பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!
Emakku Thozhil Romance Review: `அரைச்ச மாவ அரைப்போமோ' - பார்த்த கதை; பழகிய திரைக்கதை; படம் எப்படி?
சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் உமாபதி (அசோக் செல்வன்), தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் லியோவைக் (அவந்திகா) கண்டதும் காதல் வயப்படுகிறார். இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகி அந்தக் காதலில் எதிர்பாராத விதமாக சில பிரச்னைகள் வர, அதை எப்படி உமாபதி சமாளித்தார் எனும் புளித்துப்போன கதையே, அரைத்து அரைத்து சலித்துப் போன திரைக்கதையாக்கினால் அதுதான் எமக்குத் தொழில் ரொமான்ஸ்.
உமாபதியாக அசோக் செல்வன், மெனக்கெடாமல் ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இந்த படம் சில வருடங்களுக்கு முன்னால் எடுத்த படம் என்பது அவரது நடிப்பிலேயே நன்றாகத் தெரிகிறது. அவருடைய சமீபத்திய படங்களில் அவர் நடிப்பை கையாளும் விதத்தில் இருந்து இது ரொம்பவே பின்தங்கி இருக்கிறது. லியோவாக அவந்திகா, எமோஷன்களை நன்கு வெளிப்படுத்தினாலும் லிப்சிங்கில் கோட்டை விட்டிருக்கிறார். `பம்மல் கே சம்பந்தம்' படத்தில் கமல்ஹாசன் பபுள்கம்மை மெல்லும் காமெடி போல், படம் முழுக்க பபுள்கம்மை மென்று கொண்டே இருக்கிறார்.
அசோக் செல்வனுக்கு அப்பாவாக அழகம்பெருமாள் வழக்கமான கோபக்கார அப்பா பாத்திரத்துக்கு தன் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி வழக்கம் போல ரகளை செய்திருக்கிறார். அழகம் பெருமாள் - ஊர்வசியின் காம்போ ரசிக்க வைக்கிறது. குறிப்பாக ஊர்வசியின் டிரேட் மார்க் காட்சிகள் படத்தில் ஆங்காங்கே வருவது சற்றே ஆறுதல். அசோக் செல்வனுக்கு நண்பர்களாக வரும் விஜய் வரதராஜும், பக்ஸும் சிரிக்க வைக்க கொஞ்சமாகவே முயற்சி செய்கிறார்கள். இவர்கள் தவிர படத்தில் பல டி.வி. முகங்களும் சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர் பாலாஜி தரணிதரனும் நடித்திருக்கிறார்கள்.
இயக்குநர் பாலாஜி கேசவன் எப்படி இந்த மாதிரியான ஒரு பழைய கதையை 2கே கிட்ஸுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தார் என்றே தெரியவில்லை. கதையாகவும் சரி, திரைக்கதையில் வரும் ட்விஸ்ட்களாக இருந்தாலும் சரி எல்லாமே நாம் பார்த்து பழகிய அதே டெம்ப்ளேட்டில் இருக்கிறது.
இயக்குநரே காப்பாற்றத் தவறிய இந்த படத்தை ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவாலும், எடிட்டர் ஜெரோம் ஆலனாலும் மட்டும் காப்பாற்றவா முடியும். அவர்களும் அவர்கள் பங்கிற்கு அவர்களின் வேலையை செய்திருக்கிறார்கள். அவ்வளவே. நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கும் அளவிற்கு இல்லை.
சில வருடங்களுக்கு முன்னால் எடுத்த படமாக இருந்தாலும், கதையாக பழைய கதையாக இருந்தாலும் திரைக்கதையில் சற்று சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம். ஹீரோவைத் தவறாகப் புரிந்து கொண்டு சந்தேகப்படும் ஹீரோயின், அதை சமாளிக்க பொய்களாக சொல்லும் ஹீரோ, அவருக்கு உதவும் நண்பர்கள் என வழக்கமான ட்விஸ்ட்களாக இருப்பதால் படம் கொஞ்சம் கூட ஒர்க் ஆகவில்லை. நித்தம் ஒரு வானம், போர் தொழில், ப்ளூ ஸ்டார் என வேகமாக ஏறிக் கொண்டிருக்கும் அசோக் செல்வனின் கரியருக்கு இந்த படம் ஒரு பெரிய ஸ்பீடு பிரேக்கர்.
எமக்குத் தொழில் ரொமான்ஸ் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.