'தகுதிச்சான்றிதழ் பெற ரூ.20 லட்சம் லஞ்சம்' - பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் சஸ்...
Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஆப்பிளை தோலுடன் கொடுக்கலாமா? அதனால் பாதிப்பு வருமா?
Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஆப்பிள் கொடுக்கும்போது தோலுடன் கொடுப்பது சரியா, ஏனெனில் இப்போது வரும் ஆப்பிள்கள் மெழுகு பூச்சுடன் வருகின்றன. அதனால் ஏதேனும் பாதிப்பு வருமா, எந்தெந்தப் பழங்களை குழந்தைகளுக்கு எப்படிக் கொடுக்கலாம்? -sivashanmugarajan, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆப்பிள் கொடுக்கலாம். அதை தோல் நீக்கி, ஆவியில் வேகவைத்து, மசித்துக் கொடுப்பதுதான் சரியானது. இன்னும் சொல்லப் போனால், ஒன்பது மாதங்கள் தாண்டிய குழந்தைகளுக்கும் தோலுடன் ஆப்பிள் கொடுக்கும்போது, அது தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. எனவே, தோல் நீக்கிக் கொடுப்பதுதான் சரியானது.
ஆப்பிள் தோலில் மெழுகுப் பூச்சு இருப்பதால், அதை குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா, கூடாதா என்ற சந்தேகம் பெரும்பாலான பெற்றோருக்கும் இருக்கிறது. இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களில்தான் பெரும்பாலும் இப்படி மெழுகுப் பூச்சு இருப்பதைப் பார்க்கிறோம்.
FSSAI மற்றும் FDA போன்ற உணவுப் பாதுகாப்பு அமைப்புகளின் விதிகளின்படி, சில வகையான மெழுகுகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், ஆப்பிள்களின் மேல்பூச்சில் பயன்படுத்தப்படும் மெழுகு எப்படிப்பட்டது, அரசால் அனுமதிக்கப்பட்டதா என்பது சாதாரண மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சில நேரங்களில் ஆப்பிள்களில் உரங்களின் எச்சமும் இருக்கலாம். எனவே, குழந்தைகளுக்கு ஆப்பிள் கொடுக்கும்போது முதலில் அவற்றை நன்கு கழுவிவிட வேண்டும். இரண்டு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து அதில் ஆப்பிளைக் கழுவுவது நல்லது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
வெதுவெதுப்பான நீரில் கழுவினாலும் ஆப்பிளின் மேலுள்ள மெழுகுப் பூச்சு நீங்கிவிடும். உள்ளூரில் கிடைக்கும் புது (ஃப்ரெஷ்) ஆப்பிள்கள் என்றால், இந்த மெழுகுப் பூச்சு கவலை இல்லாமல் தோலுடன் அப்படியே பயன்படுத்தலாம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட புது ஆப்பிள் என்று தெரிந்தால் மட்டுமே அப்படிப் பயன்படுத்தலாம். தோலில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியத்துக்கு மிக நல்லது.
ஆறு மாதங்களிலிருந்து குழந்தைகளுக்கு வாழைப்பழமும் கொடுக்கலாம். எல்லா வகையான வாழைப்பழங்களையும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
நேந்திரம்பழம் மட்டும் சற்று கடினமாக இருக்கும் என்பதால், அதை வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். விதையுள்ள திராட்சை, தர்பூசணி போன்ற பழங்களை விதைகளை நீக்கி மசித்துதான் கொடுக்க வேண்டும்.
அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களைக் கொடுத்தாலே போதுமான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். விலை உயர்ந்த வெளிநாட்டு பழங்களைத் தேடிப் போக வேண்டியதில்லை.

ஏழாவது மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 50 முதல் 60 கிராம் அளவுக்குப் பழங்கள் கொடுக்கலாம். ஒரு வயதுக்குப் பிறகு 75 கிராம் அளவு கொடுக்கலாம்.
ஏழு முதல் பதினைந்து வயது வரை தினமும் 100 கிராம் அளவு பழங்கள் கொடுக்கலாம். பதினாறு முதல் பதினெட்டு வயதில் 150 கிராம் கொடுக்கலாம். ஜூஸாகக் கொடுப்பதால் நார்ச்சத்து உடலில் சேராது என்பதால், பழங்களாகக் கொடுப்பதுதான் சிறந்தது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

















