங்கிக் கொண்டே இருக்கும்.

பீகாரில் தோல்வி என்று சொல்ல முடியாது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம். வெற்றிபெற்றால் துள்ளிக் குதிப்பதும், தோல்வியடைந்தால் படுத்துக்கொள்வதும் காங்கிரஸ் அல்ல.
பீகாரில் 17 லட்சம் வாக்குகள் அகற்றப்பட்டிருக்கின்றன. அவை என்ன வாக்குகள்? அதையெல்லாம் ஆய்வுசெய்ய வேண்டும்" என்று கூறினார்.















