Case history: இரண்டு மாமியார்கள் செய்த பிரச்னை... தப்பித்த தம்பதி! | காமத்துக்கு மரியாதை- 223
''திருமணமாகி ரெண்டு வருஷம் ஆச்சு. கன்சீவ் ஆகலைன்னு என்னைப் பார்க்க வந்திருந்தாங்க அந்த தம்பதி. ரெண்டு வருஷம்தானே ஆகுது. இதுக்குள்ள ட்ரீட்மென்ட்டுக்கு வர வேண்டிய அவசியமே இல்லீங்கன்னு சொன்னேன். அந்தப்பொண்ணு தலைகுனிஞ்சபடி உட்கார்ந்திருக்க, உடன் வந்த கணவர் 'நான் வேற ஒரு பிரச்னைக்காகத்தான் உங்களைப்பார்க்க வந்திருக்கேன் டாக்டர்'னு சொன்னார். மனைவியை கொஞ்ச நேரம் ரிசப்ஷன்ல இருக்கச் சொல்லிட்டு, அவரிடம் பேச ஆரம்பிச்சேன்'' என்கிற டாக்டர் காமராஜ், அந்தக் கணவர் சொன்னதை விவரிக்க ஆரம்பித்தார்.
''அனு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறந்து வளர்ந்தது, படிச்சது எல்லாமே சென்னையில. ஆனா, அனுவோட சொந்த ஊர் ஒரு குக்கிராமம். அவங்க அப்பா சென்னையில வேலை கிடைச்சு செட்டிலாகிட்டாரு. அனு பி.ஜி. முடிச்சவுடனே பேங்க் செக்டார்ல வேலை கிடைச்சிது. ரெண்டு வருஷம் வேலையும் பார்த்தாங்க. அந்த ரெண்டு வருஷமும் அனுவோட அக்கவுன்ட்ல சம்பளம் பணம் விழுந்தவுடனே, அதை அப்படியே அவங்கம்மாவோட அக்கவுன்ட்டுக்கு மாத்தி விட்டுருவாங்க. இந்த நிலையில, அனுவுக்கு மாப்பிள்ளைத் தேடும் படலம் ஆரம்பிச்சிது. அவங்க அப்பாவோட சொந்த ஊர்லயே மாப்பிள்ளை அமைய, அடுத்த ரெண்டு மாசத்துல சொந்த ஊர்ல அனுவோட கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு. அனுவோடது மிடில் கிளாஸ் குடும்பம். ஆனா, அவங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டுப்போன குடும்பம் அந்த கிராமத்துலயே ரொம்ப வசதியானது. அனுவுக்கு, அவளோட பெத்தவங்க போட்ட நகையைவிட ரெண்டு மடங்கு நகையை கல்யாணத்தன்னிக்கு மாப்பிள்ளையோட அம்மா போட்டிருக்காங்க. படிச்சப்பொண்ணு, நம்ம ஊர்ப்பொண்ணுங்கிற பாசம்தான் எல்லாத்துக்கும் காரணம்.
