மட்டை அரிசி சாதம், அதலக்காய் குழம்பு... கொட்டும் மழையிலும் அசத்திய சமையல் சூப்ப...
Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு வயிற்றுவலி, அஜீரணம்... புற்றுநோய் அறிகுறிகளாக மாறுமா?
Doctor Vikatan: என் உறவுக்கார பெண்ணுக்கு 60 வயதாகிறது. பத்து வருடங்களுக்கு முன்பே மெனோபாஸ் வந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாகவே அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி, வயிற்று உப்புசம், அஜீரணம் என வயிறு தொடர்பான பிரச்னைகள் இருந்தன. அதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டும் பலனில்லை. திடீரென ஒரு மருத்துவர் சொன்னதன் பேரில் புற்றுநோய் பரிசோதனை செய்து பார்த்தார். சினைப்பை புற்றுநோய் பாதித்திருந்தது தெரியவந்து, இப்போது சிகிச்சையில் இருக்கிறார். வயிற்றுவலியும், அஜீரணமும்கூட புற்றுநோய் அறிகுறிகளாக இருக்குமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
55 வயதைக் கடந்த பெண்களுக்கு வயிற்றுவலி, அஜீரணம், திடீரென மலச்சிக்கல் அல்லது திடீரென வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வரலாம். வயிற்று உப்புசம், எதைச் சாப்பிட்டாலும் ஏற்றுக்கொள்ளாதது போன்ற உணர்வு போன்றவையும் வரலாம். இந்த அறிகுறிகளை சாதாரண பிரச்னையாக நினைத்துக்கொண்டு, தண்ணீரில் வெந்தயம் போட்டுச் சாப்பிடுவது, சீரகத் தண்ணீர் குடிப்பது போன்ற கை வைத்தியங்களைச் செய்து கொண்டு அலட்சியமாக இருப்பார்கள். இவையெல்லாம் சினைப்பை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
சினைப்பை புற்றுநோயைப் பொறுத்தவரை, சம்பந்தமே இல்லாத இத்தகைய அறிகுறிகளைத்தான் அதிகம் பார்க்கிறோம். நோய் முற்றிய நிலையில் மருத்துவர்களிடம் வருவார்கள். மருத்துவர் தொட்டுப் பார்த்தே கட்டி இருப்பதை உறுதிசெய்து விடுவார். அப்படி கட்டி இருப்பது தெரிந்தால் உடனே ஸ்கேன் உள்ளிட்ட மற்ற பரிசோதனைகளைச் செய்து, அது புற்றுநோய்தானா என்பதை உறுதிசெய்யலாம். எனவே, பீரியட்ஸ் நின்றுவிட்ட பெண்களுக்கு தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு இது போன்ற அறிகுறிகள் இருந்தால் குடலில் ஏதோ பிரச்னை இருக்கலாம் அல்லது சினைப்பையில் பிரச்னைகள் இருக்கலாம் என எச்சரிக்கையாக வேண்டும்.
70 ப்ளஸ்ஸில் சில பெண்கள் கை வலிப்பதாகச் சொல்லிக்கொண்டும் மருத்துவரிடம் வருகிறார்கள். அவர்களைப் பரிசோதித்தால் மார்பில் கட்டி இருப்பது தெரியவரும். அதுவும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கக்கூடும். பயாப்சி செய்துதான் அதை உறுதிசெய்ய வேண்டியிருக்கும். ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகினால் ஒருவேளை அவர்களுக்கு புற்றுநோய் தாக்கியிருக்கும் பட்சத்தில் ஸ்டேஜ் 1 நிலையிலேயே அதைக் குணப்படுத்திவிட முடியும். அடுத்தடுத்த ஸ்டேஜுக்கு போனால், அதற்கான சிகிச்சையும் சிக்கலாகும், செலவும் அதிகமாகும். அதிக நாள்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும். ஆரம்ப நிலை சிகிச்சையில், பக்க விளைவுகள் உள்ள ரேடியோதெரபி, கீமோதெரபி போன்றவற்றிலிருந்தும் தப்பிக்கலாம்.
எனவே, வயிற்றுவலி, தலைவலி, அஜீரணம் என எந்த அறிகுறியும் நாள்கணக்கில் நீடித்தால் அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.