"ஹைதராபாத் சாலைகளுக்கு 'Google, Meta, TCS' என பெயர் வைப்போம்" - தெலங்கானா CM ரேவ...
Black Carrot : முதல் முறையாக கருப்பு கேரட் உற்பத்தியில் களமிறங்கும் நீலகிரி தோட்டக்கலைத்துறை!
ஆரஞ்சு தங்கம் என வர்ணிக்கப்படும் கேரட் சாகுபடியில் நீலகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஊட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட கேரட் சாகுபடி, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவி தற்போது பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் கேரட் பயிரை மட்டுமே சார்ந்துள்ளனர். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கேரட் விதை 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. வீரிய ரக விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கேரட்டுகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்த நிலையில், கருப்பு கேரட் சாகுபடிக்கான சோதனை முயற்சியில் முதல் முறையாக களமிறங்கியிருக்கிறது நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை. முதல் கட்டமாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு நாற்றாங்காலில் இந்த கருப்பு கேரட் விதைகளை விதைத்துள்ளனர்.

இந்த முயற்சி குறித்து தெரிவித்த தோட்டக்கலைத்துறையினர் , " வழக்கமான ஆரஞ்சு நிறத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ' காலே கஜார்' எனப்படும் இந்த கருப்பு கேரட் சாகுபடி மற்றும் பயன்பாடு
உத்திர பிரதேசம், ஹரியானா, பீகார், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அதிகளவில் உள்ளன. நார்சத்து அதிகம் கொண்ட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த கேரட்டில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம், வைட்டமின் கே ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாக உள்ளன.
மேலும், செரிமானத்தை அதிகரித்தல், ரத்த உறைதலை தடுத்தல், இயற்கை வண்ணமும் இதிலிருந்து பெறப்படுகிறது. டெல்லியில் இருந்து கருப்பு கேரட் விதைகள் பெறப்பட்டு முதல் முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்கா நாற்றங்காலில் தற்போது விதைக்கப்பட்டுள்ளது. மூன்றரை மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும்.

இந்த முயற்சியின் விளைவை அடிப்படையாகக் கொண்டே அடுத்தக்கட்ட விரிவாக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும் " என்றனர். நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறையின் இந்த புது முயற்சி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையேயும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

