மூணு, நாலு மாசம் வரைக்கும் எல்லாமே நல்லாதான் போயிட்டிருந்திருக்கு. அனுவோட நாத்தனார் அவங்க மாமியார் வீட்ல சண்டை போட்டுட்டு பிறந்த வீட்டுக்கு வர, நிலைமையே தலைகீழாச்சு. அனுவால அவ கணவனைப் பார்த்து இயல்பாகூட சிரிக்க முடியாம போயிடிச்சு. அனுவோட புகுந்த வீடு ரொம்ப வசதியானதுன்னாலும், அவரோட கணவர் படிச்சது பத்தாவது வரைக்கும்தான். 'பிள்ளைக்கு படிப்பு வரலைன்னாலும், பணம் நிறைய இருக்கு. அதனால ஒண்ணும் பிரச்னை இல்லை'ன்னு பெத்தவங்களும் அத பெருசா எடுத்துக்கல. அனுவோட கணவருக்கு விவசாயத்துலயும் ஈடுபாடு இல்லாததால டிப்ளமோ முடிச்சிட்டு துபாய்ல வேலைபார்த்திட்டிருந்திருக்கார். கல்யாணத்துக்காக 6 மாசம் லீவுல கிராமத்துக்கு வந்த அனுவோட கணவர், லீவு முடிஞ்சு துபாய் போயிடுறார். வீட்ல நாத்தனார், மாமியார், அனு ஆகிய மூணு பேர்தான். ஆரம்பத்துல அனு மேல பாசமா இருந்த மாமியார், கொஞ்ச கொஞ்சமா மகளையும் மருமகளையும் கம்பேர் பண்ணிப் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. 'என் மக சந்தோஷமா இல்ல, இவ (மருமகள்) மட்டும் புருஷன்கூட தினமும் போன்ல கொஞ்சிட்டிருக்கான்னு அவங்க மனசுக்கு தோண ஆரம்பிச்சிருக்கு. விளைவு, 'உன் வீட்டுக்காரன்தான் ஊர்ல இல்லியே, நீ வேணா உங்கம்மா வீட்ல போய் இரு'ன்னு சொல்லி அனுவை சென்னைக்கு அனுப்பி வெச்சிட்டு, மகன்கிட்ட 'உம் பொண்டாட்டி மெட்ராஸ் பொண்ணு, ரொம்ப படிச்சப்பொண்ணு. அதனால, அவளுக்கு எந்த வீட்டு வேலையும் செய்ய தெரியலை. என் வீட்டுக்காரர் அடுத்த லீவுக்கு ஊருக்கு வர வரைக்கும் எங்கம்மா வீட்ல இருந்துக்கிறேன்னு கிளம்பி போயிட்டா'ன்னு மகன் நம்புற மாதிரி பொய் சொல்லியிருக்காங்க. விளைவு, அனுவுக்கும் அவ வீட்டுக்காரருக்கும் நடுவுல லேசா விரிசல் வர ஆரம்பிச்சிருக்கு.
இந்த நேரத்துல அனுவோட அப்பா, ஹார்ட் பிரச்னையால இறந்துட்டாரு. கணவர் இருந்த வரைக்கும் பொருளாதாரத்துல பெரியளவுல எந்த சிக்கலையும் சந்தித்திருக்காத அவங்கம்மாவுக்கு, இப்போ தான் தன்னோட எதிர்காலம் பத்தின பயம் வருது. வீடும் வாடகை வீடுதான். பொண்ணோட கல்யாண செலவு, கணவரோட மருத்துவ செலவு போக சில லட்சங்கள் மட்டும்தான் அவங்க கையில இருந்திருக்கு. பொண்ணு சம்பாதிச்ச பணத்தைக்கூட, அவ கல்யாணத்துக்கே செலவழிச்சிருக்காங்க. தன் மனைவி வீட்டு சூழ்நிலையைப் புரிஞ்சுக்கிட்ட அனுவோட கணவர், அவரோட அம்மாவுக்குத் தெரியாம மாசா மாசம் மனைவிக்கு பணம் அனுப்ப ஆரம்பிச்சிருக்காரு. நியாயமா அனுவோட அம்மா, இதுக்கு சந்தோஷப்பட்டிருக்கணும். ஆனா, அவங்க அனுவை வேலைக்குப்போக சொல்லி வற்புறுத்த ஆரம்பிச்சிருக்காங்க. அனுவும் வேலைக்குப் போய், பழையபடி சம்பள பணத்தை அம்மாவோட அக்கவுன்ட்ல போட ஆரம்பிச்சிருக்காங்க. இதுல, சிக்கல் என்னன்னா அனு வேலைக்குப்போறதுல அவங்களோட கணவருக்கு விருப்பமில்ல. இதனால, தன் மனைவியைப்பத்தி அம்மா சொன்னதெல்லாம் உண்மைதான் போலன்னு அனுவோட கணவர், அவரோட அம்மாவை முழுசா நம்ப ஆரம்பிச்சிட்டார். இப்படியே ரெண்டு வருஷம் போயிருக்கு. இதுக்கிடையில அனுவோட அம்மாவும் மாமியாரும் போன்லயே சில பல சண்டைகளைப் போட்டு அனுவுக்கும் அவங்க கணவருக்கும் இடையில இருந்த பிளைவை பெருசாக்கிட்டே போயிருக்காங்க.
அடுத்த லீவு கிடைச்சு இந்தியாவுக்கு வந்திருக்கார் அனுவோட கணவர். வீட்டுக்கு வந்த சில நாள்கள்லயே தப்பு தன் மனைவி மேல இல்ல; அம்மாவும் தங்கச்சியும்தான் காரணம்னு புரிஞ்சிக்கிறார். தங்கச்சியை தனியா கூப்பிட்டு, 'உன்னை புருஷன் வீட்டுக்குப் போன்னு சொல்ல மாட்டேன். ஆனா, உன்னை மையமா வெச்சு இந்த வீட்ல பிரச்னை வராம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு'ன்னு சொல்லிட்டு, அனுவைப் பார்க்க மாமியார் வீட்டுக்கு வர்றார். ரெண்டு வருஷம் கழிச்சு மனைவியை ஆசை ஆசையா நெருங்க, அனு உறவுக்கு சம்மதிக்காமலே இருந்திருக்காங்க. கிட்டத்தட்ட ஒரு மாசம் பொறுத்துக்கிட்டவர், அதுக்கப்புறம் சென்னையில இருந்த ஒரு சொந்தக்காரங்க மூலமா என்னைப்பத்தி தெரிஞ்சுக்கிட்டு மனைவியோட என்னை சந்திக்க வந்தார். அவர்கிட்ட பேசியதன் மூலம், அவருடைய அம்மா பக்கம் இருந்த பிரச்னை தெளிவாக தெரிஞ்சுது. அடுத்து அனுவிடமும் தனியாகப் பேசினேன்.
'அப்பா இல்ல. அம்மா தனியா இருக்காங்க டாக்டர். அப்பா பெருசா எதுவும் சேர்த்து வெச்சுட்டுப் போகல. நான் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறதாலதான் அம்மா நிம்மதியா இருக்காங்க. நான் பாட்டுக்கு இவர்கூட போயிட்டா, எங்கம்மாவை யார் டாக்டர் பார்த்துக்குவாங்க' என்றார். கூடவே, அவங்க அம்மாவும் மாமியாரும் சண்டை போட்டதையெல்லாம் சொன்னாங்க. அதை வெச்சு பார்க்கிறப்போ, அனு அவங்க மாமியார் வீட்டுக்குப் போறதுல அவங்க அம்மாவுக்கும் விருப்பமில்லைங்கிறது புரிஞ்சிது. எல்லாம் இன்செக்யூரிட்டி பயம்தான். அதை மெல்ல மெல்ல அனுவுக்கு புரிய வெச்சேன். 'நான் எங்கம்மாவை ஊருக்கே கூட்டிட்டுப் போயிடுறேன் டாக்டர். அங்க வாடகை வீட்ல அம்மாவை குடிவெச்சிட்டு நானும் அங்கேயே ஏதாவது வேலைக்குப் போயிட்டா, அம்மாவையும் பார்த்துப்பேன். என் மேரிட் லைஃபையும் காப்பாத்திப்பேன்' என்றார், தெளிவாக. அதன்பிறகு, கணவன் மனைவி இருவரையும் ஒண்ணா உட்கார வெச்சு, 'தினமும் தாம்பத்திய உறவு வெச்சுக்கிட்டாலே குழந்தையின்மை பிரச்னை பெரும்பாலும் வராது'ன்னு சொல்லி அனுப்பினேன். கண்டிப்பா இப்போ அவங்க நல்லா தான் இருப்பாங்க'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...